ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு இன்று வருகிறது

துபையில் மாரடைப்பால் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு இன்று வருகிறது

துபையில் மாரடைப்பால் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில், "பிரேதப் பரிசோதனை முடிவடைந்துவிட்டது. அவரது உடல் திங்கள்கிழமை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். தடயவியல் ஆய்வகங்களின் அறிக்கைகளுக்காக ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அவரது இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமல் இரங்கல்
சென்னை, பிப். 25: நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
உண்மையான தோழியை இழந்தேன் - ரஜினி: திரையுலகின் உண்மையான நண்பரை இழந்தேன். உண்மையான லெஜ ண்ட். நான் அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளேன். என் உண்மையான தோழியை இழந்தேன். திரைத்துறை உண்மையான சாதனையாளரை இழந்துள்ளது. என் இதயம் அவரது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உள்ளது. அவர்களது சோகம் என் சோகம். ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார் ரஜினி.
நினைவுகள் நிழலாடுகின்றன - கமல்: ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான பெண்மணியாக வளரும் வரை பார்த்திருக்கிறேன். அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு அவர் தகுதியானவரே. கடந்த முறை அவரைச் சந்தித்தது முதல் அவரது நினைவுகள் என் உள்ளத்தில் நிழலாடுகின்றன. "கண்ணே, கலைமானே' என்ற தாலாட்டு என்னை இப்போது ஆக்கிரமித்துள்ளது. அவரை இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். 
நடிகர்கள் சிவகுமார், விவேக், நடிகைகள் ரேகா, குஷ்பூ, ஸ்ரீப்ரியா, லெட்சுமி, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் பலரும் ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

என்னுடைய மயிலை இழந்துவிட்டேன்: பாரதிராஜா உருக்கம்
சென்னை, பிப்.25: என்னுடைய மயிலை இழந்துவிட்டேன் என்று நடிகை ஸ்ரீதேவி மறைவு குறித்து இயக்குநர் பாராதிராஜா உருக்கமாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: நான் "16 வயதினிலே' படமெடுக்க தயாரானபோது, எங்கும் தேடிப் பார்த்தும் கதாநாயகி கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன் அவர் தான் ஸ்ரீதேவி. எனது கனவுப் பாத்திரம் மயில் . எங்கள் ஊரில் இருந்த ஒரு பெண் பாத்திரம் மயில். இதனை ஸ்ரீதேவி நூறு சதவீதம் நிறைவேற்றினார்.
நடிகை ஸ்ரீதேவி நடித்த "16 வயதினிலே' தமிழில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் காரணமாக எனக்கு இந்தி திரையுலகில் இருந்து அழைப்பு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ தேவியை இந்தி திரையுலகுக்கு நான் தான் அறிமுகப்படுத்தினேன் என்ற பெருமை எனக்கு உண்டு. "நான் நடிப்பை பாரதிராஜாவிடம் கற்றேன்' என்று ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது எனக்கு பெரிய மரியாதையாகும். அவரை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஸ்ரீதேவி மறைவு இந்தியாவுக்கே இழப்பு. அவரது இழப்பு குறித்து ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. 
ஸ்ரீ தேவி என்று சொன்னால் அறிவுப்பூர்வ கலைச்செல்வி, 9 மொழிகள் பேசும் திறமை படைத்தவர். அவர் பொக்கிஷம், கலையுலக ஞானி. அவரது மறைவு நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவி என்று சொல்ல மாட்டேன். என் மயிலை இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெறும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாரதிராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றார்.

உச்சி வானத்துக்கு வந்தபோது உதிர்ந்த நிலா
சென்னை, பிப்.25: ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்துக்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது என கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர்முகம். "மூன்றாம் பிறை'யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல்முறையாகப் பார்த்தேன். நான் எழுதி, அவர் கடைசியாகப் பாடி நடித்த "புலி' படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.
அரை நூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் வைரமுத்து.

திரை உலகத்துக்கு பேரிழப்பு 
சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மறைவு திரை உலகத்துக்கு பேரிழப்பு என இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள விடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நடிகை ஸ்ரீதேவியின் அதிக படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் ஸ்ரீதேவியிடம் இருந்த திறமையை வெளியே கொண்டு வந்தார்கள். ஸ்ரீதேவியிடம் திறமை இருந்தது, அதனால்தான் அது சாத்தியம் ஆனது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே ஸ்ரீதேவியை அறிவேன். குழந்தை நட்சத்திரத்திலேயே மிகவும் பிரபலமானவராக அவர் இருந்தார். ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு இழப்பாகும். அவருடன் இணைந்து பணியாற்றிய "மூன்றாம்பிறை' திரைப்படத்தின் நினைவுகள் மறக்க முடியாதவை எனவும் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.

ஸ்ரீதேவியின் நடிப்பை எளிதில் மறக்கமுடியாது
புது தில்லி, பிப். 25: நடிகை ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி சார்பில் அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய திரைத்துறையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது கணவர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பலதரப்பட்ட மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இந்தியா முழுவதும் பிரபலமாகத் திகழ்ந்த ஒரு சில நடிகைகளில் ஸ்ரீதேவி முக்கியமானவர்' என்று கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தங்கள் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர், முதல்வர்
சென்னை, பிப்.25: நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர்: ஸ்ரீதேவியின் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.வெள்ளித் திரையில் அரிய உணர்வுகளை வெளிப்படுத்தும் மேதையாக பன்முகத் திறன் கொண்டவராக அவர் துறையில் சிறந்து விளங்கினார். தமிழகத்தின் மகளான அவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழும், கெளரவமும் பெற்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வர்: நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழில் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற திரைப் படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்றாகும். நடிப்புத் திறமைக்காக பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவரும், சுமார் 50 ஆண்டுகாலமாக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான ஸ்ரீதேவியின் மறைவு தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகுக்கே ஒரு பேரிழப்பாகும்.

தலைவர்கள் இரங்கல்
சென்னை, பிப்.25: நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்: துடிப்பான, அசாதாரண நடிகையான ஸ்ரீதேவி மறைவு துருதிருஷ்டவசமானது. அவரின் புகழ்பெற்ற வாழ்க்கை தலைமுறைகள் தாண்டியது. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
மு.க.ஸ்டாலின்: தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதேவியின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல்.
பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர்): 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி. ஹிந்தி திரை உலகிலும் கோலோச்சியவர். அவர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப் படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். பலகோடி ரசிகர்களைப் பெற்றவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
விஜயகாந்த் (தேமுதிக): திரையுலகில் சிறு வயது முதல் எத்தனையோ கதாப்பாத்திரத்தில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஜி.கே.வாசன் (தமாகா): பன்முகத் திறமை கொண்ட ஸ்ரீதேவி தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவர் மறைவுக்கு திரையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): குழந்தை பருவம் முதல் தமிழ் திரையுலகில் நடித்து, படிப்படியாக உயர்ந்து பல இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக புகழ்ப் பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com