தெலுங்கு ‘மெர்சல்’ வெளியீடு தள்ளிப்போனதற்கு நாங்கள் காரணமா?: தெலங்கானா பாஜக விளக்கம்

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனின் அணுகுமுறையைத்தான் கண்டிக்கிறோம். தவறாக உள்ள வசனங்களை அவர்கள் நீக்கவில்லை...
தெலுங்கு ‘மெர்சல்’ வெளியீடு தள்ளிப்போனதற்கு நாங்கள் காரணமா?: தெலங்கானா பாஜக விளக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் மெர்சல் படம் தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) நாளை வெளியாவதாக இருந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தணிக்கையில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் நீக்கப்படவேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. தணிக்கைக் குழுவின் கோரிக்கையை ஏற்று தெலுங்கு மெர்சலில் ஜிஎஸ்டி வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தேனாண்டாள் பட நிறுவனத்தைச் சேர்ந்த அதிதி ரவிந்தர்நாத் இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது: அதிரிந்தி படத்தின் தணிக்கைப் பணிகள் இயல்பாக, முறைப்படி நடைபெற்று வருகின்றன. வசனங்களை நீக்குவது குறித்த செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

இதுபற்றி தெலங்கானா மாநிலத்தின் பாஜக  செய்தித்தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் ஒரு பேட்டியில் கூறியதாவது: பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. விஜய்யோ படத்தயாரிப்பாளரோ தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதில் பாஜகவுக்கு எவ்வித சங்கடமும் இல்லை. கருத்துரிமைக்கு எதிராக நாங்கள் இருந்திருந்தால் அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்குமா? நாடு முழுக்க வெளியாகியிருக்குமா? எனவே படம் வெளியாகாமல் இருப்பதில் பாஜகவுக்கு எவ்வித பங்கும் இல்லை. மெர்சல் ஒரு படைப்பாக இருந்தாலும் புள்ளிவிவரங்கள் தவறாக உள்ளன. எனவே அதைத்தான் எதிர்த்துப் போராடுகிறோம். 

தெலங்கானா பாஜக, தெலுங்கு மெர்சல் படத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்தும்படி கோரிக்கை விடுக்கவில்லை. தமிழ்நாட்டு பாஜகவினர் அதைக் கோரியிருக்கலாம். ஆனால் பாஜக எவ்வித உள்ளூர்த் தணிக்கையையும் கோரவில்லை. ஆனால் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனின் அணுகுமுறையைத்தான் கண்டிக்கிறோம். தவறாக உள்ள வசனங்களை அவர்கள் நீக்கவில்லை. பேச்சுவார்த்தையாகத்தான் எங்கள் கருத்தைக் கூறியுள்ளோம். மற்றபடி அதிரிந்தி படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது குறித்து எங்களுக்கு எவ்வித தகவலும் தெரியாது என்றார். 

முதலில் தமிழில் வெளியானதுபோலவே தெலுங்கிலும் மெர்சல் படம் அக்டோபர் 18 அன்று வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கையில் சில காலதாமதங்கள் ஆவதால் இதுவரை வெளிவராமல் உள்ளது. வசூலில் சாதனை படைத்து வரும் மெர்சல், விஜய் படங்களில் ரூ. 200 கோடியைத் தொடவுள்ள முதல் படம் என்கிற பெருமையை அடையவுள்ளது. அதேபோல தெலுங்கு மெர்சலும் வசூலில் சாதனை படைக்குமா என்கிற ஆவல் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com