தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தளங்களின் நிர்வாகிகள் புகைப்படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!

அவர்கள் தொடர்பான விவரங்களைத் தயாரிப்பாளர் சங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது...
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தளங்களின் நிர்வாகிகள் புகைப்படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!

தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளரைச் சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருவருடைய புகைப்படங்களைத் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

திருட்டு சி.டி. தயாரிப்போரை கண்டறிந்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கவும், இணையத்தளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபர்கள் குறித்த ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அண்மையில் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தின் அட்மினை கண்டறிந்த இக்குழு, அவரிடம் தாங்கள் திருட்டு சி.டி. தயாரிக்க, சில திரைப்படங்களின் அசல் சி.டி. வைத்திருப்பதாகக் கூறி, அந்த நபரை சென்னை திருவல்லிக்கேணிக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்தது.

அங்கு திருட்டு சி.டி. வாங்க வந்த நபரை, இக்குழு பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தது. அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் (24) என்பதும், கணினி பொறியாளரான அவர்தான், அந்த இணையதளத்தின் அட்மின் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், கௌரிசங்கரை கைது செய்து, மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கௌரி சங்கர் இந்த இணையதளம் போன்ற 33 இணையதளங்கள் நடத்தி வருவதும், அவற்றில் பெரும்பாலானவை ஆபாச இணையதளங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கௌரி சங்கரின் கூட்டாளிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இணையத்தளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரின் புகைப்படங்களையும் விவரங்களையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள Tamil Gun, Tamildbox இணையத்தளங்களின் நிர்வாகியான டிக்ஸன் ராஜ், ஸ்விட்சர்லாந்தில் உள்ள Tamil Rockers இணையத்தளத்தைச் சேர்ந்த அரவிந்த் லோகேஸ்வரன் ஆகிய இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் தொடர்பான விவரங்களைத் தயாரிப்பாளர் சங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தகவல்களை அளிப்பவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக piracy@tfpc.org என்கிற மின்னஞ்சலும் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com