அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!

நடிகனாக "ஆருத்ரா' எனக்கு 6 - வது படம். நான் நடிகனாக மட்டும் நில்லாமல் தயாரித்து இயக்கும் இரண்டாவது படம்.
அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!

கவிஞர், எழுத்தாளர், நடிகர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முக திறமை கொண்டவர். பல்வேறு நூல்களை எழுதி உள்ள இவர், தனது திறைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். தனக்கு 'பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார், கவிஞர் பா. விஜய்:

ஆருத்ரா: நடிகனாக 'ஆருத்ரா' எனக்கு 6 - வது படம். நான் நடிகனாக மட்டும் நில்லாமல் தயாரித்து இயக்கும் இரண்டாவது படம். நல்ல படமாக, மக்கள் பார்க்கும் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து 'ஆருத்ரா' வை எடுத்துள்ளேன். இந்தப் படம் ஆங்கிலத்தில் சொல்வார்களே social Crime thriller வகையைச் சேர்ந்தது. இன்றைய செய்தித்தாளை பார்த்தாலே பக்கத்துக்கு பக்கம் வரும் செய்தி பெண் குழந்தைகளை மானபங்கபடுத்துவதுதான் (Child abuse). இது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து எடுக்கப்பட்ட படம்தான் ஆருத்ரா. பொழுதுபோக்கு அம்சங்களுடன், ஜனரஞ்சகமான ஒரு படமாக நானே தயாரித்து, இயக்கி, நடித்துள்ளேன். இதில் ஒரு செய்தியும் உள்ளது. அது படிப்பினையாகவும் இருக்கும். அதே சமயம் அது தெரியாமல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்து இருக்கும். அடுத்த வாரம் இப்படம் வெளியாகும்.

கலைஞர் கருணாநிதி: என் இதயத்தோடு என்றுமே இணைந்த தலைவர். 'வித்தகக் கவிஞர் விஜய்' என்று எனக்கு 2005- ஆம் ஆண்டு பட்டம் கொடுத்து பாராட்டியவர். அவருக்கு முன் நான் கவிதையும் பாடியுள்ளேன். அவரது கதை வசனத்தில் நடித்தும் உள்ளேன். நான் வாழ்க்கையில் நிரம்ப பேறு பெற்றவன் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவை இல்லை. நான் மிக சிறியவன் என்றாலும் என்னோடு அவர் பழகியது நான் பெற்ற பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். 

கிராமம்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உட்கோட்டை. எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த ஊர். அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. நெசவும் விவசாயமும்தான் இங்குள்ளவர்களின் தொழில். எனக்கு சிந்தனை கொடுத்த ஊர். என்னை சிறகடித்து பறக்கச் செய்யும் ஊர். நான் இங்கு செல்லும் போதெல்லாம் இந்த ஊரில் உள்ள பசுமை, இயற்கை வளம் என்னை தாலாட்டும். நான் என்னை அறியாமல் பல நாட்கள் தனியாக நடந்து சென்று மகிழ்ந்ததுண்டு. ஊரில் உள்ள வெள்ளந்தியான மக்கள், அவர்கள் பழகும் தன்மை, உபசரிக்கும் விதம் இதை எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.

நண்பர்கள்: கோவைதான் நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இங்கு என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் பலர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். இப்போது பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்து விட்டதே, அதன்மூலம் பள்ளி நாட்களில் என்னோடு படித்த பல நண்பர்கள், உதாரணமாக வசந்த், ஜெயராமன், பிரபுராஜ், போன்ற 20-வதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இன்றும் என்னுடன் பேசிக் கொண்டும், நான் கோவை சென்றாலோ, இல்லை அவர்கள் சென்னை வந்தாலோ நாங்கள் பேசிப் பொழுதை போக்குவோம். 

கவிதை: நான் முதலில் கவிதை எழுத தொடங்கியது 10 - ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது. 12 - ஆம் வகுப்பில் நான் படிக்கும் காலத்தில்தான் எனது முதல் கவிதை புத்தகம் 'இந்த சிப்பிக்குள்' வெளியானது. எனது அப்பாவின் ஒரு மாத சம்பளப் பணத்தை அப்படியே அந்த புத்தகத்தை வெளிக்கொணர உபயோகித்துக் கொண்டேன். இந்த இலக்கிய உலகில் நான் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தது அன்றுதான். இதுவரை நான் சுமார் 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளேன். இதில் பெரும்பான்மையானவைகள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டவை.

