கங்கனா ரனாவத்தைத் தனியாகச் சந்தித்ததே இல்லை: மெளனத்தைக் கலைத்தார் ஹிருத்திக் ரோஷன்!

எங்கள் இருவருக்குமான காதல் உறவை வெளிப்படுத்தக்கூடிய எவ்வித ஆதாரமும் இல்லை...
கங்கனா ரனாவத்தைத் தனியாகச் சந்தித்ததே இல்லை: மெளனத்தைக் கலைத்தார் ஹிருத்திக் ரோஷன்!

இருவரும் ஒன்றாகப் படங்களில் நடித்திருந்தாலும் நடிகை கங்கனா ரனாவத்தைத் தனியாகச் சந்தித்ததில்லை என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார். 

காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக் - கங்கனா தொடர்ந்து இன்றுவரை மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 2000-ம் ஆண்டில் ஹிருத்திக் ரோஷனும் சுசன்னேவும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பிறகு கருத்துவேறுபாடு காரணமாக 2013-ல் பிரிந்தார்கள். மே 2014-ல் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். அடுத்தச் சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. கங்கனா ரனாவத்துடன் காதலில் இருந்ததால்தான் இந்த மணமுறிவு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இருவரும் கைட்ஸ், கிரிஸ் 3 என இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

இதற்குப் பிறகு ஹிருத்திக் - கங்கனா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிய நேர்ந்தது. கங்கனா, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், முன்னால் காதலர் ஏன் முட்டாள்தனமான காரியங்களைச் (silly ex) செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். பெயர் குறிப்பிடாவிட்டாலும் ஹிருத்திக்கைத்தான் குறிப்பிடுகிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆசிக் 3 படத்தில் கங்கனா நடிப்பதாக இருந்தது. ஆனால், ஹிருத்திக் தலையிட்டு கங்கனாவைப் படத்திலிருந்து நீக்கினார் என்று செய்திகள் வந்தன. இது தொடர்பாக கங்கனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குத்தான் அவர் அதுபோல கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்த ஹிருத்திக் ரோஷன், நான் போப்புடன் பழக சாத்தியமுள்ளதே தவிர ஊடகங்கள் சொல்கிற நடிகையைக் காதலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து திடீரென கங்கனாவுக்கு 5 பக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ஹிருத்திக். கங்கனாவின் பேட்டி தன் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், இருவரும் காதலர்களாக இருந்ததுபோல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் நடித்தது தவிர இருவருக்குமிடையே வேறு எந்தப் பழக்கமும் கிடையாது. எனவே அந்தப் பேட்டிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலாக கங்கனாவும் 22 பக்க வக்கீல் நோட்டிஸை ஹிருத்திக்குக்கு அனுப்பினார். கங்கனா ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். சில்லி எக்ஸ் என்று சொன்னதை ஏன் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னதாக நினைக்கவேண்டும்? இருவருக்கும் தொழில் ரீதியாக மட்டுமே பழக்கம் என்று ஹிருத்திக் கூறியுள்ளார். ஆனால் ஹிருத்திக்கின் சகோதரியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கங்கனா வருகை புரிந்துள்ளார். கங்கனாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் ஹிருத்திக் குடும்பத்துடன் வந்துள்ளார். பொது இடங்களில் நடந்த சம்பவங்கள் இவை. இருவருக்குமிடையே உள்ள பழக்கத்தை கங்கனா வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்று பதில் வக்கீல் நோட்டீஸில் வாதங்கள் செய்துள்ளார் கங்கனா.

இதற்குப் பதிலடியாக, கங்கனா தனக்கு 1439 மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் ஹிருத்திக். ஆரம்பத்தில் தான் என்று நினைத்து வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த விவரம் தெரிந்தபிறகு, என்னுடைய அசல் மின்னஞ்சல் முகவரிக்குத் தினமும் ஏராளமான மின்னஞ்சல்களை அனுப்பினார் என்று கூறினார் ஹிருத்திக்.

