பொங்கல் ரேஸில் 5 படங்கள்! எது வெளிவரும், எது வெளிவராது?

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல்...
பொங்கல் ரேஸில் 5 படங்கள்! எது வெளிவரும், எது வெளிவராது?

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இந்த 5 படங்களும் பொங்கல் சமயத்தில் அதாவது ஜனவரி 12 அன்று வெளிவருவதாக அறிவித்துள்ளன. இதில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் ஆகிய இரு பெரிய படங்களும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகிவிடும். இதனால் இதர மூன்று படங்களுக்கும் சரியான திரையரங்குகள் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் கடைசி சமயத்தில் இரு படங்களாவது போட்டியிலிருந்து வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பொங்கலன்று வெளிவரமுடியாத படம் அல்லது படங்கள் ஜனவரி 25 அல்லது ஜனவரி 26 அன்று வெளியாக வாய்ப்புள்ளது.

*

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து ஒரு பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது:

நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், தேதிகள் பிரச்னைகளால் அவர் கவண் படத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். ஞானவேல்ராஜா ஒரு படம் பண்ண அழைத்தார். குறுகிய காலத்தில் முடிவு செய்யவேண்டியதாக இருந்தது. நேரம் குறைவாக இருந்ததால் என்னுடைய சொந்தக் கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கை இயக்க ஒப்புக்கொண்டேன். அதிகாரபூர்வமாக உரிமம் வாங்கி ரீமேக் செய்துள்ளோம். ஆனால் என் பாணியில் ரீமேக்கை இயக்கியுள்ளேன். ஸ்பெஷல் 26 படத்தைத் தாண்டிய ஒரு நிஜ சம்பவத்தைப் படத்தில் இணைத்துள்ளேன். ஸ்பெஷல் 26 போன்ற ஒரு படத்தில் சொடக்கு மேல பாடலுக்கு இடம்கிடையாது. பொழுதுபோக்கான ஒரு படம் தரவேண்டும். அதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் படம் இயக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் கதைக் களம் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ளார். வட சென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவரின் பின்னணிதான் கதைக்களம் இது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார்.

எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் - குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ளார். 

விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதுர வீரன். இசை - சந்தோஷ் தயாநிதி.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com