வித்யாசமான நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் துணிவைப் பாராட்டும் இந்தி இயக்குநர்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்ஃபான் கான். 1988-ம் ஆண்டு மீரா நாயர் இயக்கிய சலாம் பாம்பே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
வித்யாசமான நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் துணிவைப் பாராட்டும் இந்தி இயக்குநர்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்ஃபான் கான். 1988-ம் ஆண்டு மீரா நாயர் இயக்கிய சலாம் பாம்பே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து நல்ல கதையம்சம் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். லஞ்ச் பாக்ஸ், பிகு உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பாற்றலால் அனேக ரசிகர்களை கவர்ந்தவர்.

அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி மீடியம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. போலவே 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', 'லைஃப் ஆஃப் பை' உள்ளிட ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகத் திரை ஆர்வலர்களின் கவனத்தையும் பெற்றார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னார் தனது ட்விட்டரில் தன்னை ஏதோ வித்தியாசமான நோய் தாக்கியிருப்பதாகவும் அது குறித்து தானே விரைவில் சொல்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இர்ஃபான் கானுக்கு நியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற அரிய வகை நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

ட்விட்டரில் இது பற்றி பதிவிட்டவுடன் பாலிவுட் திரையுலகம் அவருக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாக ட்வீட்களை அனுப்பியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'அனைவரின் பிரார்த்தனையும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்த நோய்க்கான சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளேன். அதன்பின் இதைப் பற்றி நிறைய நிறைய கதைகள் சொல்வேன். ந்யூரோ என்பதால் இது ஏதோ மூளை சம்பந்தப்பட்ட நோய் என்று நினைக்காதீர்கள், இது குறித்து கூகுள் மூலம் தேடித் தெரிந்து கொள்ளலாம். திரும்ப வந்து நிறைய கதைகளை சொல்வேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது’ என ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டார் இர்ஃபான் கான். நோய் வந்தவுடன் பயந்துவிடாமல் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள முடிவெடுத்துவிட்டார் இர்ஃபான் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இர்ஃபான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கும் பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ், அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'இர்ஃபான் ஒரு போராளி. அவர் இந்தப் போரில் நிச்சயம் வெற்றிப் பெறுவார். நானும், தீபிகா படுகோன் மற்றும் ப்ரேர்னா ஆகியோர் அவர் மீண்டு வருவதற்காக காத்திருக்கிறோம். எங்களுடைய போராளி  விரைவில் வெற்றியாளராக புத்துணர்வுடன் திரும்பி வரும் வரையில் படத்தின் தேதிகளை மாற்றியிருக்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார் இயக்குநர்.

பகட்டும் பணமும் பரபரப்பும் நிறைந்த பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் ஒரு நடிகருக்காக காத்திருக்கும் நல்லுள்ளம் கொண்ட இயக்குநர்கள் இன்றும் உள்ளனர் என்பது ஆறுதலான விஷயம். ரசிகர்களின் வேண்டுதல்களினால் இர்ஃபான் கான் விரைவில் குணமடைந்து நடிக்கத் தொடங்குவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com