சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' - சினிமா விமரிசனம்

மலையுச்சியின் ஒற்றையடிப்பாதையில் நடப்பது போன்ற கவனத்துடன் இதன் திரைக்கதையைக் கையாண்டுள்ளார் சுசீந்திரன்.
சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' - சினிமா விமரிசனம்

கல்லா கட்டும் ஒரே நோக்கத்துடன் முற்றிலும் வணிக விஷயங்களாகத் திணித்து திரைப்படங்களைப் பண்டமாக உருவாக்கும் வியாபாரிகள் ஒருவகை. இம்மாதிரியான பாணித் திரைப்படங்களின் இடையேயும் பொறுப்புடனும் மனச்சாட்சியுடனும் சமூகப் பிரச்னைகளை உரையாடும் இயக்குநர்கள் இன்னொருவகை. இயக்குநர் சுசீந்திரன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 

கிராமத்தின் சிறிய விளையாட்டுக் குழு முதல் தேசிய அளவிலான பெரிய குழு வரை, அவற்றில் எவ்வாறு சாதிய அரசியல் கலந்துள்ளது என்பதை முந்தைய திரைப்படங்களில் நுட்பமாக உரையாடியுள்ளார். இந்தமுறை மேலதிகத் துணிச்சலுடன் இறங்கி அடித்து ஆட முயன்ற முயற்சியே 'மாவீரன் கிட்டு'. சமகாலத்துக்கு மட்டுமல்ல பலகாலமாகவே இந்தியச் சமூகத்தில் புரையோடிருக்கிற பிரச்னையாக உள்ள சாதி என்கிற சமூகப் பாகுபாட்டைப் பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தம் திரைப்படங்களில் உரையாடுவது வரவேற்கத்தக்கது.

***
எண்பதுகளின் காலக்கட்டத்தில் இயங்கும் திரைக்கதை இது. பழநி அருகேயுள்ள புதூர் என்கிற கிராமம். தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்காகப் போரடிய ஒரு தலைவரின் மரணம் நிகழ்கிறது. அவரது பிணத்தை தங்களின் தெருக்களின் வழியாக எடுத்துச்செல்லக்கூடாது என ஆதிக்கச்சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று உள்ள கரடுமுரடான பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்ல வேண்டும்; ஆனால் மழைக்காலமென்பதால் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்கிற நிலைமை. விஷயம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாதகமாக நீதி வந்தாலும்கூட 'பிணத்தை எடுத்துச் செல்லலாம்' என்றுதான் தீர்ப்பு வந்திருக்கிறதே தவிர எவர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பில் இல்லை என்று ஆதிக்கச் சாதியினர் சாமர்த்தியமாகக் காயை நகர்த்துகிறார்கள். வன்முறையைத் தவிர்ப்பதற்காக காவல்துறையும் ஆதிக்கச்சாதிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. எனவே காவல்துறையினர் சடலத்தை தூக்கிச் செல்வது என்று  முடிவாகிறது. 

தங்களுக்காகப் பாடுபட்டவரின் பிணத்துக்குச் சரியான விதத்தில் மரியாதை செலுத்த முடியவில்லையே என்ற கொதிப்பு இருந்தாலும் அவருடைய சடலம் ஆதிக்கச் சாதியினரின் தெரு வழியாக செல்வது இந்தப் போராட்டத்தின் தற்காலிக வெற்றி என்கிற அளவில் சமாதானம் அடைகிறார்கள். 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருநாள்கொண்ட சேரியில் இதே போன்று சமீபத்தில் நிஜத்தில் நடந்த சாதியக் கொடுமைச் சம்பவத்தை அப்படியே தம்முடைய திரைப்படத்தில் இணைத்திருக்கும் சுசீந்திரனின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். அது சமகாலமாக இருந்தாலும் சரி, இந்தத் திரைக்கதை நிகழும் எண்பதுகளின் காலக்கட்டமாக இருந்தாலும் சரி, பிறப்பு முதல் இறப்பு வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் அவலம் பெரிதும் மாறாத நிலைமையே என்று இயக்குநர் இதைச் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம். 

