திரையரங்கு கேளிக்கை வரி 8 சதவீதமாகக் குறைப்பு

தமிழகத்தில் திரையரங்க நுழைவுச் சீட்டு மீதான கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், சென்னை திரையங்க உரிமையாளர்கள் சங
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், சென்னை திரையங்க உரிமையாளர்கள் சங

தமிழகத்தில் திரையரங்க நுழைவுச் சீட்டு மீதான கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வருடன் சந்திப்பு: கேளிக்கை வரியைக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு விஷால் அளித்த பேட்டி: திரையரங்க நுழைவுச் சீட்டு மீது
விதிக்கப்பட்டிருந்த கட்டணங்களை தமிழக அரசு திருத்தி அமைத்துள்ளது. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100 ஆகவும், குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.80-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 36 சதவீத வரி: திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும் அடிப்படைக் கட்டணங்கள் ஆகும். திரையரங்க நுழைவுச் சீட்டு கட்டணம் மீது 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்கிறது; முதலில் 30 சதவீதமாக இருந்த தமிழக அரசின் கேளிக்கை வரி, அண்மையில் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது; அது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, திரையரங்கு நுழைவுச் சீட்டு மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 28 சதவீதம், கேளிக்கை வரி 8 சதவீதம் என மொத்தம் 36 சதவீத வரி விதிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் இந்தக் கட்டண விகிதம்தான் நடைமுறைப்படுத்தப்படும். அதிகமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியர், காவல் நிலையங்கள், தயாரிப்பாளர் சங்கங்களிடம் உள்ள எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
திரைப்படங்களுக்கு ஏற்கெனவே குறைக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரி எங்களது கோரிக்கையைத் தொடர்ந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதர மொழிப் படங்களுக்கான கேளிக்கை வரி 20 சதவீதமாக இருக்கும். விதிமுறைகளைத் தாண்டி யாரும் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்பதை அரசுடன் சேர்ந்து நாங்களும் கண்காணிப்போம்.
வாகன நிறுத்தக் கட்டணம்: ஒவ்வொரு திரையரங்கிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதைத் தெரிவிப்பதற்காக சி படிவம் கொடுக்கப்படும். அதில் கட்டண விதிகங்கள் தெரிவிக்கப்படும்.
அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஜனவரி 1 முதல் அதிகபட்ச சில்லறை விலை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு பாட்டில் தண்ணீரின் விலை 10 ரூபாய் என்றால் அந்த விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும்.
ஆன்லைன் கட்டணம் குறைக்கப்படுமா? திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களும் கூடுதல் விலை கொடுத்து எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். அது குறித்தும் புகார் தெரிவிக்கலாம். ஆன்-லைன் முன்பதிவுக்கு கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த கட்டணத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
தீபாவளி பண்டிகைக்காக மெர்சல் உள்பட இரண்டு புதிய படங்கள் வெளியாகவுள்ளன. புதுப்படங்களை வெளியிட விதிக்கப்பட்ட தடை என்பது அரசுக்கு எதிரானது அல்ல. எங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கவே இந்த நடவடிக்கையை எடுத்தோம்.

"திரையரங்குகளில் அம்மா குடிநீர்'

திரையரங்குகளில் தமிழக அரசின் அம்மா குடிநீர் பாட்டீல்களை விற்பனை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ள விலைக்கே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். திரையரங்குகளில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும்.
பொதுமக்களை தண்ணீர் பாட்டில்களை கொண்டுவர திரையரங்குகள் அனுமதி அளிக்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இனி ஆன்லைன் கட்டணம் வசூலிப்பதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை முதல் தமிழக அரசு நிர்ணயித்து, 
அறிவித்துள்ள கட்டணத்தை மட்டுமே திரையரங்குகளில் வசூலிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது தமிழக அரசிடம் உடனடியாகப் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com