தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று (நவம்பர் 8) வெளியானது.
இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். எனினும் முதல் நாளன்று அபார வசூலை அடைந்துள்ளது.
இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2018-ல் இந்தியாவில் அதிக வசூலை அடைந்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ. 34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது. அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது. ஹிந்தியில் ரூ. 50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் எதிர்மறை விமரிசனங்களால் வரும் நாள்களில் இதன் வசூல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.