பரணி அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்: ‘பிக் பாஸ்’ ஜூலி விளக்கம்!

ஞாயிறு அன்று பரணி அண்ணனைச் சந்திப்பதற்காக வளசரவாக்கம் முழுக்க அலைந்தேன்....
பரணி அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்: ‘பிக் பாஸ்’ ஜூலி விளக்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு நடிகர் பரணியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியதாக ‘பிக் பாஸ்’ ஜூலி கூறியுள்ளார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி - நடிகை சுஜா ஆகியோரிடையே நடந்த உரையாடலின்போது இதுகுறித்து ஜூலி கூறியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மக்கள் என்னை ஒரு பிரபலமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெசண்ட் நகரில் உள்ள என் நண்பர் வீட்டுக்குச் சென்றேன். பிறகு அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்றேன். அப்போது என்னைப் பார்க்க கடையின் முன்பு 300, 400 பேர் கூடிவிட்டார்கள். சிலர் என்னை வீட்டுக்கு எல்லாம் அழைத்துச் சென்று உபசரித்தார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்ற பிறகு அடுத்த ஒருவாரம் நான் வெளியே எங்கும் செல்லவில்லை. முதல் நாள் மட்டும் வெளியே சென்றேன். சனிக்கிழமை பிக் பாஸிலிருந்து வெளியே வந்தேன். ஞாயிறு அன்று பரணி அண்ணனைச் சந்திப்பதற்காக வளசரவாக்கம் முழுக்க அலைந்தேன். பரணி அண்ணனின் செல்பேசி எண்ணை வாங்கி,, அவர் சேப்பாக்கத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டு நேராக அங்கே சென்றேன். அவர் காலில் விழுந்துவிட்டு வந்தவள் வேறு எங்கும் ஒரு வாரம் செல்லவில்லை. 

நான் பரணி அண்ணனின் காலில் விழுந்ததாக வெளியான  செய்தி உண்மைதான். அண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே போனதே எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரை அண்ணன் என அழைத்திருக்கிறேன். அவர் என்னிடம் உண்மையாகத்தான் இருந்தார். பரணி அண்ணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவதற்காக சுவரைத் தாண்டியபோதே எனக்கு மனது உறுத்தியது. அந்த ஒரு நொடி எனக்குச் சங்கடமாக இருந்தது என்றார்.

அப்போது ஏன் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஜூலியிடம் கேள்வி எழுப்பினார் சுஜா.

இதற்குப் பதில் அளித்த ஜூலி, அண்ணன் என்னிடம் சொல்லியுள்ளார், நீ என்னிடம் சேரவேண்டாம். என்னிடம் சேர்ந்தால் எல்லோரும் உன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்றார் என ஜூலி தன் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தினார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

ஜூலை மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் பரணி வெளியேற்றப்பட்டார். குழுவில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதால் பிக் பாஸை விட்டு வெளியேற பரணி முடிவு செய்தார். இதனால் அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் ஏதும் வராததால் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முடிவெடுத்தார்.

 தன்னை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் கேமரா முன்பு மிரட்டினார். ஆனால் பதில் ஏதும் வராததால் மிகவும் கஷ்டப்பட்டுப் பல தடைகளைத் தாண்டி அரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அதாவது சுவரேறித் தாண்ட முயற்சி செய்தார். மிகவும் உயரமான சுவர் என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் தாண்டமுடியவில்லை. இதனால் பார்வையாளர்களிடையே பதைபதைப்பு ஏற்பட்டது. பிக் பாஸ் அரங்கில் இருந்த மற்றவர்கள் யாரும் இதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக நாடகம் ஆடுகிறார் என்று பரணியை விமரிசனம் செய்து அதே இடத்தில் நகராமல் அமர்ந்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பரணியின் இந்த விபரீதமுயற்சியால் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பரணி, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com