இந்தியா முழுக்க சாதியம் என்பது ஆதிகால விஷமாக வேர் வரை பரவியிருப்பதற்குச் சற்றும் குறையாத உதாரணமாக இருக்கும் அந்தக் கிராமத்தில், பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மாணவனாக வருகிறான் இளைஞன் கிட்டு. (விஷ்ணு விஷால்). கல்வியின் வழியாகவே தன் சமூகம் முன்னேற முடியும் எனக் கருதுகிறார், அந்த ஊரின் போராளியான சின்ராசு (பார்த்திபன்). எனவே கிட்டுவை ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்கிறார். 

தாழ்த்தப்பட்ட சமூகம் தங்களுக்குச் சமமாக மெல்ல முன்னேறுவதைச் சற்றும் சகிக்க முடியாத ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு விஷயத்துக்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர். அந்த ஊருக்கு வரும் பேருந்தை நிறுத்துவதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தடுக்கின்றனர். ஆனால் பொதுநிதியைத் திரட்டி ஒரு பழைய பேருந்தை வாங்கி இயக்குவதின் மூலம் அவர்களின் சதி முறியடிக்கப்படுகிறது. எதிர்த்தரப்பு இன்னமும் உக்கிரமாகிறது.  

இளைஞன் கிட்டுவின் கல்வியைப் பாழாக்க வேண்டும் என்கிற வலை பின்னப்படுகிறது. ஆதிக்கச்சாதி நிகழ்த்தும் கொலைப்பழியொன்று அவன் மீது சுமத்தப்படுகிறது. இந்த சூழ்ச்சியை விவேகத்துடன் எதிர்கொள்ள முடிவு செய்கிறார் சின்ராசு. சாமர்த்தியமான ஒரு வியூகத்தின் மூலம் இதை மக்கள் போராட்டமாக திரட்ட முனைகிறார். இதன் மூலம் தங்களின் நீண்ட காலப் பிரச்னைகளுக்குச் சிறிய விடியலாவது பிறக்கும் என நம்புகிறார். 

சின்ராசுவின் நோக்கம் நிறைவேறிற்றா? கிட்டுவின் நிலைமை என்னானது போன்றவை பிற காட்சிகளில் விரிகின்றன. 


***

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சமாக திரைக்கதை கையாளப்பட்ட விதத்தைச் சொல்லவேண்டும். சாதியம் தொடர்பான திரைப்படங்கள் என்றால் ஒன்று பெரும்பாலும் வன்முறைக்காட்சிகளால் நிறைந்து இறுதிக்காட்சியில் நீதிக்கதையுடன் முடியும். அல்லது வணிகநோக்கத்துடனும் சாதியப் பெருமிதங்களுடனும் மசாலா திரைப்படமாக எரிச்சலூட்டும். ஆனால் மலையுச்சியின் ஒற்றையடிப்பாதையில் நடப்பது போன்ற கவனத்துடன் இதன் திரைக்கதையைக் கையாண்டுள்ளார் சுசீந்திரன். சாதியப்பாகுபாட்டின் அலவத்தை, ஆதிக்கச்சாதியினரின் வன்மத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் அதேவேளையில் அதுசார்ந்த பதற்றமோ, வன்முறையோ அல்லாமல் கட்டுப்பாடான நிதானத்துடன் காட்சிகளை உருவாக்கியிருப்பது சிறப்பு. 

சாதியம் சார்ந்த பதற்றம் ஏற்படும்போதெல்லாம் இதன் பாத்திரங்கள் அவற்றை முதிர்ச்சியாக எதிர்கொள்கின்றன. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவியின் உயிரைக் காப்பாற்ற அவளைத் தொட்டு தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை கிட்டுவுக்கு ஏற்படுகிறது. அந்த நேரத்து நெருக்கடியைச் சாமர்த்தியமாக எதிர்கொள்கிறான். ஆனால் உயிர் காப்பாற்றப்பட்டதை விட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் தங்கள் சமூகப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியதையே பிரச்னையாக முன்வைக்கிறார்கள். 

