ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நியூட்டன், ஈரானியப் படத்தின் தழுவலா? சர்ச்சையை முடித்துவைத்த தயாரிப்பாளர்!

நியூட்டன் படம், 2001-ல் வெளிவந்த சீக்ரெட் பாலெட் என்கிற இரானிய படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது...
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நியூட்டன், ஈரானியப் படத்தின் தழுவலா? சர்ச்சையை முடித்துவைத்த தயாரிப்பாளர்!

இந்தியா சார்பாக ஆஸ்கர் விருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நியூட்டன் படம், ஈரானியப் படத்தின் தழுவல் என்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ஈரானியப் படத்தின் தயாரிப்பாளர் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியாவிலிருந்து 'நியூட்டன்' என்ற ஹிந்தி திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியூட்டன், இந்திய அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்துள்ளது.

ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரான் சென் தெரிவித்தார்.

இந்நிலையில் நியூட்டன் படம், 2001-ல் வெளிவந்த சீக்ரெட் பாலெட் என்கிற இரானிய படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. எனவே இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நியூட்டன் பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இந்நிலையில் இரானியப் படத்தின் தயாரிப்பாளர் மார்கோ மியூல்லர் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டியுள்ளார். இயக்குநர் அனுராக் காஷ்யப், மியூல்லரிடம் நியூட்டன் படத்தினைப் பார்க்கச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதன் அடிப்படையில் படத்தைப் பார்த்த மியூல்லர் அனுராக் காஷ்யப்பிடம் தெரிவித்ததாவது: நல்ல படம். கதையில் ஒற்றுமை தென்பட்டாலும் எங்களுடைய சீக்ரெட் பாலெட் படத்தை காப்பி அடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இத்தகவலைத் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் அனுராக் காஷ்யப். 

இதையடுத்து நியூட்டன் படம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com