'காலா'வுக்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணைகிறாரா ரஜினி?

கபாலி, காலா என்று தொடர்ந்து பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வருகிறார்.
'காலா'வுக்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணைகிறாரா ரஜினி?

கபாலி, காலா என்று தொடர்ந்து பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வருகிறார். இந்த 'க' வரிசைப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு படத்தில் இந்த ‘ர’ கூட்டணி ரஞ்சித்-ரஜினி இணையவிருக்கிறார்கள் என்ற புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வலம் வருகிறது. இந்தப் படம் ஒரு காத்திரமான அரசியல் படமாக இருக்கும் என்பதும் கூடுதல் தகவல்.

தற்போது ரஜினியின் மீதுதான் அனைவரின் பார்வையும் உள்ளது. அவர் அடுத்து என்ன செய்யவிருக்கிறார் என்பதும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. தாம் நடித்து வரும் திரைத்துறையில் ஆகப் பெரிய வெற்றிகளை அனாயசமாகச் சந்தித்தவர் ரஜினி. ஆனால் அவரது அரசியல் பிரவேசம் மட்டும் நீண்ட எதிர்ப்பார்ப்புக்குப் பிறகும், பலத்த சர்ச்சைகளுடனும் நிகழ்ந்துள்ளது. ஒரு சாரார் ரஜினி உதாரண அரசியல்வாதியாக திகழ்வார் என்றும், ஒரு சாரார் அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது, அரசியலில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களைப் பொருத்தவரையில், தி பாஸ் இஸ் ஆல்வேய்ஸ் ரைட் (The Boss is always right) என்பதுதான் தாரக மந்திரம். ரஜினியின் ரசிகர்களே அவர்களின் முதன்மைத் தொண்டர்களாக விளங்குவார்கள். அவரது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதும் உறுதி.

ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு காலா மற்றும் 2.0 திரைப்படங்கள் வெளிவர உள்ளன. இதற்கிடையே ஷங்கரின் இயக்கத்தில் முதல்வன் 2 படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் ரஜினி அப்படத்தில் நடிக்கவில்லை.  ஷங்கர் கமலை அப்படத்தில் நடிக்கக் கேட்டுள்ளார் என்றும் தெளிவானது. தற்போது ரஜினி பா.ரஞ்சித்துடன் மூன்றாவதாக ஒரு படத்தில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ரஜினியின் அரசியல் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரு படமாக இருக்கும் என்றும் அவரது அடுத்தக் கட்ட நகர்விற்கான ஒரு பதிவாகவும் இருக்கும் என்கிறது அந்தச் செய்தி. இந்தப் பட விவாதம் ரஜினி ரஞ்சித்துக்கு இடையே ஏற்கனவே நடைபெற்றுவிட்டது என்றும், காலா வெளியான பிறகே இது குறித்த செய்திகளை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், அந்தப் படமே ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

திரைப்படங்கள் அரசியல் மாற்றங்களை உருவாக்கும் வலுவான சாதனம் என்பது வரலாற்று உண்மை. தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மனத்தில் விதைக்க திராவிடக் கட்சிகள் சினிமாவை எவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. அதே வழியில் ரஜினி இப்போது இறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின் கடைசிப் படம் என்பதால் நிச்சயம் அத்திரைப்படம் கவனம் பெறும் என்றும், அதன் மூலம் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள தயாராகிவிட்டார் என்கிறது அச்செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com