சீனாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டிய சல்மான் கான் படம்!

அமீர் கான் படங்களுக்கு சீனாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை அடுத்து சல்மான் கானின் படமும் குறுகிய நாள்களில்...
சீனாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டிய சல்மான் கான் படம்!

அமீர் கான் படங்களுக்கு சீனாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை அடுத்து சல்மான் கானின் படமும் குறுகிய நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

சல்மான் கானின் சூப்பர் ஹிட் படமான பஜ்ரங்கி பைஜான், கடந்த வாரம் சீனாவில் வெளியானது. சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் 8000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்திய நடிகர்களில் அதிக வசூலைக் கண்ட நடிகர் என்கிற பெருமை சல்மான் கானுக்கு உண்டு. இவருடைய 12 படங்கள் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை அடைந்துள்ளன. அதேபோல இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த 6 படங்களில் மூன்று, சல்மான் நடித்தவை.

இந்திய அளவில் சல்மான் கான் வசூல் மன்னனாக இருந்தாலும் சீனாவில் இன்றைய தேதிக்கு அமீர் கான் தான் நெ.1 இந்திய நடிகர். அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 12 மடங்கு வசூலித்தது டங்கல். ரூ. 1234 கோடி வசூலித்து ($193 மில்லியன்) அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது. மற்றொரு அமீர் கான் படமான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் வசூல் சாதனை புரிந்துள்ளது. ரூ. 750 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதற்கிடையில் தனது படத்தை சீனாவில் வெளியிட்டு அங்கும் பலத்த போட்டியை உருவாக்கியுள்ளார் சல்மான் கான்.

2015-ல் வெளியான பஜ்ரங்கி பைஜான், இந்தியாவில் மட்டும் ரூ. 320 கோடி வசூலித்தது. இந்நிலையில் சீனாவில் இந்தியப் படங்களுக்குக் கிடைக்கும் அதிக வரவேற்பால், பஜ்ரங்கி பைஜான் படமும் சீனாவில் பல மடங்கு வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது.

இன்றுடன் சீனாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது பஜ்ரங்கி பைஜான். சீனாவில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட நான்காவது இந்தியப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பிகே, டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ஆகிய மூன்று அமீர் கானின் படங்களும் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. 

மேலும் வெளிநாட்டில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய 5-வது படம் என்கிற பெருமையும் பஜ்ரங்கி பைஜான் படத்துக்குக் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ. 100 கோடி வசூல் கண்ட இந்தியப் படங்கள்

1. டங்கல் - சீனா 

2. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் - சீனா 

3. பாகுபலி 2 - அமெரிக்கா 

4. பிகே - சீனா  

5. பஜ்ரங்கி பைஜான் - சீனா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com