ஜூலி நடிக்கும் ‘அம்மன் தாயி’: ஆடி மாதம் வெளியீடு!

ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார்...
ஜூலி நடிக்கும் ‘அம்மன் தாயி’: ஆடி மாதம் வெளியீடு!

ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக்பாஸ் என பிரபலமானவர் ஜூலி. தற்போது சினிமாவில் நடித்து வரும் இவர், "அம்மன் தாயி' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அன்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

இரட்டை இயக்குநர்கள் வரிசையில் மகேஸ்வரன் - சந்திரஹாசன் இருவரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்குகின்றனர். அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே இப்படத்தின் கதை. கோயில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியிலிருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் தனித்துவமாகக்காட்டியிருக்கிறார்கள்.

இயக்குநர்கள் இப்படம் பற்றி கூறியதாவது: ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யம் கொண்டு இதில் நடித்தார். அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்கள் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளார்'' என்று கூறியுள்ளார்கள். 

இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜூலி ட்விட்டரில் கூறியதாவது:

இது அற்புதமாக இருக்கப்போகிறது. இந்தப் படத்தின் மீது அதிக ஆர்வமாக உள்ளேன். இது திரைப்படம் மட்டுமல்ல, படக்குழுவினரின் கடுமையான உழைப்பும்கூட. உங்களுடைய வாழ்த்துகளால் இது வெற்றியை அடையவுள்ளது என்று கூறியுள்ளார்.

(ஆனால் ஒன்று - பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தன்னுடைய பெயரை ஜீலி என்று எழுதி பலருடைய கிண்டலுக்கு ஆளாகினார். இந்த போஸ்டரிலும் ஜூலியின் பெயர் ஜீலி என்றே எழுதப்பட்டுள்ளது!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com