அரசின் திட்டங்களை விமர்சிப்பது இறையாண்மைக்கு எதிரானதல்ல: "மெர்சல்' பட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

"மெர்சல்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெற உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசின் திட்டங்களை விமர்சிப்பது இறையாண்மைக்கு எதிரானதல்ல: "மெர்சல்' பட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

"மெர்சல்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெற உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "அரசின் திட்டங்களை விமர்சிப்பதை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக கருத முடியாது' என்று வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், "மெர்சல் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளன. அத்துடன் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்துகளைப் பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது நாட்டையும், நாட்டின் வரிவிதிப்பு முறையையும் தவறாகச் சித்திரிக்கும் வகையில் உள்ளது. எனவே, மெர்சல் திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை தணிக்கை வாரியம் திரும்பப் பெற வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது:
இந்த வழக்கில் என்ன பொதுநலன் இருக்கிறது, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். அரசின் திட்டங்களை விமர்சித்து கருத்துக் கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று கூற முடியாது.
படங்களில் வரும் காட்சிகளை மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டார்கள். கருத்துக் கூறவும், அதனை மறுக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. சில திரைப்படங்களில் கதாநாயகர்கள் பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்கு வழங்குகின்றனர். அதற்காக அந்தப் படங்களுக்குத் தடை விதிக்க முடியுமா?
உண்மையில் பொதுநலனில் அக்கறை இருந்தால், மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்திரிப்பதை எதிர்த்து வழக்கு தொடரலாம் அல்லது தீண்டாமைக்கு எதிராக சமூக அவலங்களை எதிர்த்து வழக்குத் தொடரலாம். இந்தியாவில் எத்தனை பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பது குறித்து தெரியுமா? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது மனுதாரர் குறுக்கிட்டு, "டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன' என்றார்.
அதற்கு நீதிபதிகள், "பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கூட கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்காக அவர் இதுபோல கருத்து தெரிவிக்கக்கூடாது என கூற முடியுமா? ' எனக் கேட்டனர். 
இந்த வழக்கு மறைமுகமாக இப்படத்துக்கு விளம்பரம் தேடித்தருவது போல் உள்ளது. இந்த நீதிமன்றத்தை பொது மேடையாக்க வேண்டாம். இதுதொடர்பாக முடிவு செய்யும் அதிகாரம் தணிக்கை வாரியத்துக்குத்தான் உள்ளது எனக் கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com