தணிக்கைச் சான்றிதழ் பெறாமலேயே தொடங்கப்பட்டுள்ள ‘மெர்சல்’ முன்பதிவு!

தணிக்கைச் சான்றிதழ் பெறாத ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க மாட்டார்கள். ஆனால்...
தணிக்கைச் சான்றிதழ் பெறாமலேயே தொடங்கப்பட்டுள்ள ‘மெர்சல்’ முன்பதிவு!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மெர்சல் படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. 

திரைப்படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று அச்சான்றிதழ் இணைத்துதான் தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கமுடியும். இந்நிலையில் அக்டோபர் 6 அன்று மெர்சல் படம் யு/எ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளதாக இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

ஆனால், மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது தணிக்கை வாரியம். மெர்சல் படத்தின் தணிக்கைச் சான்று வழங்கப்பட்டது குறித்து விலங்குகள் நல வாரியம் விளக்கம் கேட்டதையடுத்து இந்தத் தகவலை அளித்துள்ளது தணிக்கை வாரியம்.

மெர்சல் படத்தில் புறாக்கள் பறப்பது கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை. மேலும் ராஜநாகத்தின் பெயரை நாகப்பாம்பு எனப் பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் அக்டோபர் 11 அன்று நடந்த துணைக்குழுக் கூட்டத்தில் மெர்சல் படத்துக்கு விலங்கு நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை. இந்தச் சான்றிதழ் தந்த பிறகே தணிக்கைக் குழுவுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே மெர்சல் படத்துக்குச் சான்றிதழ் வழங்கியது எப்படி என தணிக்கைச் சான்றிதழ் குறித்து விலங்குகள் நல வாரியம், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளதாக 6-ம் தேதியே அட்லி அறிவித்த நிலையில் தணிக்கை வாரியத்தின் இந்தத் தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் குழப்பத்தால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கான முன்பதிவு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. புக்மைஷோ இணையத்தளத்தில் மெர்சல் படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்ததால் புக்மைஷோ இணையத்தளத்தில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் மெர்சல் முதல் இடத்தையும் பிடித்தது. 

பொதுவாக, தணிக்கைச் சான்றிதழ் பெறாத ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க மாட்டார்கள். ஆனால் இன்னமும் தணிக்கைச் சான்றிதழ் பெறாத நிலையில், மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பான விளம்பரங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுதவிர, தணிக்கைச் சான்றிதழ் இல்லாமலேயே இப்படத்தின் முன்பதிவும் ஆரம்பமாகியிருப்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com