நாங்கள் கைதா?: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தளங்கள் மறுப்பு!

கைதான நபர், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர் என்று முதலில் கூறப்பட்டது. ...
நாங்கள் கைதா?: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தளங்கள் மறுப்பு!

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளத் தமிழகக் காவல்துறை கைது செய்த விவகாரத்தில் தங்கள் நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை எனத் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ஆகிய இரு இணைத்தளங்களும் அறிவித்துள்ளன.

தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருட்டு சி.டி. தயாரிப்போரை கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபர்கள் குறித்த ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அண்மையில் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தின் அட்மினை கண்டறிந்த இக்குழு, அவரிடம் தாங்கள் திருட்டு சி.டி. தயாரிக்க, சில திரைப்படங்களின் அசல் சி.டி. வைத்திருப்பதாகக் கூறி, அந்த நபரை சென்னை திருவல்லிக்கேணிக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்தது.

அங்கு திருட்டு சி.டி. வாங்க வந்த நபரை, இக்குழு பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தது. அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் (24) என்பதும், கணினி பொறியாளரான அவர்தான், அந்த இணையதளத்தின் அட்மின் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், கௌரிசங்கரை கைது செய்து, மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கௌரி சங்கர் இந்த இணையதளம் போன்ற 33 இணையதளங்கள் நடத்தி வருவதும், அவற்றில் பெரும்பாலானவை ஆபாச இணையதளங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கௌரி சங்கரின் கூட்டாளிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கைதான நபர், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர் என்று முதலில் கூறப்பட்டது. உடனே சமூகவலைத்தளங்கள் வழியாக இந்தச் செய்தியை மறுத்தது தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம்.

இதனால் கைதானவர், தமிழ் கன் என்றொரு மற்றொரு இணையத்தளத்தைச் சேர்ந்தவர் என்ற மற்றொரு செய்தி வெளியானது. இச்செய்தியும் உடனடியாக தமிழ் கன் இணையத்தளத்தால் மறுக்கப்பட்டது. அப்பாவிகளைக் கைது செய்வதை நிறுத்துங்கள். எங்களுடைய நிர்வாகி கைதாகவில்லை. துப்பறிவாளன் படத்தை முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் என இரு இணையத்தளங்களும் தாங்கள் கைதான தகவலை மறுத்துள்ளதால் தமிழ்த் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மை நிலவரம் விரைவில் தெரியவரும் என்று அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com