ப்ப்பா... யாருடா இந்தப் பொண்ணு?!

ப்ரியா பவானி சங்கர் வரிசையில் இவருக்கும் சீரியல் டு சினிமா கதாநாயகி ஆகும் ஆர்வம் இருக்கிறதாம்.
ப்ப்பா... யாருடா இந்தப் பொண்ணு?!

ரண்யா துரை சுந்தர்ராஜ், சமீபத்தில் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரின் நாயகி. பொதுவாக சீரியல் ரசிகர்களுக்கு சீரியலில் வரும் அனைத்து நடிகர், நடிகையர்கள்பாலும் சொந்த மனிதர்களைப் போல சிறு பிரியம் இழையோடத்தான் செய்யும் என்றாலும் சிலரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாத குறையாக ரசிப்பார்கள், புகழ்வார்கள். அந்த வரிசையில் சீரியலில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை மொத்தமாகக் கொள்ளையடித்த நடிகைகள் என ஒரு சிலரை பட்டியலிட்டால் அதில் இவருக்கும் இனி இடமுண்டு.

இந்த விஷயத்தில் சித்தி ‘சாரதா’, மெட்டி ஒலி ‘காயத்ரி’, கோலங்கள் ‘அபி’, தென்றல் ‘துளசி’, காதல் முதல் கல்யாணம் வரை ‘ப்ரியா’ வரிசையில் அடுத்தபடியாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த கதாபாத்திரமாக நெஞ்சம் மறப்பதில்லை ‘சரண்யாவும்’ இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம். 

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இவர் அணிந்து வரும் டிசைனர் பிளவுஸ்கள் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல், நிமிடத்திற்கொருமுறை மாறும் கியூட்டான முக பாவனைகள் வரை அனைத்தையும் சீரியல் ரசிக சிகாமணிகள் ரசியோ, ரசியென்று ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது புகழ்ச்சியில்லை நிஜமே! இந்த சீரியலின் மூலம் இவர் கவனிக்கத்தக்க நடிகையாகி இருக்கிறார்.

அது சரி, ஆனால் யார் இந்த சரண்யா? 

சரண்யாவின் நிஜப்பெயரே சரண்யா தான், சீரியலில் இப்போது தான் பிளஷ் டூ முடித்து விட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாற்போல கதாபாத்திரம் அமைந்தாலும் நிஜத்தில் அவர் ஒரு ஊடகவியலாளர்.

கலைஞர் டி.வி, ராஜ் மியூசிக், ஜீ டி.வி, புதிய தலைமுறை, நியூஸ் 18 சீனியர் நியூஸ் ஆங்கர் எனப் பல ஊடகங்களில் பணியாற்றியதோடு பாபி சிம்ஹா நடித்த 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' எனும் திரைப்படத்திலும் இணைந்து  நடித்திருக்கிறார்.

இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் MA பிராட்காஸ்டிங் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். 

படித்துக் கொண்டிருக்கும் போதே கலைஞர் டி.வியில் வாய்ப்புக் கிடைக்க மீடியாவுக்கு வந்து விட்டார். அதற்கப்புறம் அவர் வேலை பார்த்த நிறுவனங்களின் பட்டியல் தான் மேலே இருப்பவை.

ஒரு ஊடகவியலாளராக சரண்யா பதிவு செய்ய விரும்புவது, ‘செய்தி சேகரிக்கச் செல்கையில் பல நேரங்களில் கையறு நிலையில் தான் நிற்க வேண்டியதாகி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் ராமேஸ்வரத்தில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அங்கே செய்தி சேகரிக்கச் சென்றிருக்கையில் அங்குள்ள மீனவ மக்களின் அவலங்களைக் கண்டு அங்கிருந்த மீனவப் பெண்களின் அழுகையைக் கண்டு, ஆத்திரத்தைக் கண்டு ஒரு ஊடகவியலாளராக பதிலின்றி கையறுநிலையில் நிற்க வேண்டியிருந்தது துயரமான விஷயம். இந்த அரசுக்குத் தெரியும் தானே மீனவர்களின் ஆறாத்துயரம் எதனால் என்று? அப்புறமும் ஏன் அவை இன்னும் தொடர்கின்றன? என்பது மாதிரியான கையறுநிலைகள் பல சமயங்களில் எனக்கு மட்டுமல்ல அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உண்டு என்கிறார்.

ஒரு ஊடகவியலாளர் என்பதைத் தாண்டி தற்போது சீரியல், சினிமா என டிராக் நீண்டு கொண்டே சென்றாலும் அதைத் தவிர புத்தக வாசிப்பு சரண்யாவுக்கு ரொம்பப் பிடித்த விஷயமாம். ஆரம்பத்தில் சிறுவர் மலர், அம்புலி மாமா என வாசிக்க ஆரம்பித்து இப்போது தீவிர இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து ஜோ.டி.குரூஸின் கொற்கை, ஜெயமோகனின் காடு என வாசித்துக் கொண்டிருக்கிறாராம்.

பொண்ணுக்கு வாசிப்புக்கு அடுத்தபடியாக ஆர்கானிக் ஃபார்மிங் பிடிக்குமாம். இன்றைக்கு நோயே இல்லாமல் வாழ்ந்து இறக்கும் மனிதர்கள் அரிது. அப்படியான ஒரு வாழ்க்கை எல்லோருக்கும் அமையனும்னா நம் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையிலான உரங்களையும், பூச்சி மருந்துகளையும் தவிர்க்கக் கூடிய இயற்கை வேளாண்மையைத் தான் நாம் நம்பியாக வேண்டும். எனக்கு அது மிகப்பிடித்த விஷயம் என்கிறார். அரசியல், சினிமா, சீரியல் நடிப்பு, வாசிப்பு, மீடியா தவிர சரண்யாவுக்குப் பிடித்த விஷயமென்றால் அது இது தானாம்!

சரண்யாவுக்குப் பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? என்றால் ‘பர்கா தத்’ என்கிறார். பர்கா தத் குறித்த சர்ச்சைகள் எல்லாம் தாண்டி ஊடகத்துறையில் தனது இருப்பைப் படு அழுத்தமாக பதிவு செய்த வகையில் பர்கா தத் தனது ஆதர்சம் என்கிறார்.

ப்ரியா பவானி சங்கர் வரிசையில் இவருக்கும் சீரியல் டு சினிமா கதாநாயகி ஆகும் ஆர்வம் இருக்கிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com