காவியக் கவிஞர் வாலி: இவர்தான் திரை உலகில் எனது குருநாதர். என்னை பொருத்தவரையில் அவர் ஒரு பல்கலைக்கழகம். என் மீதும், எனது எழுத்தின் மீது அலாதியான பிரியம் கொண்டவர். நான் திரையுலகில் நுழைந்த பிறகு அவரது பழக்கம் ஏற்பட்டவுடன் பேரானந்தம் கொண்டேன். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அன்று ஒரு பெரிய கேக்கை எடுத்துக் கொண்டு போய் அவரை வெட்டச் செய்வேன். ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதத்தை அவருக்கு வரவழைத்து கொடுப்பதும் நான் தவறாமல் செய்யும் விஷயமாக இருந்தது. 

கன்னிமாரா நூலகம்: என்னை போன்ற படைபாளிக்கு அது சொர்க்கலோகம். நான் எழுதிய 'உடைந்த நிலாக்கள்' என்ற நூலுக்கு அங்கிருந்துதான் குறிப்புகளை திரட்டினேன். இந்த நூலை வைத்து சுமார் 200 மாணவர்கள் தங்களது M.Phil ஆராய்ச்சியை செய்துள்ளார்கள். நான் இந்த நூலகத்தில் வந்து உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாமல், மூடும்வரை இருந்து பின்னர் அடுத்த நாளும் வந்து உட்கார்ந்திருக்கிறேன். 

யாழ்ப்பாணம்: சமீபத்தில் ஓர் இலக்கிய கூட்டதிற்காக யாழ்பாணம் சென்றிருந்தேன். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எனக்கு எப்பொழுதுமே அவர்கள் பேசும் தமிழ் மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் சிலோன் ரேடியோவில் அப்துல் ஹமீத் பேசுவதை கேட்டுப் பழகியவர்கள். இன்றும் மறக்க மாட்டார்கள். நான் சென்ற இலக்கிய கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் தமிழ் மீது யாழ்ப்பாண மக்களின் விருப்பம் மற்றும் அவர்களின் அன்பும் வெளிப்பட்டது. தமிழன் எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு வருவான் என்பதற்கு மற்றொரு சான்று இது.

மெரீனா கடற்கரை: உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று இந்த கடற்கரையை கூறுவார்கள். ஒரு புறம் கூவம் நாற்றம் இருந்தாலும், காதலர்கள் தொல்லை செய்தாலும் இந்த மெரீனா கடற்கரைதான் பல சமயம் எனக்கும் எனது எழுத்துக்கும் தூண்டுகோலாக, இன்னும் சொல்லப் போனால் தூரிகையாக இருந்திருக்கிறது. சில புத்தகங்களை இங்கே ஆரம்பித்து முடித்திருக்கிறேன். பல பாடல்கள் இங்கு பூத்திருக்கின்றன. கடல் அலைகள் என்னை வந்து தொட்டுவிட்டு செல்லும் போதெல்லாம் எனக்கு ஒரு புது எண்ணம், செய்தி அல்லது வார்த்தை உதயமாகிறது என்று கூறினால் அது மிகை இல்லை. மெரீனா கடற்கரையின் மடி, பல சமயங்களில் எனது கவிதையின் உயிர் நாடி என்றும் கூறலாம். 

தமிழ் சினிமா: இந்த தமிழ் சினிமாவை நம்பினோர் கைவிடப்படார் என்று தைரியமாக சொல்லலாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தமிழ் சினிமாவை நேசித்தேன். பலநாட்கள் யோசித்தேன். பின்பு தமிழை ஆழ்ந்து வாசித்தேன். பாடலாசிரியன் ஆன பின்னர் இன்று நான் பல வேலைகளை செய்கிறேன். அதாவது பாடலாசிரியன், நடிகன், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர். இப்படி பல துறைகளிலும் நான் வளர்ந்துள்ளதற்கு காரணம் இந்த தமிழ் சினிமாவை நம்பியதால்தான். முடிவு செய்தபின் இங்கு வந்து முயன்று தோற்றதாக யாரும் இல்லை. 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்தில் நான் கற்றுக் கொண்டது எந்த வேலையை நீ ஆத்மார்த்தமாக செய்கிறாயோ, அந்த வேலை உன்னை கண்டிப்பாக உயர்த்தும். என்னை உயர்த்தி இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com