விஷாலின் 'கத்தி சண்டை' - சினிமா விமரிசனம்

முந்தைய வடிவேலுவின் துள்ளலும் இயல்பும் இந்த மெகா வடிவேலுவிடம் இல்லை.
விஷாலின் 'கத்தி சண்டை' - சினிமா விமரிசனம்

வணிக நோக்கில் உருவாக்கப்படும் வெகுஜனத் திரைப்படங்கள் என்றாலும் கூட அதில் தங்களது அக்கறையையும் உழைப்பையும் செலுத்தி சுவாரசியமாக உருவாக்க முயலும் இயக்குநர்கள் சிலர் இருக்கிறார்கள். ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள். இதற்கு முன் வெளிவந்த பெரும்பாலான சினிமாவின் கதைகளை கலந்துகட்டித் தூக்கலான மசாலா சமாசாரங்களோடு எதையோ ஒப்பேற்றி வணிகப்பண்டமாக்க முயலும் இயக்குநர்கள் சிலரும் இருக்கிறார்கள். இயக்குநர் சுராஜ் இந்தப் பட்டியலில் முதன்மையானவர் என்பதை இதற்கு முன் வந்த அவருடைய திரைப்படங்கள் துல்லியமாக நிரூபிக்கின்றன. சுந்தர். சி -யிடம்  பணிபுரிந்தவர் என்பது கூடுதல் தகவல்.  

எனவே இதுபோன்ற இயக்குநர்களின் திரைப்படங்களை ஏதோவொரு எதிர்பார்ப்போடு பார்த்துவிட்டு பின்பு சலித்துக் கொள்வதில் உபயோகமில்லை. 'சுராஜின்' இதுவரையான திரைப்படங்கள் எப்படியிருந்ததோ, அப்படியேதான் 'கத்தி சண்டை'யும் இருக்கிறது.  

என்றாலும் சுராஜின் முந்தைய சில திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதிகள் மட்டும் சற்று ரசிக்கத்தக்கவையாக இருந்தன. தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்றவற்றைச் சொல்லலாம். மட்டுமல்லாமல்,  'கத்தி சண்டை' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு கூடுதலான காரணம் ஒன்றிருந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக வடிவேலுவின் மறுவருகை இத்திரைப்படத்தின் மூலம் நிகழ்கிறது என்பதுதான் அது. அவர் நீண்ட காலமாகக் காணாமற் போயிருந்ததால் ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்த ஏக்கத்தை இத்திரைப்படம் தீர்க்கும் என்றொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பையும் பொய்க்கச் செய்த சாதனைத் திரைப்படமே 'கத்தி சண்டை'.

***

பல கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருக்கும் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறான் வில்லன். காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஜெகபதி பாபு சாகசத்துடன் அதைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். இவரின் தங்கையான தமன்னாவை, விஷால் காதலிக்க முனைகிறார். இதற்காக சூரியின் உதவியுடன் 'மறுஜென்மக் காதல்' என்று பல பொய்களை அவிழ்த்து விடுகிறார். ஆனால் அவரது உண்மையான நோக்கம், தமன்னாவை காதலிப்பதல்ல, ஜெகபதி பாபு அரசாங்கத்திடமிருந்து மறைத்து, பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதே. 

விஷால் யார், அவருடைய பின்னணி என்ன, எதற்காக அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட வேண்டும்? என்பன போன்ற விவரங்களை, திருப்பங்கள் என்கிற பெயரில் பல அபத்தங்களுடன் நாம் கதறக் கதற கதையாகச் சொல்கிறார்கள். 

'கத்தி சண்டை' என்று தலைப்பு வைத்து விட்டதால் 'கத்தி' திரைப்படத்திலிருந்து கொஞ்சம், ஷங்கரின் 'ஜென்டில்மேன்' திரைக்கதையிலிருந்து கொஞ்சம் என பல திரைப்படங்களில் இருந்து காட்சிகள் உருவப்பட்டிருக்கின்றன. 

***

விஷால் வழக்கமான நாயகன்  வேடத்தை வழக்கமான பாணியிலேயே கையாள்கிறார். சில காட்சிகளில் ஸ்டைலாகவே இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. நாயகன் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பும் வழக்கமான 'லூஸூ' நாயகி தமன்னா. இதற்கு உளவியல் காரரணங்கள் எல்லாம் வேறு. 

காவல்துறையாக அதிகாரியாக வரும் ஜெகபதி பாபு, நாயகியைவிட அதிக லூஸாக இருக்கிறார். நாயகனின் பின்னணியை விசாரிப்பதற்காக இவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் காமெடி என்றால், அவன் சொல்லும் பொய்யையெல்லாம் நம்பும் இவரை, காவல்துறையின் உயரதிகாரியாக வேறு காண்பிக்கிறார்கள். தமிழக காவல்துறை, ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸுக்கு அடுத்தபடியானது என்று சொல்லப்படும் பெருமையின் மீது இயக்குநர் செய்ய முயலும் அவதூறாகவே இவற்றைக் கருதவேண்டும். இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, இவரை ஏன் தமன்னாவின் அண்ணன் பாத்திரமாக சித்தரிக்கிறார்கள் என்று வேறு குழப்பமாக இருந்தது. 

பொய்யான பில்டப் தரும் ரவுடியாக 'சூரி'. இந்த 'கைப்புள்ள' பாத்திரத்தை வைத்து தமிழ் சினிமா இன்னமும் எத்தனை காலத்துக்கு ஜீவிக்குமோ என வியப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. பெண் வேடத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கர்ண கொடூரமாக இருக்கின்றன. சூரியின் நகைச்சுவையில் மிக அரிதாகவே புன்னகைக்க முடிகிறது. 

