சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 15, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...
சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் 10 சதவீத கேளிக்கை வரி விதிப்புப் பிரச்னை காரணமாக நேற்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கும் வரை இந்த முடிவில் மாற்றமில்லை என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை (அக்.6) வெளியாக வேண்டிய 'விழித்திரு', 'உறுதி கொள்' உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகவில்லை.

எனினும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. கடந்த வாரங்களில் வெளியான படங்களே, இந்த வாரமும் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. 

தமிழகத்தில் ஐநாக்ஸ், பி.வி.ஆர் ஆகிய இரு மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகள் அனைத்திலும் படங்கள் திரையிடப்பட்டன. சென்னை, திருச்சி, கோவை நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வழக்கம் போல் இணையதள டிக்கெட் விற்பனையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே, கேளிக்கை வரி குறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து பேச திரையுலக அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 15, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரூ. 120 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 150 ஆகவும், ரூ. 95 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80 ஆகவும், ரூ. 85 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30 ஆகவும், ரூ.10 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி, தற்போது உள்ள கட்டணத்தில் 25 சதவீதம் வரை  உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com