விஜய் படத்துக்கு மட்டும் அனுமதியா?: சர்ச்சைகளுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்!

இந்தப் படப்பிடிப்பில் ஹைதராபாத் ஸ்டண்ட் கலைஞர்கள் ராம் - லஷ்மண் இடம்பெற்றுள்ளதால் அவர்களுடைய கால்ஷீட்டின் முக்கியத்துவத்தை மதித்து...
விஜய் படத்துக்கு மட்டும் அனுமதியா?: சர்ச்சைகளுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே மார்ச் 23 வரை படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கென தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. . இந்தப் படப்பிடிப்பில் ஹைதராபாத் ஸ்டண்ட் கலைஞர்கள் ராம் - லஷ்மண் இடம்பெற்றுள்ளதால் அவர்களுடைய கால்ஷீட்டின் முக்கியத்துவத்தை மதித்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல சசிகுமார் நடித்துவரும் நாடோடிகள் படத்தின் மதுரைப் பகுதி படப்பிடிப்புகள் மார்ச் 24 அன்று முடியவடையவுள்ளது. எனவே இப்படத்துக்கும் தில்லியில் நடைபெற்று வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்பிடிப்புக்கும் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று மொத்தமாக 4 படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விஜய் படத்துக்கு மட்டும் படப்பிடிப்பைத் தொடர அனுமதி அளித்தது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா ஒரு பேட்டியில், இந்த வேலைநிறுத்தக் காலத்தில் விஜய் படத்துக்கு அனுமதி அளித்தது ஏன்? வேலை நிறுத்தம் முடியும்வரை சன் பிக்சர்ஸ் பொறுமை காத்திருக்க முடியாதா? இதுபோன்று எல்லோருக்கும் படப்பிடிப்பு நடத்தவேண்டிய தேவைகள் உள்ளன என்று பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் படத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் துரைராஜ் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்புகள் அனைத்தும் 16-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் அரங்குகள் அமைத்து ஏற்கெனவே படப்பிடிப்புகள் நடத்தி வந்த படங்களின் படப்பிடிப்புகளுக்கு கோரிக்கை விடுத்தால் ஓரிரு நாள்கள் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 4 படங்களின் படப்பிடிப்புகளைத் தொடர அனுமதி கேட்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்புகளுக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்களை அழைத்து வந்துள்ளார்கள். படப்பிடிப்பு நின்றால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் அனுமதி அளிக்கப்பட்டது. 4 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காகவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com