அறம் - தமிழ் சினிமா வரலாற்றில் இன்னுமொரு மைல்கல்

இந்தியாவின் அரசியல், விஞ்ஞானப் புரட்சி என பகட்டுப் பளபளப்புகளுக்குப் பின் பல்லிளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்... "அறம்'!
அறம் - தமிழ் சினிமா வரலாற்றில் இன்னுமொரு மைல்கல்

இந்தியாவின் அரசியல், விஞ்ஞானப் புரட்சி என பகட்டுப் பளபளப்புகளுக்குப் பின் பல்லிளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்... "அறம்'!
ஊழலும், அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம், இந்தத் தலைமுறையின் வரலாற்றை, வாழ்க்கையை எப்படியெல்லாம் தாளாத துயரமாக அழுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கும் "அறம்' , உழைப்பு நிறைந்த நிறைவான படைப்பு.
வறுமையும், வறட்சியும் சுழன்றடிக்கும் கிராமம். நேர் எதிராய் விஞ்ஞான இந்தியாவின் அடையாளமாக இயங்கும் ராக்கெட் ஏவுதளம். இந்த இரண்டுக்குமான வளர்ச்சி, வீழ்ச்சி வித்தியாசத்தை பரபரப்பு நிறைந்த திரைக்கதையால் உணர்த்தி மனம் நெகிழ வைக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார். 
முகமற்ற, முகவரியற்ற எளிய மனிதர்களுக்காகத் துளி வீரியம் குறையாமல், எந்த சமரசமும் இல்லாமல் ஒரு படம் தந்ததற்காக இயக்குநர் கோபி நயினாரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஏழை சமூகத்தின் அன்பை, கோபத்தை, இயலாமையை இவ்வளவு எளிமையாக முன் வைத்ததற்காக இயக்குநருக்கு ஒரு ரெட் சல்யூட்.
கூலி வேலைக்குக் குழந்தையோடு போகிறார் சுனு லட்சுமி. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடுகிறது. அலறியடித்துக் கொண்டு கூடுகிற ஊர், செய்வதறியாமல் கை பிசைந்து நிற்க அந்த மாவட்டத்தின் ஆட்சியர் நயன்தாரா களத்துக்கு ஓடோடி வருகிறார். அதன் பின் வருகிற திக் திக் வினாடிகளும் தீ மூட்டும் வசனங்களும் மானுடம் வைக்கும் கோபமும்தான் முழுப் படமும்.
கேவலமான அரசியல்வாதிகளின் கைகளில் மனிதம் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அரசியலும் ஜாதியும் பணமும் ஆட்சியாளர்களை இயக்கிக் கொண்டு இருக்கிறவரை இந்த சமூகத்தின் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். மனிதமும், அதன் பொருட்டு எழும் கோபமும் இங்கு என்ன செய்து விட முடியும்? என்பதை அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறது கதை. 
படம் முழுக்க சாதாரண உடை, ஒரே களம். சில பல மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுப்பூர்வமாகக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் கோபி நயினாரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
இதுவரை பல படங்களில் வில்லனாகப் பார்த்த ராமச்சந்திரன், இந்தப் படத்தில் அந்தக் குழந்தையின் அப்பா. ஏழை கிராமத்து மனிதர், கிடைக்கிற வேலையை பார்க்கிற தொழிலாளியாகப் பசக்கெனப் பதிகிறார். "" என்னை கபடி விளையாட விடாத இவனுக , நம்ம புள்ளைய நீச்சலடிக்கவா விடப் போறானுங்க... நம்மளை மாதிரி ஆட்கள் வாழ்க்கை முழுக்க புலம்பிக்கிட்டேதான் இருக்கணும்...!' என்று அன்பும், ஆக்ரோஷமுமாகப் பொங்குகிற இடத்தில் நடிப்பில் அவ்வளவு முதிர்ச்சி! 
நடிகை சுனுலெட்சுமிக்கு இது அழுத்தமான முத்திரை. அத்தனை அலட்சியமான உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலங்கடிக்கிறார். அதட்டல், மிரட்டல், கெஞ்சல் கலந்து கண்களை உருட்டுவதாகட்டும், கதையின் ஓட்டம் எங்கும் அவர் காட்டிக் கொண்டே போகும் தாய்மையாகட்டும்... நாம் கண்டு உணராதவை. குறுகுறு குறும்பு. அதே சமயம் "பெரியாண்டவரே.... என கை கூப்பி வானம் வணங்கும் கணம் என எல்லா தருணங்களிலும் மிளிர்கிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு யதார்த்த நாயகி!
