நடிகர் கமல் ஹாசனின் 'மய்யம்' இணையதளம் 'நாளை நமதே' எனப் பெயர் மாறுகிறது!

அரசியலில் களமிறங்க முடிவெடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன், தற்போது கமல்ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் 'மய்யம்' இணையதளம் 'நாளை நமதே' எனப் பெயர் மாறுகிறது!

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய கமல், நாளை நமதே என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார். 

அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயம் தமக்கு வந்துவிட்டதாக கூறிய அவர்,  கிராமத்திலிருந்து மாற்றத்தை தொடங்குவதாக குறிப்பிட்டார். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்றார். நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம் ஆனால் இருவரின் பாதைகள் வெவ்வேறு என்பதால் கூட்டணி அமைத்து செயல்பட வாய்ப்பு இல்லை’ என்றார் கமல்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். 

மக்களுக்கு எது நல்லது என்று கொள்கைதான் முடிவு செய்யும் என்று நம்புகிறவர் கமல். ‘எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2, 3, 4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல’ என்று தனது அரசியல் பயணம் மற்றும் ரஜினியின் ஆன்மிக அரசியல் என ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்துரைத்துப் பேசினார் கமல். .

தீவிர அரசியலில் களமிறங்க கமல்ஹாசன் முடிவெடுத்தவுடன் கிராமங்களை தத்தெடுத்து கிராமங்களில் இருந்து முன்னேற்றங்களை கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தார். இது குறித்த சிறப்பான திட்டங்களை வகுக்க அமெரிக்காவில் தங்கி அதற்கேற்ற ஆலோசகர்களை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். இந்தியா திரும்பியதும் இம்மாதம் 27-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் கமல் ஹாசன். கட்சியின் பெயர், கொடி மற்றும் நிர்வாகிகள் விபரத்தை அப்போது தெரிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.  

கடந்த ஆண்டு இறுதியில் மய்யம் என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை கமல் தொடங்கியிருந்தார். இதன் மூலம் நற்பணி மன்ற ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் அது. தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையலாம். 

இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதியதாக பதிவு செய்யும் நபா்கள் தங்களது பெயா், முகவரி, செல்போன் எண், இணையதள முகவரி, மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தங்களால் எந்த துறையில், எவ்வகையில் சமூகப் பணியாற்ற முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும். www.naalainamadhe.maiam.com  என்ற இந்தப் புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என்று கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com