கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

சாவித்திரியின் தமிழ்ப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருந்த ‘நவராத்திரி’ திரைப்படம் பற்றி ஒரு காட்சி கூட இல்லை...
கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

சாவித்திரி – ஐம்பது, அறுபதுகளில் தென்னிந்தியா கொண்டாடிய ஒரு நடிகை. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் சாவித்திரியை மனத்தளவில் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே கருதுமளவிற்கு அவரது இயல்பான நடிப்பும் புகழும் கொடி கட்டிப் பறந்தன. இன்றும் கூட ஆணாதிக்கம் நிலவும் திரைத்துறையில் தனது அபாரமான திறமையினால் தனக்கென ஒரு பிரத்யேகமான இடத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்த நடிகைகளுள் சாவித்திரி தனித்துவம் கொண்டவர்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த அந்தச் சிறுமி, தனக்குள் இயல்பாகப் படிந்திருக்கும் கலைத்திறமையினால் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். துவக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் அவரது வளர்ச்சி சீரான ஏறுமுகத்தில் அமைந்தது. ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்த சக நடிகரைக் காதலித்து மணம் புரிந்தார். அவருடைய வளர்ச்சியின் வேகத்தைப் போலவே வீழ்ச்சியும் அமைந்தது. அதற்குப் பின்னால் நிறைய சோகங்களும் துரோகங்களும் இருந்தன.

சாவித்திரியின் வாழ்க்கை ஒரு காவியத் திரைக்கதைக்கு நிகரானது. எனவே அது திரைப்படமாக ஆனதில் ஓர் ஆச்சரியமும் இல்லை. அது அவசியமும் கூட. இயக்குநர் நாக் அஷ்வின் இந்த முயற்சியை அபாரமாகச் சாத்தியமாக்கியுள்ளார்.  

** 

மயங்கிய நிலையில் இருக்கும் சாவித்திரியின் உடல், மருத்துவமனையில் கவனிப்பாரின்றிக் கிடக்கும் பரிதாபத்துடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. சாவித்திரி கோமாவில் விழத் துவங்கிய எண்பதுகளின் காலக்கட்டம் அது.

மதுரவாணி (சமந்தா) என்கிற இளம் பத்திரிகை நிருபர், சமையல் குறிப்பு எழுதுவது போன்ற சலிப்புகளுக்கு இடையே சவாலான பணியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். நடிகை சாவித்திரி மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் செய்தியைப் பற்றி எழுத அவர் பணிக்கப்படுகிறார். அசுவாரசியத்துடன் இந்த வேலையைத் துவங்கும் மதுரவாணி, சாவித்திரி என்கிற பிரம்மாண்ட ஆளுமையின் விஸ்தீரணத்தைப் பிரமிப்புடன் அறியத் துவங்குகிறார். அவருடைய தேடல் பயணத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம். சாவித்திரி பிறந்து வளர்ந்து நடிகையாகி பிறகு வீழ்ந்த காலக்கட்டங்களும், மதுரவாணியின் எண்பதுகளின் காலக்கட்டமும் மாறி மாறி காட்டப்படுகின்றன.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ். அவருடைய வாழ்நாள் சாதனையாக இத்திரைப்படம் இருக்கக்கூடும். தேசிய விருதை எளிதில் அடையக்கூடிய, அதற்கு முற்றிலும் தகுதியான அபாரமான நடிப்பு. ‘இத்தனை கனமான பாத்திரத்தை இவரால் சுமக்க முடியுமா?’ என்று எழுந்த கேள்விகளுக்கெல்லாம் தனது விஸ்வரூப நடிப்பைத் தந்து வாயடைக்கச் செய்திருக்கிறார். திறமையான உடல்மொழி, ஒப்பனை போன்றவற்றின் மூலம் பெரும்பான்மையான காட்சிகளில் கீர்த்தியின் வழியாக சாவித்திரியே வெளிப்பட்டிருக்கிறார் எனலாம். சாவித்திரியின் உடல்மொழி ஒரு வளர்ந்த குழந்தைக்குரியது. அந்தத் துடுக்குத்தனமான நகைச்சுவையையும், நடிப்பென்று வந்துவிட்டால் ராட்சசியாக மாறி விடும் ஆச்சரியத்தையும் கீர்த்தி கச்சிதமாக நகலெடுத்துள்ளார்.  

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான். தோற்றப் பொருத்தம் இல்லாத குறையை தனது அபாரமான நடிப்பால் ஈடுகட்டியிருக்கிறார். சாவித்திரி மீது உருவாகும் காதலையும், பிறகு சாவித்திரிக்குக் கிடைக்கும் அபரிதமான புகழினால் தனக்கு ஏற்படும் மனக்கொந்தளிப்பையும் தாழ்வு மனப்பான்மையையும் கச்சிதமாக பிரதிபலித்திருக்கிறார். சாவித்திரியின் வாழ்க்கையில் ஜெமினி கணேசனின் பாத்திரம் முக்கியமானதுதான் என்றாலும், ஒரு பெண் மைய திரைப்படத்தில் நடிக்கத் தயங்காத துல்கர் சல்மானின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் வியக்கத்தக்கது.