நயன்தாராவின் நடிப்புதான், மொத்த படத்தையும் உயிர்த்துடிப்புடன் தாங்கி நிற்கிறது. அதிகாரத் திமிர் நிறைந்த ஆட்சித் துறைக்குள் மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனுஷியின் மன ஊசலாட்டத்தை, கையறுநிலையை, குற்ற உணர்ச்சி நிறைந்த மனசாட்சியை, தன் உடல்மொழியில் அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார் நயன்தாரா. இது வேற லெவல் நயன்!
"எப்படியும் காப்பாற்றி விடுவோம்...'' என காட்டும் கம்பீரம் தொடங்கி, கண்ணீர் உடைந்து கலங்கும் வரையிலான அத்தனை இடங்களிலும் அழுத்தம் பதிக்கிறார் நயன்தாரா. கோபம், வாஞ்சை, பரிதவிப்பு, பாசம், நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள் நயன்!
சட்டத்தின் இருட்டு மூலைகளில் அரசியல் கட்சிகளும் அதிகாரவர்க்கமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, அரசியலின் அத்தனை அழுக்குகளையும் சொல்லி, நம் அரசு இயந்திரங்களைச் சாடுகிறது. நயன்தாரா பேசும் ஒவ்வொரு வசனமும் ஆட்சி அதிகாரத்தின் மீதான சவுக்கடி.
"நீ என்ன மீடியா...?'' ""ம்ம்ம்... இலங்கை வானொலி நிலையம்...'' என்று பதிலடி கொடுக்கத் தொடங்கி, படம் நெடுகப் பட்டாசு வெடிக்கிறார் "அது இது எது' பழனி பட்டாளம். ""என்னைக்கு வாட்டர் பாட்டில் வந்துச்சோ... அன்னிக்குதாம்மா தண்ணிப் பஞ்சமும் வந்துச்சு...'' என கண்கள் உடைந்து பெரியவர் பேசும் வசனம் தொடங்கி ""மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது...!"" ""ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்...? படம் எங்கெங்கும் கனல் கக்கும் வசனங்கள்.
"அப்பா இருட்டா இருக்குப்பா....'' என ஆழ்துளைக் கிணற்றுக்குள் இருந்து சிறுமி பதறும் போது நம் சட்டையிலும் தீப்பற்றிக் கொள்கிறது. சீட்டு ஏலம் விடும் பெண்மணி, ""இவனுங்க குழந்தைய காப்பாத்த மாட்டாங்க... நாமதான் இறங்கணும்... என ஆக்ரோஷம் காட்டும் இளைஞன், தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி, சாதாரண அரசு மருத்துவர், தீயணைப்பு உயர் அதிகாரி, எம்.எல்.ஏ. வேல ராமமூர்த்தி என நடமாடும் சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அவ்வளவு வாழ்வின் துளிகள்!
ஜிப்ரானின் இசையில் வைக்கம் விஜயலெட்சுமி குரலில் ஒலிக்கும் பாடல் அவ்வளவு பொருத்தம். கதையின் களத்துக்கே சென்று நமக்குள் ஊடாடும் பிம்பத்தை உண்டாக்குகிறது ஓம் பிரகாஷின் கேமரா. போகிறபோக்கில் எக்கச்சக்க மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை, எளிய வாழ்க்கையைத் தூவிக் கொண்டே இருக்கிறது. 
" நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் வைச்சதை விடப் பெருமை, நீ ஆழ்துளை கிணறுக்குள் போய்விட்டு திரும்புவதும்...'' என்று பேசியதோடு நில்லாமல், ராக்கெட் கிளம்புகிற அதே நேரத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை மீட்கப்படுகிற காட்சியில் ஆமோதித்து ஆர்ப்பரிக்கிறது தியேட்டர்!
வாழ்வில் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிற போக்கில் நெஞ்சு தைக்க சொல்லி இருக்கும் இப்படைப்பு, தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com