விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ - சினிமா விமரிசனம்

விஜய் சேதுபதி, தன்னுடைய கதைத் தேர்வில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்கிற எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது ‘கருப்பன்’...
விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ - சினிமா விமரிசனம்

விஜய் சேதுபதியின் சந்தை மதிப்பும் மக்கள் வரவேற்பும் உயர்ந்து வரும் சூழலில், அவர் தன்னுடைய கதைத் தேர்வில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்கிற எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது ‘கருப்பன்’. 1970-களில் வந்திருக்க வேண்டிய இந்த குடும்பச் சித்திரத்தை நவீன வர்ணமடித்து 2017-ல் தந்திருக்கிறார் இயக்குநர் பன்னீர்செல்வம். ‘ரேணிகுண்டா’ போன்ற படத்தை எடுத்த அதே இயக்குநர்தானா என ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த வருடத்தில் ஜல்லிக்கட்டின் மீது மக்களுக்கு திடீரென பொங்கிய பாசத்தை சந்தைப்படுத்திக் கொள்ள முடியுமா என்கிற உத்தேசத்துடன் இத்திரைப்படம் வெளிவந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் படத்துக்குள் அது தொடர்பான காட்சிகள் அதிகம் இல்லை.

முரட்டுத்தனமான கணவனைத் தன் அன்பினால் கட்டிப் போடும் மனைவி, தவறான புரிதலால் கணவனுக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்படும் மோதல், இந்த மோதலை ஏற்படுத்தி இடையில் குளிர்காய நினைக்கும் வில்லன் என்று சலித்துப் போன தேய்வழக்குப் பின்னணியும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் நிறைந்து சலிப்பூட்டுகின்றன. 

ஒரேயொரு ஆறுதல் விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டுமே.

**
கருப்பன் (விஜய் சேதுபதி) ஜல்லிக்கட்டு காளைகளைத் திறமையாக அணையும் வீரன். குடிகாரன். தோன்றும் போது கூலிவேலைக்குச் செல்வான். உடல்நலம் குன்றிய தன் தாயின் மீது அதிக அன்பு உண்டு. அந்த ஊரின் பிரமுகர் மாயி (பசுபதி). எவராலும் அடக்க முடியாத அவருடைய காளையை, கருப்பனால் பிடிக்க முடியுமா என்றொரு சவால் கிளம்ப, ‘பிடிச்சிட்டா.. உங்க தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி வெக்கறீங்களா?” என்று கருப்பனின் நண்பர்கள் பதில் சவால் விட, பெண்ணைப் பகடைக்காயாக வைத்து விளையாடும் ஆதிகால சூது துவங்குகிறது. போட்டியில் கருப்பன் ஜெயித்து விடுகிறான்.

ஆனால் பெண்ணின் விருப்பம் இல்லாமல் இந்தத் திருமணத்தை செய்ய கருப்பனுக்கு விருப்பமில்லை. ஆனால் இவனைத் தற்செயலாக முன்பே சந்தித்திருக்கும் நாயகியான அன்புச்செல்வி (தான்யா) திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறாள். முரடனாக இருந்தாலும் நல்லவனான கருப்பனின் மீது ஆசையுண்டு என்பது முதற்காரணம்; அண்ணனுடைய வாக்கு தவறக்கூடாது என்பது உப காரணம்.. ‘ஒரு கூலிக்காரனுக்கு உன் பெண்ணைத் தரப்போகிறாயா?’ என்கிற சாதி சனங்களின் எதிர்ப்பையும் மீறி கருப்பனிடமுள்ள நல்லியல்பு காரணமாக தன் தங்கையைத் திருமணம் செய்து தருகிறார் மாயி. புது மனைவி வந்த பிறகு கருப்பனின் அதுவரையான முரட்டுத்தனம் மாறுகிறது. குடிப்பழக்கத்தை விட்டு மனைவியின் மீது பாசமும் அன்பும் காட்டுகிறான்.

அன்புச்செல்வியின் தாய்மாமனுக்கு (பாபி சிம்ஹா) அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இளம் வயது முதலே கனவு. ஒருதலைக்காதல். ஆனால் திடீரென்று நிகழ்ந்து விடும் திருமணத்தைச் சகித்துக் கொள்ள முடியாத அவன், தம்பதியினரை எப்படியாவது பிரித்து அன்புச்செல்வியைத் தனக்கு உடமையாக்கிக் கொள்ள நினைக்கிறான். அதற்காக ரகசியமாகப் பல சூழ்ச்சிகளைச் செய்கிறான். இதனால் கருப்பனுக்கும் மாயிக்கும் முட்டல் உண்டாகிறது. ஒரு கட்டத்தில் தன் மனைவியைப் பிரியும் சூழலும் கருப்பனுக்கு உண்டாகிறது. இறுதிக்காட்சியில் வில்லனின் சதிகள் அம்பலப்பட்டு, தம்பதியினர் இணைய.. சுபம்.

