மும்பையின் வியப்பு: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

மும்பையின் வியப்பு: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

உறவினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக துபை சென்றிருந்த ஸ்ரீதேவி, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென உயிரிழந்தார். அதையடுத்து, அவரது உடல் பிரதே பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டு வரப்பட்டது.

மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அருகில் உள்ள செலிபரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்துக்கு புதன்கிழமை காலை 9 மணியளவில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. ஆனால், காலை 6 மணிக்கே ஏராளமானோர் அந்த வளாகம் முன் திரண்டிருந்தனர். தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டு சேலை அணிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடல் அருகே கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி, மகன் அர்ஜுன் கபூர், மைத்துனர்கள் அனில் கபூர், சஞ்சய் கபூர், உறவினர்கள் ஹர்ஷ்வர்த்தன் கபூர், சோனம் கபூர், நடிகர்கள் ஷாருக் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், பிற்பகல் 2 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வெண்ணிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஸ்ரீதேவியின் உடல், 7 கி.மீ. தொலைவில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகன மையத்தில் ஸ்ரீதேவியின் உடல் அருகே அவரது குடும்ப உறுப்பினர்கள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். அதையடுத்து, அவரது உடலுக்கு கணவர் போனி கபூர் தீ மூட்டினார். தகன மையத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஸ்ரீதேவியின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. தகன மையத்தில் அவரது உடலுக்கு மகாராஷ்டிர காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை சாதனையை உருவாக்கியுள்ளது. 1980-ல் முகமது ரஃபி இறந்தபோதும் 2012-ல் ராஜேஷ் கண்ணா இறந்தபோதும் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். அதேபோல ஸ்ரீதேவியின் ஊர்வலமும் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

நடிகரும் இயக்குநருமான சதிஷ் கெளசிக் இதுகுறித்து கூறும்போது: எந்த ஒரு இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. அனைவரும் ஸ்ரீதேவிக்காக அழுதார்கள். அவரை ஒருமுறையேனும் பார்க்காதவர்கள்கூட ஸ்ரீதேவியின் இறப்பால மிகவும் துயரத்தில் இருந்தார்கள். நாடே சோகத்தில் இருந்தது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com