ஒரே வருடத்தில் 40 படங்களுக்கு இசையமைத்ததில் எத்தனை ஹிட் ஆகியுள்ளன?: சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர். ரஹ்மான் பதில்!

நாற்பதோ, ஐம்பதோ பண்ணுவது சுலபம். அவற்றில் எவ்வளவு ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்கவேண்டும்...
ஒரே வருடத்தில் 40 படங்களுக்கு இசையமைத்ததில் எத்தனை ஹிட் ஆகியுள்ளன?: சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர். ரஹ்மான் பதில்!

வருடத்துக்கு 40 படங்களுக்கு இசையமைத்ததில் எத்தனை ஹிட் ஆகியுள்ளன என்கிற ரஹ்மானின் பதில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஹ்மான் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி:

80,90களில் இருந்த நிறைய இசையமைப்பாளர்கள், இளையராஜாவில் தொடங்கி பல இசையமைப்பாளர்கள் வருடத்துக்கு 40, 50 படங்கள் கூட இசையமைத்துள்ளார்கள். அவற்றில் எல்லாம் புதிய விஷயங்கள் இருந்தன. இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் வருடத்துக்கு ஒரு படம் இரண்டு படங்களுக்கு இசையமைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. திரைத்துறை மாறியுள்ளதா அல்லது இசையமைப்பாளர்களின் மனநிலை மாறியுள்ளதா? உங்களுக்கும் சேர்த்து நான் கேட்கிறேன்...

இதற்கு ரஹ்மான் அளித்த பதில்:

நாற்பதோ, ஐம்பதோ பண்ணுவது சுலபம். அவற்றில் எவ்வளவு ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்கவேண்டும். அதில் கவனித்துப் பார்த்தால் 40 படங்களில் நான்கு, ஐந்து படங்கள் ஹிட் ஆகலாம். மீதி ஒரேமாதிரியானவையாக இருக்கலாம். நான் ஒரு இசையமைப்பாளரை மட்டும் சொல்லவில்லை. நான் தெலுங்குத் திரைத்துறையிலும் பணியாற்றியுள்ளேன். 

நான் பணத்துக்காக இசையமைக்கவில்லை. இசை மீதான ஆர்வத்தினால் செய்கிறேன். நமக்குப் புதுமையான யோசனைகள் எவ்வளவு வரும்? எவ்வளவு தூரம் புதுப்பித்துக்கொள்கிறோம்? ஃபார்முலாவின்படி செய்வதாக இருந்தால் அது சரியாக வரும். 8 மணி நேரங்களில் முடித்துவிடலாம். இரண்டு, மூன்று நாள்கள் கழித்துப் பார்க்கும்போது அது ஒரேமாதிரியாக இருக்கும். மிகவும் போரடித்துவிடும். எனக்கெல்லாம் சுலபமாக போரடித்துவிடும். எனவே கிரியேட்டிவாக எப்போதும் இருப்பது நல்லது என்றார்.

ரஹ்மானின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஹ்மானின் இந்தப் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 80களில் இளையராஜா ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பல படங்களின் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. நிறைய படங்களுக்கு இசையமைத்தாலும் அதில் பல புதுமைகளை இளையராஜா கையாண்டுள்ளார் என்று ரஹ்மானின் பதிலுக்குப் பலரும் எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com