**

இந்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாசமலர், கிழக்குச் சீமையிலே, கொம்பன், பருத்தி வீரன், முரட்டுக்காளை, புதிய பாதை என்று பல பழைய திரைப்படங்களின் நினைவுகள் மனதில் வந்து போகின்றன. எந்தப் படத்திலிருந்து இயக்குநர் தமக்கான தூண்டுதலைப் பெற்றிருப்பார் என்பதை யூகிப்பதே பெரிய சவாலாக இருக்கும் போலிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தக் கதையை எப்படிச் சொல்லி தயாரிப்பாளரிடம் ஒப்புதல் பெற்றிருப்பார் என்பதை யூகிப்பது அதைவிடவும் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பெரிய பலமும் ஒரே ஆறுதலும் விஜய் சேதுபதிதான். தனது அநாயாசமான நடிப்பை இதிலும் தொடர்கிறார். தூக்கிக் கட்டிய வேட்டியும் கொத்து மீசையுமாக ஒரு கிராமத்து ஆசாமியைச் சிறப்பாக நகலெடுக்க முயன்றிருக்கிறார். தன்னுடைய பேச்சின் இடையில் அரைகுறை ஆங்கிலத்தைக் கலப்பது சிரிப்பை வரவழைக்கிறது. வழக்கமான நாயகத்தன்மையின் ஆவேசங்களைக் கைவிட்டு தன்னுடைய பிரத்யேக பாணியில் அலட்டல்கள் இன்றி சில காட்சிகளை அவர் கையாள்வது உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

ஆனால் இந்தப் பாணி இன்னமும் சுவாரசியம் குறையாமலிருக்கும் வரைதான் சிறப்பு. ஒருவகையில் ஊதப்பட்டுக் கொண்டிருக்கும் பலூன் போல. என்றாவது வெடித்து சிதறி விடலாம். அதற்குள் வேறு பாதையில் திரும்புவது விஜய் சேதுபதிக்கு நலம்.

பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள், நாயகிகளை லூசுப் பெண்ணாக சித்தரித்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய திரைப்படத்தின் நாயகிக்கு நடிப்பதற்கான வெளியை உருவாக்கித் தந்த இயக்குநரை நிச்சயம் பாராட்டலாம். நாயகி  தான்யா, ஆரம்ப கால சீதாவை நினைவுப்படுத்துவது போல லட்சணமாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

தங்கைக்கும் மச்சானுக்கும் இடையில் அல்லாடும் பாசமிகு அண்ணனாகப் பரிதாபமாக வந்து போகிறார் பசுபதி. சிறந்த நடிகர்கள் இப்படி ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுவது தமிழ் சினிமாவின் அவலம். பழைய கால நம்பியார் பாணியில் கூட இருந்தே குழிபறிக்கும் வேடம் பாபி சிம்ஹாவுக்கு. இவர் ஏன் தன் விருப்பத்தை மனத்துக்குள் புதைத்து வைத்திருக்கிறார் என்கிற ரகசியம் நமக்கு புரியவேயில்லை. இந்த ஒருதலைக் காதலை குறைந்தபட்சம் நாயகி கூட கண்டுபிடிக்கவில்லை என்பதெல்லாம் தர்க்கத்துக்குப் புறம்பானது.

பாலச்சந்தரின் நாடகங்களிலும் சினிமாக்களிலும் ‘லொடலொட’வென்று பேசும் ரேணுகாவை, வசனங்கள் ஏதுமல்லாமல் நாயகனின் தாயாராக அமர்த்தி வைத்து விட்டார்கள். இன்னொரு ‘சரண்யா’வைத் தமிழ் சினிமாவுக்குத் தர வேண்டாம் என்கிற இயக்குநரின் நல்லெண்ணம்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். ‘சிரிப்பதா, வேண்டாமா” என்று தயங்க வைக்கும் நகைச்சுவை சிங்கம்புலியுடையது. இதிலும் அப்படியே. உணர்ச்சிகரமான ஒரு காட்சியில் மட்டும் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

**

விஜய் சேதுபதிக்கும் தான்யாவுக்குமான பாசமும் அன்பும் பல காட்சிகளில் நன்றாகவே பதிவாகியுள்ளன. ஆனால் நடுத்தரவயதைக் கொண்டிருக்கும் ஓர் ஆசாமியின் ரொமான்ஸை எத்தனை நேரம்தான் நாம் சகித்துக் கொண்டிருப்பது? முடியல. துவக்கத்தில் வரும் ஜல்லிக்கட்டுக் காட்சிகள் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு மாடு இறந்தால், மனிதர்களைப் போலவே அதன் உடலைப் பொதுவில் பார்வைக்கு வைப்பார்கள் என்பதும் இதர வீட்டு மனிதர்கள் மாலை மரியாதையுடன் துக்கம் கேட்க வருவார்கள் என்பதுமான காட்சி தமிழ் சினிமாவுக்குப் புதிது. நகர மனிதர்கள் ஆச்சரியமாக பார்த்திருப்பார்கள்.

