கார்த்தியின் ‘காஷ்மோரா’ - திரை விமர்சனம்

'பேய் ஓட்டுவதாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் ஒரு டுபாக்கூர் ஆசாமி, உண்மையாகவே பேய்க்கூட்டத்திடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இத்திரைப்படத்தின் ஒற்றைவரிக் கதை.

'பேய் ஓட்டுவதாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் ஒரு டுபாக்கூர் ஆசாமி, உண்மையாகவே பேய்க்கூட்டத்திடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இத்திரைப்படத்தின் ஒற்றைவரிக் கதை.

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவை பேய் பிடித்துக்கொண்டிருக்கும் விஷயம் நமக்குத் தெரியும். ஹாரர் காமெடி எனும் வகைமையில் பல திரைப்படங்கள் தொடர்ந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் 'காஷ்மோரா' இருந்தாலும், இதனுடன் ஃபேன்டஸியையும் கலந்து ஒரு சுவாரசியமான கலவையாகத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இவரது முந்தைய திரைப்படமான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' நகைச்சுவைப்படம்தான் என்றாலும், தனித்துவமான நகைச்சுவையைக் கொண்டது. 'சுமார் மூஞ்சி குமாரு, குமுதா ஹேப்பி அண்ணாச்சி, ப்ரென்டு லவ் பெயிலரு ஃபீல் ஆயிட்டாப்ல' போன்ற வசனங்கள், அது தொடர்பான காட்சிகளுடன் இன்றும்கூட ரசிகர்களின் நினைவுகளில் தங்கியுள்ளன. விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் வரிசையில் இது முக்கியமானதாக அமைந்திருந்தது. தனித்தனியான இரண்டு இழைகளில் பயணிக்கும் திரைக்கதை, இறுதியில் ஒன்றிணைந்து நிறையும் சுவாரசியத்தையும் கொண்டிருந்தது.

காஷ்மோரா திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோது ஒரு தீவிரமான ஃபேன்டஸி படமாக மட்டும் தெரிந்ததில் சற்று குழப்பமாகி, கோகுலின் அந்தப் பிரத்யேகமான நகைச்சுவைக் காட்சிகள் இதில் இருக்காதோ என்கிற எண்ணத்தில் திரைப்படத்துக்குள் நுழைந்தால், 'நான் எங்கயும் போகலஜி' என்று தீவிரமான காட்சிகளுக்கு இடையில் நன்றாக சிரிக்கவைத்தும் அனுப்பியிருக்கிறார். இந்தக் கலவைதான் இத்திரைப்படத்தின் பலமும் பலவீனமும்.

***

காஷ்மோரா என்கிற விநோதமான பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன், பேய், பில்லி சூன்யம் போன்றவற்றை நீக்குவதில் புகழ்பெற்றவனாக அறியப்பட்டிருக்கிறான். இவனுடைய ஏமாற்று வேலைக்கு குடும்பமே துணையாக நிற்கிறது. இதனுடன் ஆன்மிக வியாபாரத்தையும் திறமையாக இணைப்பதில் வருமானம் கொட்டுகிறது. விளம்பரங்களின் மூலம் இந்த வணிகத்தை வளர்த்துக்கொள்கிறான். ஊடகங்களும் இணைந்து இவனை பரபரப்பாக்குகின்றன. காவல் துறை அதிகாரி, மாநில அமைச்சர் என்று சில பல பிரபலங்களும் இவனிடம் ஏமாறத் துவங்குகிறார்கள்.

ஒருபுறம் இவனுடைய ஏமாற்று வேலைகள், மறுபுறம் வாடிக்கையாளர்களுக்குத் தற்செயலாக நிகழும் நல்ல விஷயங்கள் ஆகியவற்றினால் இவனுடைய நம்பகத்தன்மை உயர்கிறது. இவனுடைய கிராஃப் மெல்ல உயரத்துவங்கும் சமயத்தில், அமைச்சரிடம் இவனுடைய குட்டு அம்பலப்பட்டுவிட, அவருடைய பல கோடி பணத்துடன் இவனுடைய குடும்பம் தப்பிச் செல்லும்போது, ஒரு பாழடைந்த அரண்மனையில் மாட்டிக்கொள்கிறது. ஒட்டுமொத்த குடும்பமே பலியாகப்போகும் அதிர்ச்சியான தகவலை அங்கு அறிய நேர்கிறது. அதற்குப் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுக் காரணமும் துரோகமும் மரணங்களும் இருக்கின்றன. இன்னொருபுறம் அமைச்சரும் இவர்களை கொலைவெறியுடன் தேடுகிறார்.

காஷ்மோராவின் குடும்பம் இந்தப் பயங்கரங்களிலிருந்து தப்பித்ததா, அந்த வரலாற்றுக் காரணங்களின் பின்னணி என்ன என்பதை ஒருபுறம் தீவிரமாகவும், இன்னொரு புறம் நகைச்சுவையாகவுமான கலவையில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இரண்டிலுமே வெற்றியும் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.