'நான் செஞ்சது, தப்புதான் மன்னிச்சுடுங்க' என்று கைகூப்பியபடி நிதானமாக வெளியேறுகிறான் கிட்டு. அவ்வாறு செய்யாமல் போனால் அது வன்முறையாக வெடிக்கும், தன்னுடைய எளிய சமூகத்துக்குப் பாதிப்பு ஏற்படும், தன் ஐஏஎஸ் கனவுக்கு இடைஞ்சல் ஏற்படும் என அவனுக்குத் தெரியும். இது கோழைத்தனமோ, பின்வாங்கலோ அல்ல. விவேகமான போராட்டத்தின் ஒரு வியூகம். ஐ.ஏ.ஏஸ் முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஆவதன் மூலம் தன் சமூகத்தின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடலாம் என்கிற தெளிவு அவனுக்கு இருக்கிறது. 

இதைப் போலவே போராளியான சின்ராசுவின் காட்சிகளும் இதே போன்ற முதிர்ச்சியுடன் அமைந்திருக்கின்றன. சாதியப்பதற்றத்தைத் தணியாமல் வைத்துக் கொள்வதில்தான் தங்களின் அரசியல் இருப்பு  இருக்கிறது என நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கான நீதி இந்தக் காட்சிகளில் அமைந்திருக்கின்றன. 


***

'மாவீரன்' மற்றும் 'கிட்டு' போன்ற பெயர் அடையாளங்கள், ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபனை நினைவுப்படுத்தும் நாயகனின் தோற்றம் ஆகியவற்றைப் படவெளியீட்டுக்கு முன்பு கவனித்தபோது இத்திரைப்படம் ஈழப்போராட்டம் தொடர்பானதாக இருக்குமோ என்கிற வலுவான அனுமானத்தை தந்தது. (இந்தியாவில் அப்படியெல்லாம் படமெடுத்து விட முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே இருந்தது). ஆனால் திரைப்படம் அவ்வாறாக உருவாக்கப்படவில்லை. எனில் எதற்காக இந்த அடையாளங்களை இயக்குநர் உருவாக்கினார் என்பதில் தெளிவில்லை. வீரத்தினால் மட்டுமல்ல தியாகத்தினாலும் சாதுர்யமான விவேகத்தினாலும் ஒரு சமூகப் போராட்டம் வெற்றி பெறும் என்கிற செய்தியை உணர்த்த விரும்பினாரோ என்று தோன்றுகிறது. 

பெரியவர்களின் உலகத்திலிருந்து இளம் மனங்களுக்குத் தன்னிச்சையாக கடத்தப்படும் சாதிய மனோபாவம் மற்றும் அது சார்ந்த வன்மம், அவை ஏற்படுத்தும் குழப்பம், அவை தெளிந்த பின் சமூகநீதியின் பால் மனம் திரும்பும் விதம் போன்றவற்றைக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான காட்சிகள் இயல்பாக உணர்த்துகின்றன. 

படம் எதைப் பற்றியது என்பது தொடக்கக் காட்சியிலேயே நமக்கு அழுத்தமாகப் புரிந்துவிடுகிறது. இது தொடர்பான விறுவிறுப்புகளோடு முதல் பாதி நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி இந்த சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு காதல் பாடல்கள் வேறு இடையூறாக வந்து எரிச்சலையூட்டுகின்றன. சின்ராசு நிகழ்த்தும் மக்கள் பேராட்டம், வார்த்தைகளில் மட்டும் பிரமாண்டமாகச் சொல்லப்படும்போது காட்சிகளில் அது வலிமையாக வெளிப்படவில்லை. 

ஆணவக்கொலையொன்று நிகழும் காட்சியில் அதை முன்பே எளிதாக யூகித்து விட முடிகிறது. (அந்தக் காட்சியில் நடித்த பெரியவரின் நடிப்பு அபாரமானதொன்று). போலவே இதன் உச்சக்காட்சியையும் எளிதாக யூகித்து விட முடிந்தது. மட்டுமல்லாமல் உச்சக்காட்சி அழுத்தமானதாக இல்லாமல் மொண்ணையாக முடிந்தது திரைக்கதையின் பெரிய பலவீனம். ஒரு நோக்கில் படம் முழுவதுமே ஸ்கூல் டிராமா போல சாதாரணமான உருவாக்கமாக இருப்பது போன்று ஒரு பிரமை. 

