அஸ்ஸாமி திரைப்படம் "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஆஸ்கருக்கு பரிந்துரை

அஸ்ஸாமி திரைப்படம் "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஆஸ்கருக்கு பரிந்துரை

ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அஸ்ஸாமி மொழித் திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (எஃப்எஃப்ஐ) வெளியிட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அஸ்ஸாமி மொழித் திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (எஃப்எஃப்ஐ) வெளியிட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுக்காக அப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக எஃப்எஃப்ஐ தெரிவித்துள்ளது.
 ரீமா தாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படம் தேசிய விருது உள்பட பல முக்கிய விருதுகளை ஏற்கெனவே பெற்றிருப்பதும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 அஸ்ஸாம் மாநிலத்தின் கிராமம் ஒன்றைக் கதைக் களமாகக் கொண்ட அப்படம், வறுமையைத் தவிர வேறு எதையும் அறியாத 10 வயது சிறுமியின் கனவுகளை பேசுகிறது. கிதார் இசைக் கருவியை வாங்குவதையும், கிராமிய இசைக் குழு ஒன்றை அமைப்பதையுமே இலட்சியமாகக் கொண்ட அந்த பதின் பருவ சிறுமியின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலிகளும், வண்ணங்களும்தான் "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தின் கருப்பொருள்.
 பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த இப்படம் அஸ்ஸாம் திரைத்துறைக்கு புதிய கெüரவைத்தை ஏற்படுத்தித் தந்தது. இந்நிலையில், 91-ஆவது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய படங்களின் பட்டியலுக்கு அப்படமும் அனுப்பப்பட்டது. அதனுடன் சேர்த்து சஞ்சய் லீலா பன்சாலியின் "பத்மாவத்', அலியா பட் நடித்த "ராஸி', ராணி முகர்ஜியின் "ஹல்கா' உள்ளிட்ட 28 படங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை பரிசீலீத்த எஸ்.வி. ராஜேந்திர சிங் பாபு தலைமையிலான இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தேர்வுக் குழு, "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவது என பரிந்துரைத்தது.
 இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அப்படத்தின் இயக்குநர் ரீமா தாஸ், இது வடகிழக்கு மாநில திரைத் துறைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், ஆஸ்கர் விருதுக்கு "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' தேர்வாகும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com