கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் வெள்ளிக்கிழமை முதல் தமிழ்ப்படங்கள் வெளிவராது: விஷால் அறிவிப்பு

ஒட்டு மொத்தமாக மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பதா என்பது குறித்து...
கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் வெள்ளிக்கிழமை முதல் தமிழ்ப்படங்கள் வெளிவராது: விஷால் அறிவிப்பு

தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த செப். 27-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு திரையுலகின் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஐநாக்ஸ், பி.வி.ஆர். மூடல்: இந்நிலையில், இந்த வரி விதிப்பை எதிர்த்து ஐநாக்ஸ், பி.வி.ஆர். நிறுவனங்கள் தங்களின் கீழ் இயங்கி வரும் மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளை செவ்வாய்க்கிழமை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கேளிக்கை வரி விதித்துள்ள மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தம் தொடரும் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இயங்கி வரும் ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர். மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை செயல்படவில்லை.

இந்நிலையில் விஷால் தலைமையில் இயங்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 

தமிழ்ப் படங்களுக்குக் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திரையரங்கு நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்பையும் குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும். 

தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கிடவேண்டும், திரையரங்குக் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். எனவே வருகிற வெள்ளிக்கிழமை முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து தமிழ் திரை அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை முடிவு எடுக்கவுள்ளன. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஃபிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டுக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் திரையரங்குகளின் கட்டணத்தை உயர்த்துவதா? இல்லை திரையரங்குகளை ஒட்டு மொத்தமாக மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com