தமிழ்ப் படங்களின் வெளியீடு குறித்த ட்வீட்: மூன்று நாள்களில் மனம் மாறிய உதயநிதி ஸ்டாலின்!

கடந்த ஏப்ரல் 15 அன்று, தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம், சென்னை தேவி திரையரங்கில் மீண்டும் வெளியாவது குறித்து...
தமிழ்ப் படங்களின் வெளியீடு குறித்த ட்வீட்: மூன்று நாள்களில் மனம் மாறிய உதயநிதி ஸ்டாலின்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ்ப் படங்களின் வெளியீடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ்   -நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை சென்னையில் நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் அதையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. எனினும் மைதானத்தின் உள்ளே காலணிகளை வீசியும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தின் உள்ளே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்குத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வருகிற 20-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புணேவில் நடைபெறவுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக... திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. குறிப்பிடும் படியாக தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. இதைப் போல் படப்பிடிப்பு மற்றும் தமிழ் சினிமாவின் இதர பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருந்த நிலையில், இதற்கு முடிவு எட்டப்படும் வகையில் தமிழக அரசின் உதவியை தமிழ்த் திரை அமைப்புகள் நாடின. இதன் அடிப்படையில் அரசின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக அரசு ஏற்பாடு செய்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஆகிய மூன்று அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு பேச்சுவார்த்தை முடித்து வைக்கப்பட்டது. சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதால் காலா, விஸ்வரூபம் 2, மெர்குரி, இமைக்கா நொடிகள், டிக் டிக் டிக், மிஸ்டர் சந்திரமெளலி, காளி போன்ற படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

இந்நிலையில் வேலைநிறுத்தம் முடிவடைந்து, மீண்டும் படங்கள் வெளியாவதை முன்னிட்டு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவர் கூறியதாவது: ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே என்று ட்வீட் செய்துள்ளார். 

இதனிடையே கடந்த ஏப்ரல் 15 அன்று, தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம், சென்னை தேவி திரையரங்கில் மீண்டும் வெளியாவது குறித்து ட்வீட் செய்திருந்தார் உதயநிதி. இந்நிலையில் அடுத்த மூன்று நாள்களில் இவ்வாறு ட்வீட் செய்திருப்பது விமரிசனங்களை வரவழைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com