ஆறு மாதத்துக்கு தேர்தல் இல்லை: நடிகர் சங்க பொதுக் குழுவில் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கென தனிக் கட்டடம் உருவாக்கப்பட்டு வருவதால், அந்தப் பணிகளை முடிக்கும் வகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சங்கத் தேர்தல் இல்லை என நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 -ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 -ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கென தனிக் கட்டடம் உருவாக்கப்பட்டு வருவதால், அந்தப் பணிகளை முடிக்கும் வகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சங்கத் தேர்தல் இல்லை என நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 -ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும், நடிகர்கள் விஜயகுமார், ஆனந்தராஜ், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், சங்க வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 2017-18 -ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவுக் கணக்குகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. 

தேர்தல் இல்லை: தற்போது நாசர் தலைமையில் செயல்பட்டு வரும் நிர்வாகக் குழுவின் பதவிக் காலம், வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 2018- 21 -ஆம் ஆண்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக தனிக் கட்டடம் என்ற கோரிக்கை அடிப்படையில், தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதனை கட்டி முடிக்கும் வகையில் தற்போதுள்ள நிர்வாகம் தொடர்ந்தால் நல்லது என்று நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தனித்துவமான கட்டடம்: பொதுக்குழு கூட்டத்துக்குப் பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியது: 
நடிகர் சங்கத்துக்கென தனித்துவமான கட்டடத்தை எழுப்பி வருகிறோம். இந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்காக இந்தப் பணிகளை நிறுத்துவதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் எனக் கருதினோம். ஆனால், தேர்தல் நடத்துவதில் நிர்வாகக் குழு உறுதியாக உள்ளது. கட்டடப் பணிகளை முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. அதைத் திரட்டி வருகிறோம். இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் கட்டுமானப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், இதுகுறித்து உறுப்பினர்களின் அனுமதிக்கு தீர்மானத்தை வைத்தோம். அவர்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு நாளையே தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்டடம், நிர்வாகப் பணிகள் மற்றும் கணக்கு வழக்குகளை அடுத்து வரும் நிர்வாகத்துக்கு முறையாக ஒப்படைத்துச் செல்ல விரும்புகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com