அறம் பட விமரிசனம்

கிராமத்து உயிர்களுக்கு மதிப்பில்லை, கிராமங்களைக் கவனிக்க மாட்டார்கள் போன்ற வசனங்கள் தாழ்வுமனப்பான்மையை ஊதிப் பெரிதுபடுத்தவே உதவும்...
அறம் பட விமரிசனம்

சில மாதங்களுக்கு முன் வந்த வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்று –

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை இளம்பெண் ஒருத்தி அசாத்தியத் துணிச்சலுடன், உடலில் கயிறு கட்டி தலைகீழாகக் கிணற்றுக்குள் சரிந்து சென்று வெளியே தூக்கி வந்ததைப் பதிவு செய்திருந்தார்கள். முதல்முறை ஒரு ஒத்திகை போல, மூச்சு முட்ட வெளியே வந்து விடுகிறாள்; கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் இறங்கி குழந்தையை வெளியே தூக்கி வருகிறாள்! நடந்தது இந்தியாவிலா, வெளிநாட்டிலா எனச் சரியாக நினைவில் இல்லை. 

இதுபோன்ற ஒரு சம்பவம், மழையின்றி வறண்ட நம்மூர் காட்டூர் கிராமத்தில், ஒரு ஏழைக் குழந்தைக்கு ஏற்பட்டால் இன்றைய சூழலில் என்ன நடக்கிறது என்பதை, மசாலாத்தனம் இல்லாமல், அசட்டு நகைச்சுவை இல்லாமல், உண்மைகளை உள்ளவாறு காண்பிக்கிறது அறம்!

சிறிது அசந்தாலும், ஆவணப்படமாகப் போய்விடும் ஆபத்து. மிகக் கவனமாகத் திரைக்கதை அமைத்து, தொய்வில்லாமல், மிக இயல்பாக அந்தக் கிராமத்தில் ஒருவராக நம்மைக் கட்டிப்போடுவதில் இயக்குனர் கோபி நயினார் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறார்! வாழ்த்துக்களும், பாராட்டுகளும்! 

தேவையற்ற வார்த்தைகளோ, ‘பஞ்ச்’ டயலாக்குகளோ கிடையாது. மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், காவல்துறை, படிக்காத பாமர மக்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் சுவதில் கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லை. நாமும் அந்தக் கிராமத்தில் கையறு நிலையில் எல்லோர் உணர்வுகளுடனும் ஒன்றிப் போகிறோம். வசனம் எழுதிய கோபிக்கு ஒரு சபாஷ்! (உணர்ச்சிகளைத் தூண்டும் சில வசனங்களையும், தேசீய நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கும் சில கருத்துகளையும் தவிர்த்திருக்கலாம் – பிரச்சனை பொது என்பதால்!)

சேவை மனப்பான்மை மற்றும் மனித நேயத்துடன் மற்ற அதிகாரிகள், மந்திரி, எம்.எல்.ஏ. என எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு மக்களுக்காக முடிவுகளை எடுக்கும் நேர்மையான மாவட்ட ஆட்சியராக நயன்தாரா, பாத்திரத்துடன் ஒன்றிப்போகிறார்! (இருந்தாலும் இறுதியில் சேவை செய்ய அரசியலுக்கு வருவதைப் போல ‘சிங்க நடை’ போட்டு வருவதைக் காணும் போது, இவர் ஆழ்துளைக் கிணற்றில் விழப் போகிறாரே என்று தோன்றியது! ஆனால் இவர் டைட்டில் கார்டில் இவர் பெயர் வந்தபோது திரையரங்கில் எழுந்த விசில் சத்தம், நயன்தாரா அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றியது – தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம்!). 

துரைராஜ், சுனுலட்சுமி, காக்காமுட்டையில் நடித்த சிறுவன், சிறுமி என ஆரம்பக் காட்சிகள் வெகு இயல்பு. ஏழ்மையைக் கூட கவிதையாக்கியிருக்கிறார் கோபி. (இருந்தாலும் படிப்பு தேவையில்லை என்று தோன்றுமளவிற்கான சில வசனங்கள், நீச்சல் பையன் முறைத்துக்கொண்டு அம்மா, அப்பாவைக் கேட்கும் கேள்விகள் சற்று மிகை – எதிர்காலச் சந்ததியினரைத் தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுவிடும் அபாயம் தோன்றுகிறது!) 

அதிகாரிகளின் மெத்தனம், அரசு இயந்திரத்தின் இயலாமை, கடமை செய்ய முயன்றாலும் முடியாத சூழ்நிலை, அரசியல்வாதிகளின் சுயநலம், அதிகாரத் துஷ்பிரயோகம் – எல்லாம் மிகச்சரியாகச் சம அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இடையில் அவ்வப்போது வரும் தொ(ல்)லைக்காட்சி உரையாடல்களைத் தயவுதாட்சண்யமின்றி நீக்கிவிடலாம் – முக்கியமாக கேள்வி கேட்பவருடைய அனாவசியச் சீண்டல்களை! (கிராமத்துக் குழந்தையோ, நகரத்துக் குழந்தையோ இங்கு இருக்கும் வசதியில் இதுதான் நிலை – கிராமத்து உயிர்களுக்கு மதிப்பில்லை, கிராமங்களைக் கவனிக்க மாட்டார்கள் போன்ற வசனங்கள் தாழ்வுமனப்பான்மையை ஊதிப் பெரிதுபடுத்தவே உதவும் – ஆக்கபூர்வமாக எதையும் உருவாக்காது! இவை இயக்குநரின் தனிப்பட்ட கருத்துக்களாக இருக்கக்கூடும்!).

அதுபோலவே தண்ணீர்ப் பிரச்னையும் – மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்துக்காக – கதையுடன் ஒட்டவேயில்லை! 

இப்படிப்பட்ட விபத்துக்கள் எங்கும் உள்ளன. அதற்காக விஞ்ஞானம், ஆராய்ச்சிகள், விண்கலங்கள் போன்ற முன்னேற்றங்களே கூடாது என்பது குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டச் சொல்வதாகும். 

மக்களுக்குக் கடமையே கிடையாதா? திறந்து கிடக்கும் கிணற்றின் வாயை மக்களே மூடி தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதா? முதலிலேயே பாம்பு இருக்கும் இடம் செல்லும் குழந்தை – வேலை செய்யும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிணற்றுக்குப் போகும் வரை கவனிக்காதது யார் குற்றம்? (உரிமைகளைக் கேட்கும் மக்கள் தங்கள் கடமையையும் உணரவேண்டாமா?) 

நல்ல பின்னணி இசை (ஜிப்ரான்). பாடல் இப்படத்துக்கு அவசியமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. சிறப்பான ஒளிப்பதிவு (ஓம்பிரகாஷ்), உறுத்தாத படத்தொகுப்பு (ரூபன்). 

குத்துப்பாட்டு, டாஸ்மாக், வில்லன்கள் ஏதும் படத்தில் கிடையாது. ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்டால் ஏற்படும் நடப்புகளை – நம் கையறு நிலையை – மிக அழகாக மனத்தில் பதியும்படி சொல்லியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com