நாயகனின் கையால் வில்லன் குத்துப்படுவான் என்பது போல் காட்டி விட்டு, அதற்குள் பின்னால் வேறு எவரோ வில்லனைக் குத்தி விட, அவர் கண்பிதுங்கி விறைத்துக் கீழே சரிவது போன்ற காட்சிகள் எல்லாம் எப்போதோ வழக்கொழிந்து போய் விட்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இயக்குநர் பிடிவாதமாக இதைக் காட்டியிருக்கிறார். ஒருவேளை பழைய காட்சிகளை spoof செய்ய முயன்றிருக்கிறாரோ, என்னவோ. போலவே இறக்கும் தறுவாயில் வில்லன், நாயகியைப் பார்த்து கண்ணடித்து ‘ஐ லவ் யூ’ சொல்வதையெல்லாம் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

‘என் தாயை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாய். அதுதான் உன் மீது நிறைய அன்பு ஏற்பட காரணமாயிருக்கிறது’ என்று நாயகியைப் பார்த்து சொல்கிறார் நாயகன். நல்ல விஷயம்தான். ஆனால் அந்த விஷயத்தை நாயகன் செய்யாமல் குடித்து ஊரைச் சுற்றி விட்டு ‘அம்மா.. அம்மா…’ என்று உருகும் போதுதான் நகைச்சுவையாகி விடுகிறது. ‘எங்க சுத்தினாலும் தன் அம்மாவுக்கு மூணு வேளை அது சோறு போட்டுடும்’ என்று விஜய் சேதுபதிக்காகச் சொல்லப்படுகிற வசனமெல்லாம் அன்பின் வெளிப்பாடா என்ன?

‘மாட்டைப் பிடிச்சா என் தங்கையை மணம் முடித்து தருகிறேன்’ என்பது உள்ளிட்ட பல பழமைவாத, ஆணாதிக்கச் சிந்தனைகள் பல காட்சிகளில் தன்னிச்சையாக வெளிப்படுகின்றன. குடும்பம் என்கிற நிறுவனத்தின் அவசியம் படத்தில் மறைமுகச் செய்தியாக சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணின் அன்பு, ஒரு முரடனிடம் ஏற்படுத்தும் தலைகீழ் மாற்றத்தை உணர வைக்கிறது. தவறான புரிதல்களால் உறவுகளுக்குள் ஏற்படும் மெல்லிய விரிசல் நிரந்தரமான பிரிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்கிற ஆபத்தையும் உணர வைக்கிறது. அதாவது இதுபோன்ற விஷயங்களையெல்லாம் ‘படம் பார்த்து விட்டோமே’ என்கிற ஆறுதலுக்காக நாமாகப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் சினிமா பாடல்களில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும் தேய்வழக்குச் சொற்களை வைத்து ஒரு பாடலை எளிதாக உருவாக்கும் மென்பொருளைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தயாரித்திருக்கிறார் என்கிற தகவலை முன்பு வாசித்த நினைவு. அதைப் போலவே இசையமைப்பாளர் இமானும் தனக்கான ஒரு மென்பொருளைத் தயாரித்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. இளையராஜா வாசனையோடு ஒரே மாதிரியாக ஒலிக்கும் பல மெட்டுக்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ‘கும்கி’ பாடல்களின் வெற்றிப் போதையிலிருந்து அவர் இன்னமும் வெளியே வரவில்லை என்கிற சலிப்பையே ‘கருப்பனின்’ பாடல்கள் உணர்த்துகின்றன.

பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டாவிட்டால், தமிழ் சினிமாவுக்குப் பாடல்கள் ஒரு பெரும் சுமை என்கிற விஷயத்தை இயக்குநர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை. மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் திரைக்கதையின் இடையில் பாடல்கள் வேறு வந்து பொறுமையைச் சோதிக்கின்றன.

பல பழைய திரைப்படங்களின் உணர்ச்சிகரமான காட்சிகளை மீள்நினைவு செய்ய வைக்கும் தொகுப்புதான் ‘கருப்பன்’. புதிதாக ஒன்றுமேயில்லை. விஜய் சேதுபதியின் பிரத்யேக அலப்பறைகளுக்காக வேண்டுமானால் பார்க்கலாம். அவ்வளவே.

விஜய் சேதுபதியிடமிருந்து வெளிப்படும் இயல்பான முரட்டுத்தனத்தைப் பார்க்கும் போதெல்லாம், ‘முள்ளும் மலரும்’ காளியும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். அது போன்ற அற்புதத்தை இத்திரைப்படத்தில் நிகழவிடாமல் இயக்குநர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com