மாணவி அனிதா தற்கொலை, கெளரி லங்கேஷ் கொலை: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து என்ன?

மாணவி அனிதா தற்கொலை மற்றும் மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் கொலை ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள் குறித்து...
மாணவி அனிதா தற்கொலை, கெளரி லங்கேஷ் கொலை: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து என்ன?

மாணவி அனிதா தற்கொலை மற்றும் மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் கொலை ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து என்ன?

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஹ்மான் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

கேள்வி: அனிதாவின் தற்கொலை குறித்து.. இதெல்லாம் கவனிக்கிறீர்களா?

இசைக்குள் போய்விட்டால், தினமும் இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் அது ஓடாது. பயணங்களின்போதுதான் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வேன். அனிதா தற்கொலை விவகாரத்தை முழுமையாக அலசவில்லை. அது நடந்ததற்காக வருந்துகிறேன். துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி: உங்களுக்குச் சமூகம் பற்றிக் கவலையில்லையா?

இருக்கிறது. அப்போது என்ன பண்ணவேண்டும் என்றால் இசையிலிருந்து ஓய்வு பெற்றுவிடவேண்டும்.

நம் சமூகத்தில் நிறைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் நிறைய நடக்கின்றன. என் வேலை, மக்கள் எதிர்கொள்ளும் எதிர்மறைச் சம்பவங்களிலிருந்து அவர்களை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்வது. அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை அளிப்பது. நான் அவர்களை மேலும் குழப்பக்கூடாது. அவர்கள் விரும்பும் உலகில் 5 நிமிடம் வாழ வைப்பதே என் வேலை.

ஜல்லிக்கட்டு சமயத்தில் நான் ஓய்வில் இருந்தேன். எனவே அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்தேன்.

எனக்குப் பல விஷயங்கள் தெரிந்தாலும் முழுதாகத் தெரியாது. நான் ஒரு மனிதனுக்கு அமைதியையும் அழகையும் எதிரொலிக்க விரும்புகிறேன். மக்களுக்கு எங்குச் செல்வது எனத் தெரியாவிட்டால் வருத்தத்தில் தற்கொலை செய்துகொள்வார்கள். இசை என்பது மருந்து மாதிரி. அந்த மருந்தைக் கொடுப்பவர் மருத்துவர். அதிலும் விஷம் கலக்கக்கூடாது.

நான் இறங்கும் பல தொழில்களில் ஆரம்ப நிலையில் உள்ளேன். நான் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தக்கூடாது. நான் மனிதத்தன்மை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். அரைகுறையாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொண்டு கருத்து சொல்லும்போது அது நியாயமல்ல. முழுவதாகத் தெரிந்துகொண்டுதான் கருத்து சொல்லவேண்டும்.

*

 ஒன் ஹார்ட் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது ஏ.ஆர். ரஹ்மானிடம், பெங்களூரில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் பதில்:

நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற விஷயங்கள் இந்தியாவில் நடக்கவேண்டாம் என நினைக்கிறேன். இத்தகைய சம்பவங்கள் இந்தியாவில் நடந்தால் அது என் இந்தியா அல்ல. என் இந்தியா முன்னேறுகிற, அன்பு கொண்ட நாடாக இருக்கவே விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com