மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது: திரையுலக போராட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் கலந்துகொண்ட மௌன அறவழிப் போராட்டம் தீர்மானங்களுடன் நிறைவேறியது.
மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது: திரையுலக போராட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை (8-ஆம் தேதி) தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன மௌன அறவழிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் விஷால், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சத்யராஜ், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பொன்வண்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களும், ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: 

மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசுகள் தீர்வு காணவேண்டும். திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் பகல் 11 மணியளவில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். இருப்பினும், நடிகர் அஜித் இதுவரை இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக தமிழ் திரையுலகினரின் மௌன அறவழிப் போராட்டத்தில் தீர்மானத்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வாசித்தனர். அதில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது. மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர், திரையுலகினரின் கையெழுத்துக்களைப் பெற்று இந்த மௌன அறவழிப் போராட்டத்தின் தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com