தாதா சாகேப் பால்கே விருதுக்கு மறைந்த நடிகர் வினோத் கன்னா தேர்வு!

கடந்த 2002 மற்றும் 2003-இல் முறையே மத்திய சுற்றுலா - கலாசாரத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும்...
தாதா சாகேப் பால்கே விருதுக்கு மறைந்த நடிகர் வினோத் கன்னா தேர்வு!

மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர்,  கே.விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது அணி சேர்த்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை மறைந்த நடிகர் வினோத் கன்னா அவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார். வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மும்பையில் காலமானார். 

கடந்த 1946-ஆம் ஆண்டில் அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பெஷாவரில் (தற்போது பாகிஸ்தானுடன் உள்ளது) பிறந்தவர் வினோத் கன்னா. எளிமையான குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அவர், திரைத் துறையின் மீதிருந்த தீவிர ஈடுபாட்டின் காரணமாக மும்பைக்கு வந்தார்.

1968-இல் வெளியான 'மன் கா மீத்' என்ற திரைப்படத்தின் வாயிலாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய வினோத் கன்னா, ஆரம்ப காலங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர் கதாநாயகனாக உருவெடுத்தார்.

'மேரே அப்னே', 'மேரா காவ்ன் மேரா தேஷ்', 'ஹீரா பேரி', 'முக்கந்தர் கா சிக்கந்தர்', 'சத்யமேவ ஜெயதே' உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.

அமிதாப் பச்சன், ரிஷி கபூருடன் இணைந்து அவர் நடித்த 'அமர் அக்பர் அந்தோணி' என்ற திரைப்படம் ரசிகர்கள் மனதைக் களவாடியது. வெவ்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து வினோத் கன்னா நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது திடீரென துறவறம் பூண்ட வினோத் கன்னா, 5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கலைத் துறைக்குத் திரும்பினார். இறுதியாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஷாரூக் கானுடன் இணைந்து 'தில்வாலே' படத்தில் அவர் நடித்தார்.

வினோத் கன்னாவின் கலைச் சேவையைப் போற்றும் வகையில் ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அரசியல் பயணம்: திரைப் பயணத்துக்கு மத்தியில் அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட வினோத் கன்னா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் அதிக பாலங்களை அவர் கட்டியது மக்கள் இடையே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது. இதனால் 'பாலங்களின் நாயகன்' என்று அவரை தொகுதி மக்கள் அன்புடன் அழைப்பதுண்டு.

கடந்த 2002 மற்றும் 2003-இல் முறையே மத்திய சுற்றுலா - கலாசாரத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் வினோத் கன்னா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com