நடிகர் திலீப்பின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ளவும் திலீப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் திலீப்பின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த 2-வது மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் திலீப் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ள திலீப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவத்தில், அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதலில் திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் முதலாவதாக திலீப் தாக்கல் செய்த மனு மீது கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தச் சம்பவத்தில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் செல்லிடப்பேசி இன்னமும் கைப்பற்றப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையேற்றுக் கொண்ட கேரள உயர் நீதிமன்றம், திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

எனினும், கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2ஆவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் சிலீடப்பட்ட உரையில் ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நடிகர் தீலிப் சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர் என்பதால், ஆதாரங்களைச் சேதப்படுத்தவும், சாட்சிகளை கலைப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சுனில் தாமஸ் கூறுகையில், 'இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய ஜாமீன் மனு விசாரணை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலவரத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மனுதாரருக்கு (திலீப்) ஜாமீன் வழங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆதலால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

இந்நிலையில் திலீப்பின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ளவும் திலீப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18-ம் தேதி இறந்த திலீப்பின் தந்தைக்கு வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஈமச் சடங்கு நடைபெறவுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் இரண்டு மணி நேரம் சடங்குகளில் பங்கேற்க மட்டும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 16 வரை நீதிமன்றக் காவலில் திலீப் தொடர்ந்து இருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com