இயக்குநர் கெளதம் மேனன் இதுவரை கிராமப் படம் இயக்காதது ஏன்? கவிஞர் தாமரை தகவல்!

நீங்கள் கிராமப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டேன்...
இயக்குநர் கெளதம் மேனன் இதுவரை கிராமப் படம் இயக்காதது ஏன்? கவிஞர் தாமரை தகவல்!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் - எனை நோக்கி பாயும் தோட்டா.

தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகியுள்ள விசிறி பாடலின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் தாமரை இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

நேற்று அறிவித்திருந்தபடி, பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 10 இலட்சம் பார்வைகளைப் பெற்று #1 trending என்னும் வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை தர்பூகா சிவாவின் வித்தியாசமான மெட்டமைப்பையும் இசைக்கருவிகளின் தேர்வையும் முதன்மையாகக் கருதுகிறேன். இசைச் சேர்க்கை நான் பாடல் எழுதும்போது தெரியாததால் பாடல் பதிவாகி பின்னாட்களில்தான் கேட்க நேரிடும். அந்த வகையில் இதைக் கேட்க நேரிட்டபோது தெரிந்துகொண்டேன், சிவா, கௌதமுக்கு ஏற்ற இசையமைப்பாளர் என்று! 

எடுத்து வைத்திருந்த சில காட்சித் துண்டுகளைப் பார்த்துவிட்டு நான் பாடல் எழுதும்போது கௌதமிடம் சொன்னது இதுதான்:

"நீங்கள் கிராமப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டேன்".

அவருக்கான கிராமத்துப் பாடல்களை நான் எழுதினால் எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். (கிராமத்துப் படம் எடுக்கும்படி சில ஆண்டுகளாகவே நான் வற்புறுத்திக் கொண்டிருக்கிறேன். "எனக்கும் ஆசைதான், நீங்கள் கதை கொடுத்தால், வசனம் எழுதினால் உடனே நான் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவேன்" என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அது இப்போதைக்கு நடக்காது என்று எனக்குத் தெரியும்).

இந்தப் படத்தில் தனுஷைப் பார்த்தாலே பிடிக்கிறது, பார்க்கப் பார்க்க இன்னும் பிடிக்கும். படத்தின் வெற்றிக்கு தனுசின் தோற்றம், நடிப்பு பெரிய காரணங்களாக இருக்கும்!

இந்தப் பாடலும் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. எழுதக் கடினமான வளைவுகள், சந்தம், பத்தி மாற்றம்.... மிகச் சவாலான பாடலாக இருந்தது. எழுதிய வரிகள் அப்படியே எந்த மாற்றமும் இன்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.

சித்ஸ்ரீராம், சாஷா இருவருக்கும் வரிகள் சொல்லிக் கொடுத்த அனுபவத்தில் எனக்கே பாட வந்துவிடும் போல் இருக்கிறது.

மிகப் பிடித்த பாடல். நெடுநாள் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். ஓரிரு முறைகள் கேட்ட பிறகு உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று எழுதியதோடு பாடல் வரிகளையும் கொடுத்துள்ளார்.

​​

​​

இனி, பாடல் வரிகள் ....

படம் : எனை நோக்கி பாயும் தோட்டா
இயக்குநர்: கௌதம் வாசுதேவ் மேனன்
இசை: தர்பூகா சிவா
பாடல்: தாமரை
பாடியவர்கள்: சித்ஸ்ரீராம், சாஷா திரிபாதி
உணர்வு: காதல், பெரும் புகழும் எதிர்காலமும் உள்ள நாயகி, அவற்றைத் துறந்து நாயகன் வீடு வருதல், வீட்டில் ஏற்றுக் கொள்தல், இருவரும் கிராமத்தில் ஆடிப்பாடித் திரிதல்... (கிராமத்தில் இடம்பெறும் பாடலே ஒழிய, இருவரும் நகரவாசிகள்தாம்)

பல்லவி

ஆ :

எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...

தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்...
தொடாமல் போகிறேன்...

யார்யாரோ கனாக்களில்...நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!

பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே...
நான் தான் இங்கே விசிறி..!

சரணம் 1

ஆ :

என் வீட்டில்...
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்...
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!

பெ :

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்...
நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்...
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்...
உயிரே..!

சரணம் 2

ஆ :

நேற்றோடு...
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !

காற்றோடு...
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !

பெ :

உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்...
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!

தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்...
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!

பல்லவி

பெ :

எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...

பெ :
தேன் முத்தங்கள்
ஆ :
மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..

பெ :

உன்போன்ற
இளைஞனை...
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!

ஆ :

பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ...
பூங்காற்றே நீ வீசாதே...
நான்தானிங்கே விசிறி..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com