சிட்டுக்குருவி அழிவுக்கு செல்லிடப்பேசிகள் காரணமா! 2.0-வில் ஷங்கர் சொன்னது என்ன?

ஜென்டில்மேன் முதல், 2.0 படம் வரை ஏதாவது சமூக பிரச்னைகளை எடுத்துக் கொண்டு அவர் தனது படத்தில் அதுகுறித்து விமர்சனம் செய்திருப்பார். அதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வையும் முன்வைத்திருப்பார்.
சிட்டுக்குருவி அழிவுக்கு செல்லிடப்பேசிகள் காரணமா! 2.0-வில் ஷங்கர் சொன்னது என்ன?

நடிகரும், எதிர்கால அரசியல் தலைவருமான ரஜினிகாந்தின் நடிப்பிலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்திலும் வெளியாகியுள்ள திரைப்படம் 2.0. எந்திரனின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதுபோல், இப்போ வரும், வந்துகொண்டே இருக்கிறது என்ற சில ஆண்டுகளாக கூறப்பட்டுவந்த படம் ஒருவழியாக 29-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான படம் என்பதுடன், ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் முதல்முறையாக நடித்த தமிழ்படம், ஆஸ்கார் தமிழர் ஏ.ஆர்.ரகுமான், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை இயக்குநர் முத்துராஜ் என மிகப் பெரிய கூட்டணியுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த 2.0.

படத்தின் தலைப்புக்கு கீழே, இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். அதற்கேற்ப படத்தின் கதை அமைந்துள்ளது. முந்தைய எந்திரன் படம் போல், முழுக்க முழுக்க ரோபோ சாகசங்களாக இருக்குமோ என்று படத்துக்குச் சென்றால் நமக்கு ஆச்சரியம்தான் மிஞ்சும். ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் என்பதை தாண்டி முதலில் நமது மனதை ஆக்கிரமிப்பது அவரின் சமூக அக்கறை கொண்ட கருத்துகள்தான். அவரது படங்கள் சமூகத்தில் பெருவாரியாக விவாதிக்கப்படும். அதுதான் ஒரு திரைப்படமும் செய்ய வேண்டிய ஒன்று.

அவரது முதல் படமான ஜென்டில்மேன் முதல், 2.0 படம் வரை ஏதாவது சமூக பிரச்னைகளை எடுத்துக் கொண்டு அவர் தனது படத்தில் அதுகுறித்து விமர்சனம் செய்திருப்பார். அதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வையும் முன்வைத்திருப்பார். இந்தப் படத்தில் அவர் முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, செல்லிடப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவி இனங்கள் அழிவை சந்திக்கின்றன என்று பறவை ஆர்வலர்கள் வாதம் முன்வைத்தனர். ஆனால், செல்லிடப்பேசி கோபுரங்களால் சிட்டுக் குருவி இனங்களுக்கு பாதிப்பு இல்லை என்று மற்றொரு தரப்பில் கூறப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

உண்மையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகாலை பொழுது விடியும்போது பறவைகளின் சப்தங்களைக் கேட்டே கண்விழித்திருப்போம். ஆனால், இப்போது அந்த சப்தங்களை இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில்கூட அதிகம் கேட்க முடிவதில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. அதற்கு செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே முழு காரணமாக இருக்கும் என்று கூறிவிட முடியாது என்கிறபோதும், அவையும் காரணமாக இருக்கலாம் என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எந்தவொரு தொழில்நுட்பமும் நமக்கு நன்மையை முதலில் தரும் என்கிறபோதும், அதில் சில தீமைகளும் அடங்கியே இருக்கும். செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், அலுவலகம், வீடுகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சு வெளியிடப்பட வேண்டும் என்று அரசே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அவை சில நிறுவனங்களால் மீறப்படுவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சரி, இதற்கும், 2.0 படத்துக்கும் என்ன சம்பந்தம்.
2.0 படத்தில் அக்ஷய் குமார் பறவை ஆர்வலாக நடித்திருக்கிறார். பறவைகளை பாதுாக்க அவர் எடுக்கும் முடிவில் தான் படம் தொடங்குகிறது.

தற்கொலை செய்துகொள்ளும் அக்ஷய், அதன்பிறகு அமானுஷ்ய சக்தியாக அவதாரம் எடுக்கிறார். பறவை இனங்களை பாதுகாக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார் என்றே கூறலாம். ஆனால், அதனால் பெருவாரியான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதால், அரசு உயர்மட்ட ஆலோசனைக் குழுவை கூட்டி விவாதிக்கிறது. அதேநேரத்தில், பல பிரபலங்கள் கொல்லப்படுவதால், விஞ்ஞானி வசீகரனின் (ரஜினி) ஆலோசனையை ஏற்று, சிட்டி ரோபோவை களமிறக்குகிறது அரசு. அப்போது, அந்த அமானுஷ்யத்தை கட்டுப்படுத்தி விட முடிகிற போதிலும், மீண்டும் உருவெடுத்து விடுகிறது. அதைத்தொடர்ந்து, 2.0 ரோபோ களமிறக்கப்பட யார் ஜெயித்தார்கள் என்பதே கதை.

மக்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளை கவர்ந்திழுத்து அக்ஷய் குமார்  மிகப் பெரிய பறவை உருவமாக மாறுவது. பிரபல செல்லிடப்பேசி விற்பனையாளரையும், முக்கிய நபரையும் செல்லிடப்பேசியாலே கொலை செய்வது என பல காட்சிகளில் விஎஃப்எக்ஸ் ஜாலம் நிரம்பியிருக்கிறது. படத்தின் முதல்பாதியில் இயக்குநர் ஷங்கரின் கற்பனை வளமும், இயக்கமும் ரசிகர்களை திரையில் கட்டிப்போடுகிறது. முப்பரிமாணத்தில் (3d) வெளிவந்திருக்கும் படம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதுவித அனுபவத்தை இந்தப் படம் தரும்.

கபாலி, காலா என்ற அரசியல் படங்களில் நடித்துவந்த ரஜினி, 2.0 மூலம் தனது ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். திரையில் ரஜினியின் அசாதாரண உழைப்பு புருவத்தை உயர்த்த வைக்கிறது. எமி ஜாக்சன் (நிலா ரோபோ) வசீகரனின் உதவியாளராக வந்து  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெயமோகனின் வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. நீரவ் ஷாவின் கேமரா கோணங்களும், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்துவிடுகிறது. பக்ஷசி ராஜனாக வரும் அக்ஷய் குமாரின் பிளாஷ் பேக் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கலங்கடித்துவிடும். அவர் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? என்பதையும், அதற்கான காரணத்தையும் திரைக்கதையில் அழகாக இணைத்திருக்கிறார் ஷங்கர்.

விளையாட்டு அரங்கில் நடைபெறும் படத்தின் இறுதிக்காட்சியில் விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் உழைப்பு மிளிர்கிறது. பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும், பேட் மேன், ஸ்பைடர் மேன் போன்ற ஆங்கில படங்களைப் போல சாகச காட்சிகளை மட்டும் பதிவு செய்யாமல், பறவைகளையும் மற்ற உயிர்களைப் போல பாதுகாப்போம் என்ற கருத்தை பதிவு செய்ததற்காகவே இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com