கல்லூரி நிகழ்ச்சியில் ஜூலியைப் பேசவிடாமல் செய்த ஓவியா ரசிகர்கள்! (வீடியோ)

எனக்கு அமைதி கிடைக்குமா என்று மாணவர்களிடம் ஜூலி வேண்டுகோள் விடுத்தார்...
கல்லூரி நிகழ்ச்சியில் ஜூலியைப் பேசவிடாமல் செய்த ஓவியா ரசிகர்கள்! (வீடியோ)

சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் ஜூலி கலந்துகொண்டார். அப்போது, ஓவியாவின் ரசிகர்கள் ஜூலியைப் பேசவிடாமல் செய்த சம்பவமும் அதன் வீடியோவும் இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. 

கல்லூரி நிகழ்ச்சியில் முதலில் நடனமாடிய ஜூலி பிறகு மாணவர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது கல்லூரி மாணவர்கள் ஒருபிரிவினர், ஓவியாவின் பெயரைக் கோஷமிட்டு ஜூலியைப் பேசவிடாமல் செய்தார்கள். இத்தனைக்கும் தன்னுடைய உரையை மாணவர்களுக்கு ஆதரவாகவே ஆரம்பித்தார் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் எனக்குப் பிடித்ததே, மாணவர்களை முன் வரிசையில் உட்காரவைத்துவிட்டு ஆசிரியர்களைப் பின்வரிசையில் உட்கார வைத்ததுதான் என்றபடி தன்னுடைய பேச்சை ஜூலி தொடங்கியபோது, ஓவியாவின் பெயரை மாணவர்கள் உரக்கக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

இதனால் சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜூலி, எனக்கு அமைதி கிடைக்குமா என்று மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் மாணவர்கள் ஓவியாவின் பெயரை விடாமல் கூறியதால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இடைமறித்து, ஜூலிக்கு நன்றி தெரிவித்து அவரை மேடையிலிருந்து கீழே இறக்கினார். இந்தச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

(நன்றி - nba 24x7)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. தொடக்க விழாவின்போது, இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் புதிய குடும்ப உறுப்பினர்களைப் பெறப்போகிறேன் என்று நட்புணர்வுடன் பதில் அளித்து கமலிடம் பாராட்டுப் பெற்றார் ஜூலி.

ஆரம்பம் முதல், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஜூலி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தலைவர்களை விமரிசித்தது ஏன் என ஜூலியிடம் காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் கேள்வி எழுப்பி நெருக்கடி அளித்தது நிகழ்ச்சியில் பரபரப்பை உண்டாக்கியது.

நிகழ்ச்சியில் பல சந்தர்ப்பங்களில் - தான் ஒரு சாதாரண பெண், மற்ற போட்டியாளர்களைப் போல எந்த சினிமா பின்புலமும் இல்லாதவள், இதனால் நான் ஜெயித்துவிடுவேன் என மற்றவர்கள் நினைக்கிறார்கள் எனப் பேசினார் ஜூலி. ஆனால், அந்நிகழ்ச்சியில் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com