பாலியல் தொல்லை எதிரொலி: தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க மாட்டேன் என பிக் பாஸ் வெற்றியாளர் பேட்டி

பாலியல் தொல்லைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் உங்கள் நடத்தை மீது கேள்வி... 
பாலியல் தொல்லை எதிரொலி: தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க மாட்டேன் என பிக் பாஸ் வெற்றியாளர் பேட்டி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த மோசமான அனுபவம் காரணமாக இனிமேல் நான் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கமாட்டேன் என ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை வென்ற ஷில்பா ஷிண்டே கூறியுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 11, அக்டோபர் 1 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கடந்த ஏழு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கியதுபோல இந்த வருடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். 

நேற்று, இந்த சீசன் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நடிகை ஷில்பா ஷிண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மற்றொரு பாலிவுட் நடிகையான ஹினா கான், இரண்டாம் இடம் பெற்றார். 

டாஸ்க்குகளில் ஆர்வமாகப் பங்குபெறாவிட்டாலும் தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாததால் 40 வயது ஷில்பா, ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றியாளர் ஆகியுள்ளார். 

இரு தெலுங்குப் படங்களிலும் ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்துள்ள நடிகை ஷில்பா, ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இனிமேல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கமாட்டேன். திரைத்துறையில் கவனம் செலுத்துவேன் என்று ஷில்பா கூறியுள்ளார். Bhabhi Ji Ghar Par Hain என்கிற தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்றபோது அவருக்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை அளித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது காவல்துறையில் புகார் அளித்தார் ஷில்பா.

தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து ஊடகங்களில் வெளிப்படையாகப் பேசினார். இதனால் அவருக்குத் தொலைக்காட்சியில் வாய்ப்புகள் குறைந்துபோனதாகக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியை வென்றபிறகு ஷில்பா ஷிண்டே கூறியதாவது:

இனிமேல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்காமல் திரைத்துறையில் கவனம் செலுத்தவுள்ளேன். இத்தனை வருடம் தொலைக்காட்சித் துறையிலிருந்தும் என்னைச் சிலர் நடத்திய விதத்தைக் கண்டு மனமுடைந்ததால் இம்முடிவை எடுத்துள்ளேன். இனிமேல் தொலைக்காட்சித் துறையில் பணியாற்ற விருப்பமில்லை. முக்கியப் புள்ளிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கூறினால் அது நம் தொழிலைப் பாதிப்பதாக உள்ளது. பாலியல் தொல்லைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் உங்கள் நடத்தை மீது கேள்வி எழுப்புவார்கள். உங்கள் தொழிலை நாசம் செய்வார்கள். அதிகாரத்தைக் கொண்டு உங்களை வீழ்த்துவார்கள். இதுபோன்ற நாகரிகமான மாபியாகளுக்கு எதிராக இயங்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை வென்றதில் மகிழ்ச்சி. கடந்த 15 வருடங்களாக மக்கள் என்னை விடவும் நான் நடித்த கதாபாத்திரங்களை நேசித்துள்ளார்கள். நான் நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. பிக் பாஸ் வழியாக என்னை அவர்கள் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com