
துமாரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார் விதார்த்!
By சினேகா | Published on : 16th April 2018 11:17 AM | அ+அ அ- |

சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர், தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்தியில் ஹிட் அடித்த துமாரி சுலு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்கியுள்ளார். இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் பரவலான பாராட்டுகளைப் பெற்று ஹிட் அடித்த படமான ‘துமாரி சுலு’ ஒரு மிடில் கிளாஸ் இல்லத்தரசியின் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் கனவை நனவாக்கும் படியான கதையமைப்பைக் கொண்டது.
ராதாமோகன் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் இந்தியில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். தமிழில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறுகையில், ‘இது வழக்கமான ஹீரோ ரோல் இல்லை. நுண்ணுணர்வுகளைக் கூட மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அதைத் திரையில் வெளிப்படுத்தக் கூடிய நடிகரைத் தேர்வு செய்ய விரும்பினோம். தற்போதைய இளம் நடிகர்களில் விதார்த் அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால் தேர்வு செய்தோம்’ என்கிறார். இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. கோலிவுட் ஸ்ட்ரைக் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றனர் தயாரிப்பாளர் வட்டம்.