***

யுகபாரதியின் வசனங்கள் அருமை. வார்த்தை ஜாலத்துடனும் சினிமாத்தனமாகவும் இருந்தாலும் சில இடங்களில் சூழலின் பின்னணிக்குப் பொருத்தமான, அழுத்தமான உரையாடலாக அமைந்திருக்கிறது. 'சாப்பிடற சோத்துல கல்லு வந்து எரிச்சல்படுத்தறா மாதிரி, அவனுங்க எதையோ செஞ்சிக்கிட்டே இருக்காங்கல்ல' என்று ஆதிக்கச்சாதி பெரியவர் ஒருவர் உறுமும் காட்சியின் வசனத்தை உதாரணமாகச் சொல்லலாம். 

சில பலவீனங்கள் இருந்தாலும் ஏற்கெனவே விவரித்தபடி படம் முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் நிதானமான போக்குடன் நகர்கிறது. நடிகர்களும் இதைக் கச்சிதமாக எதிரொலிக்கின்றனர். தேவையற்ற ஒரு சாகசக் காட்சியைத் தவிர படம் முழுவதும் விஷ்ணு விஷால் ரசிக்கத்தக்க வகையில் இயல்பான அமைதியுடன் நடித்திருக்கிறார். இதைப் போலவே பார்த்திபனும். தனது வழக்கமான கோணங்கித்தனங்களைக் கைவிட்டு நடித்திருப்பது சிறப்பு. 

நடிகர்களின் வரிசையில் மிகவும் ஆச்சர்யப்படுத்தியது பரோட்டா சூரி. அவர் இந்தப்படத்தில் இருக்கிறாரா என்று கூட தோன்றும்படி ஓரமாக வந்து போகிறார். வழக்கமாக உரத்த குரலில் பேசி நகைச்சுவையூட்டும், சமயங்களில் எரிச்சலூட்டும் அவரது பாணியை முற்றிலுமாக முடக்கிப்போட்டு இயல்பாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

ஆதிக்கச்சாதிகளுக்கு ஆதரவாக இயங்கும் போலீஸ் வில்லனாக ஹரீஷ் உத்தமன் சிறப்பாக எரிச்சலூட்டியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்தை வேரறுக்கும் வகையில் நிதானமாக ஒவ்வொரு காயாக நகர்த்தும் நாகிநீடுவின் நடிப்பும் சிறப்பு. ஸ்ரீதிவ்யா வழக்கமான நாயகி. அமைதியான நடிப்பு.

எண்பதுகளின் காலக்கட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு விஷயத்தையும் சிரத்தையுடன் கவனித்து உருவாக்கியிருக்கும் கலை இயக்குநரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இமானின் பாடல்கள் வழக்கமான 'கும்கி'த்தனம். சூர்யாவின் ஒளிப்பதிவு எங்கும் உறுத்தலாக இல்லாமல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையைக் கருப்பொருளாகக் கொண்டு சிரத்தையுடன் உருவாக்க முனைந்திருக்கும் சுசீந்திரனின் பங்கு பாராட்டத்தக்கது. தேய்வழக்குக் கதைகூறல் முறையை இயக்குநர் பல இடங்களில் தவிர்க்க முயன்றிருந்தாலும் திரைப்படத்தின் பிற்பாதி கனமே இல்லாமல் சமநிலையை இழந்திருக்கிறது. 

வன்முறைக் காட்சிகளுக்கான வாய்ப்பிருந்தும் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு பிரச்னைக்கான ஆக்கபூர்வமான தீர்வை நிதானமான போக்கில் சொல்லியிருக்கும் காரணத்துக்காகவே 'மாவீரன் கிட்டு' கவனத்துக்குரிய படைப்பாக மாறியிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com