சாவித்திரியின் ஆரம்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பெரியப்பா வேடத்தை ராஜேந்திர பிரசாத் மிக இயல்பாகக் கையாண்டுள்ளார். நாகேஸ்வர ராவாக நாக சைதன்யா, ரங்கா ராவாக மோகன்பாபு, சாவித்திரியின் இளம் வயது தோழியாக ஷாலினி பாண்டே, அலூரி சக்ரபாணியாக பிரகாஷ்ராஜ், பெரியம்மாவாக பானுப்பிரியா .. என்று பிரபல நடிகர்கள் பலர் சிறு பாத்திரங்களில் தோன்றி மறைகிறார்கள்.

இத்திரைப்படத்தின் தரவுகளுக்காகவும் அவற்றைக் காட்சிகளின் வழியாகக் கொண்டு வருவதற்காகவும் இயக்குநர் நாக் அஷ்வின் மிகவும் உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சாவித்திரியின் வாழ்க்கை வழியாக ஒரு காலக்கட்டத்திய தென்னிந்திய சினிமாவின் நகர்வுகளையும், முக்கியத் தருணங்களையும் நாம் அறிந்து கொள்ளவும் அதன் மூலம் மீள் நினைவுகளில் ஆழவும் முடிகிறது. சித்தார்த் சிவசாமியின் திரைக்கதை சில போதாமைகளுடன் இருந்தாலும் துல்லியமாகவும் சலிப்பு ஏற்படுத்தாத சுவாரசியத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன.

‘மதராசப்பட்டினத்தின்’ டிராம் வண்டி முதல் எண்பதுகளின் லூனா வரை பின்னணிகளில் தோன்றும் பொருள்கள் காட்சிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. விஜயா – வாகினி ஸ்டுடியோவின் உட்புறக்காட்சிகள் முதற்கொண்டு கலை இயக்குநரின் அசாத்தியமான உழைப்பு பல காட்சிகளில் வெளிப்படுகிறது.

நடனமங்கை, நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல பரிமாணங்களில் இயங்கிய சாவித்திரியின் வாழ்க்கை வேகமாக சுழலும் ராட்டினத்திற்கு ஒப்பானது. மூன்று மணி நேரத்திற்குள் இவற்றை அடக்குவது ஒரு சவால் என்றாலும், முக்கியமான சம்பவங்களை ஒரு கச்சிதமான ஒத்திசைவுடன் நகர்த்திக் கொண்டு வருவதில் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் வெற்றி பெற்றிருக்கிறார். ஒளிப்பதிவாளர் டேனி சான்செஸ்-லோபஸ்ஸின் கேமரா வழியாகக் கடந்த காலம் உயிர்பெற்றிருக்கிறது. படமாக்கப்படும் காட்சிகள் மட்டும் கருப்பு  வெள்ளையில் காட்டப்படுவதின் மூலம் கால மயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குடிப்பழக்கத்தினால் சாவித்திரியின் வீழ்ச்சி துவங்குவதைத் தலைகீழான காட்சி ஒன்றின் வழியாக உணர்த்தியிருப்பது அருமை.

“பெண் அழுதா பாருக்கே தெரியும். ஆண் அழுதா Bar-க்கு மட்டும்தான் தெரியும்”, “வேண்டாத கல்யாணம் தேடி வந்தது, வேண்டி நிற்கிற காதல் வரமாட்டேங்குது” என்பது போன்ற, சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்ட திறமையான வசனங்கள் கவர்கின்றன. (தமிழில் மதன் கார்க்கி). மிக்கி மேயரின் அற்புதமான பின்னணி இசை, கடந்த காலப் பின்புலத்துடன் பொருந்தி நிற்கிறது. மெல்லிசைப் பாடல்கள் இனிமையாக உள்ளன.  

புகழின் உச்சத்திற்குச் சென்று அதல பாதாளத்தில் வீழ்ந்த பல பிரபலங்களின் வாழ்வில் உள்ள ஒற்றுமைகள் சாவித்திரியின் வாழ்க்கையிலும் உள்ளன. ஒரு திறமையான நடிகையாக அறியப்பட்டிருந்தாலும் ஒரு சராசரியான இந்தியப் பெண்ணின் குணாதிசயம் அவருக்குள் நிரம்பியிருப்பதை பல காட்சிகளில் உணர முடிகிறது. ஜெமினி கணேசனின் முதல் மனைவியான அலமேலுவைக் காணும் போதெல்லாம் அச்சம் கொள்வதிலிருந்து ஒரு சிக்கலான சூழலில் அவரிடமே தஞ்சம் அடைவது வரை ஒரு நாடகத்தில் காணும் காட்சிகளும் திருப்பங்களும் அசலாகவே அவருடைய வாழ்வில் நிகழ்ந்தன.

