தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்கும்: அபிராமி ராமநாதன்

உள்ளாட்சி கேளிக்கை வரி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள்
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்கும்: அபிராமி ராமநாதன்

உள்ளாட்சி கேளிக்கை வரி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மீண்டும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்; வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்குகள் உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 -ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த சில நாள்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால், இரண்டு நாள்கள் காத்திருக்கும்படி முதல்வர் பழனிச்சாமி தெரிவித்ததாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 வழக்கம் போல் இயங்கும்: பேச்சுவார்த்தைக்குப் பின் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசியது:-
 எங்களுடைய கோரிக்கைகளில் எவையெல்லாம் முடியுமோ, அதிகாரிகளுடன் பேசி அவற்றை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
 எனவே, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் எல்லா திரையரங்குகளும் மீண்டும் இயங்கும். திரையரங்குகளிடம் எந்தப் படங்கள் உள்ளதோ அவை திரையிடப்படும். தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் எங்களிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். எங்களுடைய சங்க உறுப்பினர்களுடன் அந்த கோரிக்கைகளைக் கலந்தாலோசித்து வருகிறோம். தமிழ்ப் புத்தாண்டு முதல் தமிழ் சினிமாவில் வழக்கமான பணிகள் நடக்கும் என நம்புகிறோம் என்றார் அபிராமி ராமநாதன்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com