மிகவும் எதிர்பார்த்த வடிவேலுவின் பகுதி, படத்தின் பிற்பாதியில் வருகிறது. 'நெருப்புடா' என்கிற அதிரடிப்பாடலின் பின்னணியோடு 'I am back' என்று நுழைகிறார் வடிவேலு. ஏறத்தாழ கபாலி 'ரஜினி'யின் அறிமுகக்காட்சிக்கு நிகரான ஆரவாரத்தை திரையரங்கில் பார்க்க முடிந்தது. அவர்களின் நீண்ட கால ஏக்கம், இதோ தீரப் போகிறது என்கிற மகிழ்ச்சியின் மீது மொத்தமாக தண்ணீர் ஊற்றி 'நெருப்புடா'வை மொத்தமாக அணைத்து விட்டார்கள். முந்தைய வடிவேலுவின் துள்ளலும் இயல்பும் இந்த மெகா வடிவேலுவிடம் இல்லை. உருவத் தோற்றமும் நன்றாக பெருத்து பழைய வடிவேலுவின் பெரியப்பா மாதிரி இருக்கிறார். ஆக.. படத்தின் மீதான ஒரே எதிர்பார்ப்பும் வீணாகப் போய் விடுகிறது. 

***

இந்த திரைப்படத்தில் திருப்பங்கள் என்று வரும் காட்சிகளை எல்லாம் கொசுவின் மூளையுள்ளவர்கள் கூட யூகித்து விட முடியும். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை இன்னமும்கூட எளிதாக எடைபோடும் தமிழ் இயக்குநர்களின் துணிச்சல் வியக்க வைக்கிறது. என்னதான், சி செண்ட்டருக்கான படமென்றாலும் இத்தனை மட்டமான திரைக்கதையையா உபயோகிப்பார்கள்? தர்க்கம் என்பதே மருந்துக்கும் இல்லை. பாத்திரங்களின் வடிவமைப்பிலும் அவற்றின் இயங்குமுறையிலும் நம்பகத்தன்மை என்பது துளியும் இல்லை. 

நாயகரின் கருப்பு நிறம் அவராலேயே சிலபலமுறை தாழ்வாகச் சொல்லப்படுகிறது. 'நான் கொஞ்சம் கருப்புதான்' என்பது இதிலுள்ள பாடல் ஒன்றின் தொடக்க வரி. இதற்கு மாறாக நாயகியின் வெள்ளை நிறத்தைப் பற்றிய உயர்வான வசனங்கள். அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஏதாவது படத் தயாரிப்புப் பின்னணியில் இருக்கிறதா என விசாரிக்கவேண்டும். 

பணமாக இதில் காட்டப்படுபவை எல்லாம் பழைய ஆயிரம் ரூபாய் தாள்கள். இதிலுள்ள தற்செயலான அவல நகைச்சுவையைப் பார்வையாளர்கள் உடனே புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள்.

'எப்போது படம் முடியும், கிளம்பலாம்' என  அதிகபட்ச எரிச்சலோடு காத்துக் கொண்டிருக்கும் அசந்தர்ப்பமான நேரத்தில் நாயகனின்  பின்னணி பற்றிய 'பிளாஷ்பேக்' ஒன்று வருகிறது. 

விவசாயிகளின் பிரச்னையைப் பற்றி இனி எந்தவொரு தமிழ் சினிமாவும் பேசக்கூடாது என்று விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எவராவது பொதுநல வழக்கொன்று போடலாம். 'மெசேஜ்'  சொல்கிறோம் என்கிற பெயரில் சமூகத்தின் முக்கியமான பிரச்னைகளை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டு நாயகனின் போலி வசனங்களோடு இவர்கள் செய்யும் நாடகத்தனம் குமட்ட வைக்கிறது. இதே திரைப்படத்தின் நாயகன் நடிக்கும் குளிர்பானத்தின் விளம்பரம் ஒன்று படம் தொடங்குவதற்கு முன்னால் காட்டப்படுகிறது. என்னவொரு முரண்நகை?


இத்திரைப்படத்துக்காக எவரையாவது பாராட்டலாம் என்றால் அது ஒளிப்பதிவாளரையும், சண்டைக்காட்சி வடிவமைப்பாளரையும் எனச் சொல்லலாம். பொதுவாகவே இதன் ஒளிப்பதிவு அபாரமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிக மிரட்டலாக இருக்கிறது. ஆனாலும் என்ன உபயோகம்?

***

'கராஜ்'ஜில் இருக்கும் பழைய துருப்பிடித்த வண்டி மாதிரியான திரைக்கதையை வைத்துக் கொண்டு 'சுராஜ்' செய்திருக்கும் அலப்பறைகள் எல்லாமே சலிப்பு ரகம். 'கத்தி' திரைப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை உருவினதாக இருந்தாலும் கூட, இந்த திரைப்படத்துக்குக் 'கத்தி சண்டை' என்று ஏன் இயக்குநர் தலைப்பு வைத்தார் என்று எழுகிற கேள்வி வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

'நான் அப்பவே சொன்னேன்ல.. இந்தப் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண வேணாமின்னு'' என்று படம் பார்த்து வெளியே வந்த பிறகு பார்வையாளர்கள் ஒருவரையொருவர் நோக்கி கத்திச் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்கிற விஷயம் இயக்குநருக்கு முன்பே தெரிந்து விட்டதோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com