***

சாதாரண பின்புலத்திலிருந்து கிளம்பி பல தில்லுமுல்லுகளுடன் பிரபலமாகும் ஆன்மிகக் குருமார்கள், கார்ப்பரேட் சாமியார்கள் போன்றவர்கள் எப்படி உருவாகிறார்கள், அதிகார வட்டத்தின் பின்னணியும் செல்வாக்கும் எப்படி அவர்களுடன் இணைகிறது என்பதை படத்தின் முற்பகுதி காட்சிகள் நகைச்சுவையாக விவரிக்கின்றன. இது தொடர்பான முட்டாள்தனங்களை சரமாரியாகக் கிண்டலடித்திருக்கிறார்கள். ஆனால், இவற்றை வெறுமனே அசட்டு நகைச்சுவையாக்காமல் சற்று தீவிரமான தொனியிலேயே கையாள முயன்றிருப்பதில்தான் இயக்குநரின் தனித்துவம் தெரிகிறது. இந்தத் தீவிரத்தை சற்று பின்னுக்கு இழுப்பதாக விவேக்கின் வழக்கமான நகைச்சுவை அமைந்திருப்பது துரதிர்ஷ்டம். என்றாலும் புடவையை மேலே போர்த்திக்கொண்டு ஒரு சமகால ஆன்மிகக் குருவை நினைவுப்படுத்திக் கிண்டலடிப்பதில் ரசிக்கவைக்கிறார்.

ஆனால், காஷ்மோரா ஏமாற்றுக்காரன் என்பதை நிறுவுவதையும், அவனுடைய குடும்பம் சிக்கலில் சென்று விழுவதையும் சித்தரிக்க இத்தனை நீளத்தை அனுமதித்திருக்க வேண்டாம். இந்தக் காட்சிகள் சுவாரசியமாகவே அமைந்திருந்தாலும், கதையின் மையத்துக்குள் சட்டென்று நுழைகிற திரைக்கதைதான் பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பது அடிப்படை.

பாழடைந்த அரண்மனைக்குள் காஷ்மோராவின் குடும்பம் தத்தளிக்கும் காட்சிகளுக்குப் பிறகு அவர்கள் உள்ளே சிக்கவைக்கப்பட்டிருக்கும் காரணமும் அதன் அசத்தலான, ஆனால் சுருக்கமான வரலாற்றுப் பின்னணிக் காட்சிகளும் விரிகின்றன. பிறகு நிகழும் உச்சக்காட்சியுடன் படம் நிறைகிறது. ஆனால், இந்தச் சிக்கல்கள் நகைச்சுவையுடனும் இணைந்து சித்தரிக்கப்படுவதால், பார்வையாளர்களுக்கு எவ்வித பதட்டமும் ஆர்வமும் தோன்றாமல் இருப்பதே இந்தத் திரைக்கதையின் பெரிய பின்னடைவு.

***

கார்த்தி மூன்று பரிமாணங்களில் தோன்றுகிறார். ஒன்று, ஏமாற்றுக்காரனாக வழக்கமான வேடம். இதை அவருடைய பல படங்களில் பார்த்திருப்பதால் நமக்குப் பெரிதாக ஆச்சரியம் தோன்றுவதில்லை. ஆனால், தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். பாழடைந்த அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அங்கு நிகழும் அமானுஷ்ய சமிக்ஞைகளை, தன்னைப்போலவே எவரோ டுபாக்கூர் ஆசாமிதான் இவற்றை நிகழ்த்துகிறான் என்று எண்ணிக்கொண்டு இவர் எதிர்வினை செய்யும் மோனோ ஆக்டிங் அபாரமான நகைச்சுவை. ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெறும் காட்சியாக இது அமைகிறது. போலவே, தன் உயிர் போகும் சமயத்தில் அதைக் காப்பாற்றிக்கொள்ள சமயோசிதமாக இளவரசியின் ஆவியைப்போல நடிப்பதும், பின்பு மாட்டிக்கொண்டு அசடு வழியும் காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதுபோல தீவிரமாகத் துவங்கும் சில காட்சிகள் சட்டென்று திசைமாறி நகைச்சுவையாகிவிடும் விதம் ரசிக்கவைக்கிறது.

