பெங்களூரு, மைசூரில் தமிழ் திரைப்பட பதாகைகள் கிழிப்பு

பெங்களூரில் திரையரங்கு முன் ஏற்பட்ட வாகன போக்குவரத்து தகராறை செல்லிடப்பேசியில் பதிவு செய்து, தமிழ்த் திரைப்பட பதாகை அமைப்பதை ஒழுங்குபடுத்துமாறு கூறிய கன்னடரை தமிழர்கள்
பெங்களூரு, மைசூரில் தமிழ் திரைப்பட பதாகைகள் கிழிப்பு

பெங்களூரில் திரையரங்கு முன் ஏற்பட்ட வாகன போக்குவரத்து தகராறை செல்லிடப்பேசியில் பதிவு செய்து, தமிழ்த் திரைப்பட பதாகை அமைப்பதை ஒழுங்குபடுத்துமாறு கூறிய கன்னடரை தமிழர்கள் அடித்துவிட்டதாக தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்ட காணொலி, ஒலிபரப்பப்பட்டதால் கர்நாடகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரு, மைசூரில் நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது. தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள சம்பிகே சாலையின் நுழைவுப் பகுதியில் மந்த்ரிமால் வணிக வளாகம் எதிரே புதன்கிழமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநருக்கும், மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தாக்கப்பட்டார்.
தொலைக்காட்சிக்கு தகவல்
அப்போது, சம்பிகே திரையரங்கு முன் நடிகர் விஜய் நடித்து வெளியான "மெர்சல்' திரைப்படத்துக்காக பதாகைகளை வைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள், தகராறில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கொண்டிருந்தனர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், தனது செல்லிடப்பேசியில் தகராறை படம் பிடித்து, அதில் திரைப்பட பதாகையை ஒழுங்குபடுத்துமாறு கூறியதால், கன்னடர் ஒருவரை தமிழர்கள் தாக்குவதாக பதிவு செய்து "பிரஜா' கன்னடத் தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தார். இக் காட்சி மாநிலம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. 

கன்னடர்கள் ஆத்திரம்

கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் சா.ரா.கோவிந்து, கர்நாடக ரக்ஷனவேதிகே (ஷெட்டி அணி) தலைவர்பிரவீண் ஷெட்டி, கன்னட சேனை அமைப்புத் தலைவர் சிவராமே கெளடா உள்ளிட்ட 50-க்கும் அதிகமானோர் சம்பிகே திரையரங்கம் முன் புதன்கிழமை காலை 11 மணிக்குத் திரண்டு, தமிழ் திரைப்படங்கள், தமிழர்கள், நடிகர் விஜய் ரசிகர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். 
சம்பிகே திரையரங்கம் முன் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பிரமாண்டமான ஐந்து கட்-அவுட்களை அடித்து நொறுக்கினர். மேலும், திரையரங்கம் சுற்றியிலும் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர். 

தமிழர்களுக்கு எச்சரிக்கை

அப்போது, பிரவீண் ஷெட்டி கூறுகையில்,"கர்நாடகத்தில் இருந்து கொண்டு கன்னடர் மீது தமிழர்கள் குறிப்பாக நடிகர் விஜய் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதை சகித்துக் கொள்ளமுடியாது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், அடக்கத்தோடு இருக்க வேண்டும். தமிழ்த் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது. இதுபோல மீண்டும் நடந்தால், 1991-இல் நடைபெற்ற காவிரி கலவரத்தை போல மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் என்றார்.
வாட்டாள் நாகராஜ் கூறுகையில், "கர்நாடகத்தில் கன்னட திரைப்படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தமிழ்த் திரைப்படங்களை திரையிடக் கூடாது. கன்னட திரைப்படத்தின் முக்கியத்துவம் குறைக்கும் எதையும் சகித்துக் கொள்ள இயலாது என்றார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

இதனிடையே, புதன்கிழமை காலை 11 மணிக்கு "மெர்சல்' திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் கன்னட அமைப்பினர் பாதியிலேயே வெளியே அனுப்பினர். இதனால், பொதுமக்கள், விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை முழுமையாக பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து, ஆர்.டி.நகரில் உள்ள ராதாகிருஷ்ணா, பானசவாடியில் உள்ள முகுந்தா, ஓரியன்,மந்த்ரிமால், மைசூரில் உள்ள சங்கம் திரையரங்குகளில் புகுந்த கன்னட அமைப்பினர், அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பதாகைகளை கிழித்தெறிந்தனர். மேலும் சுவரொட்டிகளையும் அப்புறப்படுத்தினர். திரையரங்குகளில் நுழைந்த கன்னட அமைப்பினர், அங்கு "மெர்சல்' திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், விஜய் ரசிகர்களை வெளியேற்றினர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது, அவர்களை கடுமையாக மிரட்டி வெளியேற்றினர். 

திரைப்படக் காட்சி ரத்து

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரின் சம்பிகே, முகுந்த், ராதாகிருஷ்ணா, மைசூரின் சங்கம் திரையரங்கங்களில் புதன்கிழமை அன்று 'மெர்சல்' படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 
இதுகுறித்து கர்நாடக மாநில விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ராஜா கூறுகையில், ஆட்டோ மற்றும் பைக் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்றதை தவறாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர்.
திரையரங்குகளில் புகுந்து கன்னட அமைப்புகள் நடத்திய வன்முறையை அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றார் அவர். 

திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

பெங்களூரில் உள்ள சம்பிகே, முகுந்தா, ராதாகிருஷ்ணா, ஓரியன்,மந்த்ரிமால், மைசூரில் சங்கம் உள்பட "மெர்சல்' மற்றும் இதர தமிழ் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான சூழல் நிலவியதால் வியாழக்கிழமை திரைப்படத்தை காண குறைந்த எண்ணிக்கையிலே மக்கள் வந்திருந்தனர்.

போலீஸார் விசாரணை 

இந்த சம்பவம் குறித்து மல்லேஸ்வரம் போலீஸார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பிகே சாலையில் ஆட்டோ மீது பைக் மோதியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. இச் சம்பவத்திற்கும் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும் தொடர்பில்லை. கன்னடரைத் தமிழர் அடித்துவிட்டதாகக் கூறுவதும் உண்மையில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com