அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் தினமும் இசைக்கப்பட வேண்டும்: அரவிந்த் சாமி கோரிக்கை

தேசிய கீதம் இசைக்கப்படும்போது நான் எப்போதும் மிகப் பெருமிதத்துடன் எழுந்து நின்று மரியாதை அளிப்பேன்...
அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் தினமும் இசைக்கப்பட வேண்டும்: அரவிந்த் சாமி கோரிக்கை

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

தேசிய கீதம் இசைக்கப்படும்போது நான் எப்போதும் மிகப் பெருமிதத்துடன் எழுந்து நின்று மரியாதை அளிப்பேன். அப்பாடலைக் கூட சேர்ந்து பாடுவேன். தேசிய கீதம் திரையரங்குகளுக்கு மட்டும் ஏன் கட்டாயமாக்கப்பட்டது என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தினமும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஏன் கூறப்படவில்லை? அதேபோல சட்டசபை மற்றும் பாராளுமன்றம் ஆரம்பிக்கும் முன்பும்.. என தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.    

உச்ச நீதிமன்றத்தில் ஷியாம் நாராயண் சௌக்சி என்பவர் தொடுத்த பொது நல மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த தீர்ப்பில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும், அப்போது திரையரங்குகளில் இருப்போர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில், "இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு; இந்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தேசிய கீதத்தை இசைக்க வேண்டியது அவசியம். எனினும், திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமா? அப்போது மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்பதை மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் விட்டுவிட வேண்டும்' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "இதுகுறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம். இதில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு தயக்கம் காட்டக் கூடாது' என்றனர்.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

திரையரங்குகளுக்கு மக்கள் பொழுது போக்குக்காகவே செல்கின்றனர். மக்களுக்கு பொழுது போக்கு அவசியமாகும். விருப்பம் என்பது ஒன்று. ஆனால், அதை கட்டாயமாக்குவது என்பது வேறு. மக்களால் தங்களது தேசப்பற்றை மேல்சட்டையின் கைவிளிம்புகளில் வைத்து கொண்டு செல்ல முடியாது. நாட்டு மக்களிடையே தேசப்பற்றை உத்தரவுகள் மூலம் நீதிமன்றங்கள் கற்பிக்க முடியாது. திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காதோருக்கு தேசப்பற்று குறைவாக இருக்கிறது என்று கருத முடியாது. நாட்டு மக்களுக்கு ஒழுக்கம் குறித்த கொள்கையை போதிக்க வேண்டியதில்லை. ஏனெனில், அடுத்த முறை, நீங்கள் (மத்திய அரசு) திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது, டி-ஷர்ட்டுகள், பாதி கால்சட்டைகளை மக்கள் அணிந்து கொண்டு நிற்பது, தேசியகீதத்துக்கு இழைக்கும் அவமரியாதை என தெரிவிக்க விரும்பலாம். நாட்டு மக்கள் தங்களது தேசப் பற்றை, திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த விவகாரத்தில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை முறைப்படுத்தும் வகையில், தேசியக் கொடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் இல்லாதபடி, இதில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள "தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்' என்ற வார்த்தையை "தேசிய கீதத்தை இசைக்கலாம்' என்று திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. தேசியக் கொடி சட்டத்தை திருத்துவது குறித்து ஜனவரி மாதம் 9-ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com