சிறுவயதிலேயே தன் தந்தையைப் பிரிந்த சாவித்திரி, அது சார்ந்த அன்பின் தேடலைத் தன் இளமைப்பருவம் முழுக்கக் கொண்டிருந்தார். இந்தத் தேடல் ஜெமினி கணேசனிடம் சென்று முடிந்தது. துல்கர் சல்மான், கீர்த்தியை உப்பு மூட்டை சுமந்து செல்லும் காட்சியில் இந்த உணர்வு துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே திருமணம் ஆனவரைத் தன் துணையாக ஏற்க சாவித்திரி தயங்காததற்கு இதுவே காரணம். இந்த உறவில் ஏற்பட்ட விரிசல்தான் சாவித்திரியின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. இரண்டு புகழ் பெற்ற ஆளுமைகளுக்குள் நிகழும் அகங்கார மோதல் தொடர்பான காட்சிகள் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நடிகர்களின் வள்ளல்தன்மைக்குப் பெரும்பாலும் எம்.ஜி,ஆரே உதாரணம் காட்டப்படுவார். ஏறத்தாழ அதற்கு ஈடான ஈகைக் குணத்தை சாவித்திரி இளம் வயது முதலே கொண்டிருந்தது இதில் சரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தன் செல்வாக்கின் புகழ் எப்போதும் மங்காத பின்புலத்தில் எம்.ஜி.ஆர் வாரி வழங்கியதில் கூட ஆச்சரியமில்லை. ஆனால் தன் வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில், நிதி நெருக்கடி சார்ந்த சிக்கல்களின் இடையே கூட தன் ஈகையை சாவித்திரி விடாமலிருந்தது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

சாவித்திரியின் கடந்த காலப் பாதையைப் பின்பற்றிச் செல்லும் பத்திரிகையாளர்களான சமந்தா மற்றும் விஜய் தேவரகொன்டா தொடர்பான காட்சிகள் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளன. சமந்தாவிடம் தன் காதலைச் சொல்ல தயங்கி நிற்கும் விஜய், ஜெமினி கணேசனைப் பின்பற்றி தன் காதலை அறிவிக்கும் இடம் ரகளையானது. இதைப் போலவே சாவித்திரியின் அபாரமான காதல் உணர்வைப் பின்பற்றி தன் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானத்தை சமந்தா எடுக்கும் இடம் அருமை. ‘திக்குவாய்’ குறைபாடுள்ளவராக நடித்திருக்கும் சமந்தா, சாவித்திரியின் படுக்கையறையில் நின்று கதறும் இறுதிக் காட்சி நெகிழ்வாக அமைந்துள்ளது. 

பத்திரிகையாளர்கள் தொடர்பான காட்சிகள் சுவாரசியமானவைதான் என்றாலும் அவற்றைச் சுருக்கி, மைய திரைக்கதைக்கு இன்னமும் இடம் தந்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை.

நடிகையர் திலகம் ஓர் அபாரமான முயற்சி என்பதில் சந்தேகமோ, மாற்றுக்கருத்தோ இல்லை. ஆனால் இதில் சில குறைகளும் இல்லாமில்லை. தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் இருமொழிப்படம் என்று இது அறியப்பட்டிருந்தாலும் அடிப்படையில் தெலுங்குத் திரைப்படமே. திணிக்கப்பட்ட தமிழ் வசனங்கள் இதுதொடர்பான நெருடலைத் தருகின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சாவித்திரி கொடி கட்டிப் பறந்தார் என்றாலும் தெலுங்குத் திரையுலகம் சித்தரிக்கப்பட்ட அளவிற்குத் தமிழ் திரையுலகக் காட்சிகள் அமையவில்லை. மிகக் குறிப்பாக, சாவித்திரி தன் சொந்த சகோதரனாகவே கருதிய சிவாஜி கணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் போகிற போக்கில் ஓரமாகக் காட்டப்பட்டிருப்பது ஒருவகை அநீதி. சாவித்திரியின் தமிழ்ப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருந்த ‘நவராத்திரி’ திரைப்படம் பற்றி ஒரு காட்சி கூட இல்லை.

காதல் மன்னனாக அறியப்பட்டிருந்த ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் பல பெண்கள் வந்திருந்தாலும், சாவித்திரியின் மீது மட்டும்தான் அவர் உண்மையான காதல் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பிற்பகுதியில் அவர் வில்லன் போலவே சித்தரிக்கப்பட்டிருப்பது நெருடல். இது போன்ற போதாமைகளையும் பிழைகளையும் படம் தாண்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

**

ஐம்பதுகளின் காலக்கட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்தத் திரைப்படம் ஓர் அருமையான மீள்உணர்வுக் கொண்டாட்டத்தைத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை. இதைப் போலவே இளம் தலைமுறையினருக்குக் கடந்தகாலத் திரையாளுமையைப் பற்றிய சிறந்த அறிமுகமாக விளங்கும். இரண்டு தரப்பினருமே சாவித்திரியின் சிறந்த சினிமாக்களைத் தேடிப் பார்க்கும் தூண்டுதலை ‘நடிகையர் திலகம்’ ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் அதிகம்.

சாவித்திரி என்கிற ஓர் உன்னதமான கலையாளுமைக்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த அஞ்சலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com