கங்கனாவும் பதிலுக்கு, ஹிருத்திக் தன்னுடைய மின்னஞ்சலைத் திறந்து இருவருக்குமிடையேயான உரையாடல்களை நீக்கியுள்ளார். அந்த உரையாடல்கள் அவருடைய விவாகரத்துக்கு முன்பு ஏற்பட்டவை. எனவே அந்த மின்னஞ்சல்கள் விவாகரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திருட்டுத்தனமாக என் மின்னஞ்சலைத் திறந்து இருவருடைய உரையாடல்களையும் நீக்கியுள்ளார் என்று பரபரப்பாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பேசுவதற்காகவே புதிய மின்னஞ்சலை அவர் உருவாக்கினார். அதிலிருந்துதான் இருவரும் பேசினோம் என்றும் கூறினார். 

இரு தரப்பினரும் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிற சூழலில், இந்த விவகாரம் குறித்து மெளனம் காத்து வந்த ஹிருத்திக் ரோஷன் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

சம்பந்தப்பட்ட பெண்ணை என் வாழ்நாளில் தனியாகச் சந்தித்ததில்லை. ஆமாம். இருவரும் ஒன்றாகப் படங்களில் பணியாற்றியுள்ளோம். ஆனால் தனிச் சந்திப்பு நிகழ்ந்தது இல்லை. அதுதான் உண்மை. இருவருக்கும் இடையேயான காதல் உறவை எதிர்த்து நான் போராடவில்லை. அதைவிடவும் தீவிரமான, ஆபத்தான ஒன்றிலிருந்து என்னைக் காத்துக்கொள்வதற்காகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.  இரு பாலிவுட் பிரபலங்கள் எந்த ஓர் ஆதாரமும் இன்றி எப்படி உறவு ஏற்படுத்திக்கொண்டிருக்க முடியும்? எங்களுக்குள் உறவு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் இல்லை. எங்களை நேரில் பார்த்தவர்களும் இல்லை. ஜனவரி 2014-ல் பாரிஸில் நடந்ததாகச் சொல்லப்படும் நிச்சயதார்த்த நிகழ்வு செல்ஃபியும் இல்லை. எங்கள் இருவருக்குமான காதல் உறவை வெளிப்படுத்தக்கூடிய எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனாலும் மற்றவர் சொல்வதை நாம் நம்பவேண்டும்.

2014-ல் பாரிஸில் எங்கள் இருவருக்குமிடையே நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் மாதத்தில் நான் எந்தவொரு வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்கிறது என்னுடைய கடவுச்சீட்டு. அங்கு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படம் போலியானது என்று அடுத்த நாளே என்னுடைய நண்பர்களாலும் என்னுடைய முன்னாள் மனைவியாலும் எடுத்துரைக்கப்பட்டது. 

3000 மின்ஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதை நானும் அனுப்பவில்லை. அவரும் அனுப்பவில்லை. இன்னும் சில நாள்களில் சைபர் கிரைம் காவல்துறையினர் இதை நிரூபிப்பார்கள். அந்த விசாரணைக்காக நான் என்னுடைய போன்கள், லேப்டாப்கள் என அனைத்தையும் அவர்களிடம் வழங்கியுள்ளேன். ஆனால் அந்தப் பெண் இன்னும் அவற்றைக் காவல்துறைக்கு வழங்கவில்லை. 

இது இரு காதலர்களிடையே நடக்கும் சண்டை அல்ல. அப்படி முத்திரை குத்தவேண்டாம். அதற்குப் பதிலாக உண்மை என்ன என்பதைக் கண்டறியுங்கள். 

இந்த விவகாரத்தால் கடந்த நான்கு வருடங்களாகத் துன்புறுத்தப்பட்டுள்ளேன். பெண் மீதான சமூகத்தின் சார்பு நிலை என்னைத் தற்காத்துக் கொள்ள முடியாமல் செய்தது. 

இங்கு யார் மீதும் குற்றம் சுமத்தவோ மதிப்பீடு செய்யவோ இங்கு நான் இல்லை. உண்மையைத் தற்காத்துக்கொள்கிறேன். ஏனெனில் உண்மை பாதிக்கப்படும்போது சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வும் பாதிக்கப்படுகிறது. என் வீட்டு உறுப்பினர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்று தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com