தந்தையின் நினைவு நாள் சடங்கில் பங்கேற்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நடிகர் திலீப்!

காலை 8 மணிக்குத் தனது இல்லத்துக்கு வந்த திலீப் நினைவு நாள் சடங்குகளில் பங்கேற்றார்...
தந்தையின் நினைவு நாள் சடங்கில் பங்கேற்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நடிகர் திலீப்!

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப், தனது தந்தையின் நினைவு நாள் சடங்கில் பங்கேற்றுள்ளார்.

இன்று நடிகர் திலீப்பின் தந்தையின் நினைவு தினம். அதனையொட்டி நடைபெறும் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி கோரி, அங்கமாலி நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், சடங்கில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்கியது. இதற்கிடையே, நடிகர் திலீப்புக்கான நீதிமன்றக் காவலை இந்த மாதம் 16-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

முன்னதாக, ஜாமீன் கோரி நடிகர் திலீப் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் திலீப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் சீலிடப்பட்ட உறையில் ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நடிகர் தீலிப் சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர் என்பதால், ஆதாரங்களைச் அழிக்கவும், சாட்சிகளை கலைப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து திலீப்பின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். 

இந்நிலையில், நடிகர் திலீப், தனது தந்தையின் நினைவு நாள் சடங்கில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் 2 மணி நேரம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து 50 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார் திலீப். 

காலை 8 மணிக்குத் தனது இல்லத்துக்கு வந்த திலீப் நினைவு நாள் சடங்குகளில் பங்கேற்றார். திலீப்பை அவரது தாய், மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் வரவேற்றார்கள். குடும்பத்தினருடன் சேர்ந்து காலை உணவையும் அருந்தினார். திலீப்பை நேரில் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருடைய வீட்டின் அருகே திரண்டனர். இதனால் அப்பகுதியில் காவல் பாதுகாப்பு அதிகமாக இருந்தது. 

இந்த இரண்டு மணி நேரத்தில் தொலைப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது, அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டும் என்கிற கட்டளைகளை அவர் ஏற்றுக்கொண்டார். 10 மணிக்குள் சிறைக்குத் திரும்பவேண்டும் என்பதால் வீட்டிலிருந்து 9.45க்குக் காவலர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் திலீப். (கடந்த சனிக்கிழமை சிறையில் இருந்த திலீப்பை அவரது மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகிய இருவரும் சந்தித்தார்கள்.)

வழக்கின் பின்னணி: சில மாதங்களுக்கு முன், கொச்சி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய கேரள நடிகை, ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவத்தில், அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதலில் திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com