இன்னொரு கார்த்தி, சாப விமோசனம் கிடைக்காமல் உடலும், தலையும் தனித்தனியாக அலையும் வேடம். இதில் ஒப்பனையும் உடல்மொழியும் சிறப்பாக இருக்கிறது. மூன்றாவது பரிமாணம்தான் இருப்பதிலேயே மிகச் சிறப்பானது. கார்த்திக்கு பெரிய சவாலாக அமைந்திருப்பது. இதை அவர் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சம். மன்னருக்குத் துரோகம் செய்யும், இளவரசியின் மீது மையலுறும் தளபதி ராஜ்நாயக்காக நடித்திருக்கும் பாத்திரம் அசத்தலானது. ஒற்றை ஆளாக ஒரு சேனைப் படையையே துவம்சம் செய்யும் ஆக்ரோஷமும், இளவரசியின் மீதான இச்சையின் குரூரத்தையும் துரோகத்தின் பயங்கரத்தையும் இந்தக் குறுகிய நேரக் காட்சிகளிலேயே அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரே நடிகர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாத்திரத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தால், அவை வெவ்வெறு பாத்திரங்கள் என்று பார்வையாளர்களை நம்பச் செய்வதில்தான் அவற்றின் வெற்றி அமைகிறது. அந்த வகையில், சாதாரண இளைஞனின் பாத்திரத்துக்கும் மன்னர் காலத்து தளபதி பாத்திரத்துக்குமான வேறுபாட்டை ஒப்பனை, உடல்மொழி முதற்கொண்டு பல விஷயங்களில் கார்த்தி சாதித்திருக்கிறார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், ஓர் இளவரசிக்கான வனப்பையும் கம்பீரத்தையும் நயன்தாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பேலியோ டயட்டில் இருக்கும் முதிர் இளவரசிபோல இருப்பது சின்ன நெருடல். காஷ்மோராவின் குடும்பத்துக்கு முன்னாலேயே அரண்மனையில் வந்து மாட்டிக்கொள்ளும் ஆசாமியாக முருகானந்தம். (இஆபா-வில் ஃப்ரென்டு, லவ் பெயிலரு, ஃபீல் ஆயிட்டாப்பல. ஒரு ஹாப் சாப்ட்டா கூல் ஆயிடுவாப்ல என்பாரே, அதே நபர்). அரண்மனைக்குள் நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவங்களை காஷ்மோரா குடும்பத்திடம் ‘க்ளோஸா வாங்க ஜி’ என்று ஏற்ற இறக்கங்களுடன் விவரிக்கும் காட்சிகளில் கவர்கிறார்.

***

இயக்குநரைத் தாண்டி, இது நுட்பக்கலைஞர்களின் படம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் உழைப்பு இதில் கொட்டிக்கிடக்கிறது. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், கலை இயக்குநர் ராஜீவன், ஆடை வடிமைப்பாளர், விஷூவல் எபெக்ட்ஸ் குழு போன்று பல நுட்பக் கலைஞர்கள் இணைந்து, மன்னர் காலகட்ட காட்சிகளை ரகளையான அனுபவமாக்கித் தருகிறார்கள். அரண்மனை மற்றும் அந்தப் பிரதேசத்தின் முழுத் தோற்றமும் தெரியும் பறவைப் பார்வை காட்சிக் கோணங்கள், அவை பயணித்து ஒரு பிரம்மாண்ட பறவையின் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஆட்களைக் காண்பிப்பது, அரண்மனையின் வண்ணமயமான, பிரம்மாண்ட உட்புறம் போன்றவை மிகுந்த அழகியலுடன் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் முக்கியமானதாக இதைச் சொல்லலாம். என்றாலும் வரைகலை காட்சிகள் சில இடங்களில் அரைகுறையாக இயங்குவது சறுக்கல்.

சந்தோஷ் நாராயணின் அதிரடியான பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக ஒலிக்கிறது. ‘திக்கு திக்கு சார்...’ என்கிற பாடல் சுவாரசியமான ரகளை. ‘ஓயா… ஓயா’ ஏன் தெலுங்கு டப்பிங் பாடல்போலவே ஒலிக்கிறது என்பது தெரியவில்லை. அந்தப் பிரதேசத்தின் சந்தையையும் சமன்படுத்தும் சமரச முயற்சியா என தெரியவில்லை.

***

புராதன காலத்தின் கதையையும் சமகாலத்தையும் இணைத்து, கதை சொல்லும் பாணியில் உருவான தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது நாசர் இயக்கிய ‘தேவதை’. பிறகு செல்வராகவனும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மூலம் இந்த வகைமையை முயன்றார். (இதிலும் கார்த்தி நடித்திருந்தார் என்பது தற்செயலான ஒற்றுமை). இதற்குப் பிறகு ‘காஷ்மோரா’வை சொல்லலாம். ஆனால், அந்தப் படங்களைப் போன்றே ‘காஷ்மோரா’வையும் பாராட்டத்தக்க முயற்சி என்று குறிப்பிட முயன்றாலும், அவற்றைப்போலவே பெரிதான அளவில் கவராமல் போனது பரிதாபம்.

வெகுஜன திரைப்படம்தானே என்று வழக்கமான பாணியில் அல்லாமல் தம்மால் இயன்ற அத்தனை உழைப்பையும் மெனக்கெடலையும் தந்திருக்கும் இயக்குநர் கோகுலின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஆனால், இந்த உழைப்பை திரைக்கதையை சுவாரசியமாக அமைப்பதிலும் செலவழித்திருந்தால், ‘காஷ்மோரா’ தமிழின் ஒரு முக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக ஆளகியிருக்கும். இது தீவிரமான வரலாற்றுப் படமாகவும் இல்லாமல் முழுமையான நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல் ஆகியிருப்பதே இதன் பெரிய பலவீனம். இந்தக் கலவையை இயக்குநர் தர திட்டமிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது; ஆனால், அது திறமையாக அமையவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

- சுரேஷ் கண்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com