காலத்தின் கட்டாயத் தேவை!

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை; காலத்தின் கட்டாயத் தேவை.
காலத்தின் கட்டாயத் தேவை!

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை; காலத்தின் கட்டாயத் தேவை.
பயங்கரவாதத்தை எவ்வாறு எல்லா அரசியல் கட்சியினரும், மதத்தவரும் ஒன்றுபட்டு எதிர்க்கிறோமோ அதே முறையில் கருப்புப் பணம் எனும் நிதி பயங்கரவாதத்தையும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.
பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, ஒரு வகையில் நாட்டைப் பாழ்படுத்திவரும் ஊழலுக்கும் ஊற்றாக இருக்கும் பண சக்திக்கு எதிரான போர்ப் பிரகடனம்தான்.
கருப்புப் பணம் என்பது இந்தியாவில் ஒரு போட்டிப் பொருளாதாரத்தை நடத்தி வருகிறது என்பதை 1950 முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களும், நிதியமைச்சர்களும் கூறி வந்துள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, உணவுப் பொருட்களை பதுக்குவோரையும், கருப்புப் பணம் வைத்திருப்போரையும் தெருவில் நடப்பட்டுள்ள விளக்குக் கம்பங்களில் தூக்கிலிட வேண்டும் என்று பேசியதையும் அறிவோம்.
ஆர். வெங்கட்ராமன் நிதி அமைச்சராக இருந்தபோது கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை கைவிட்டு, அத்தகையோர் தாமாக முன்வந்து ​(V‌o‌l‌u‌n‌t​a‌r‌y ‌d‌i‌s​c‌l‌o‌s‌u‌r‌e)​​ தங்களிடமுள்ள பணத்தை அரசிடம் ஒப்படைக்கலாம் என்று கூறினார்.
அவ்வாறு செலுத்தப்படும் பணம் எவ்வாறு அவர்களுக்கு வந்தது என்று ​(S‌o‌u‌r​c‌e)​   கூற வேண்டியதில்லை எனவும், அதன் மீது வரி விதிக்கப்படாது என்றும் அறிவித்தார். அவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும், சில ஆயிரம் கோடி மட்டுமே வசூலாயிற்று.
பிரதமர் நேரு ஆட்சியின்போதே மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறியபின், அரசு திட்டங்களுக்காக செலவிட்ட பணமெல்லாம் யாருக்குப் போய் சேர்ந்தது என்பதை விசாரிக்க ஒரு குழுவை நியமித்தார். விசாரணை, செல்வம் சிலரிடம் சட்டப்படியே குவிந்துள்ளது; இதைத் தடுக்க புதிய முயற்சிகள் தேவை என்பதோடு முடிந்தது.
இந்திரா காந்தியார் ஆட்சியின்போது, வரி செலுத்தாத பணத்தின் மீது அதிரடிச் சோதனைகள், வழக்குகள் என பரபரப்போடு பல செய்திகள் வெளிவந்தன. கருப்புப் பண வேட்டையில் துணை நிதி மந்திரியாக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேசன் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.
அப்போதுதான், மும்பையின் தாதாக்கள் கதை, நாட்டின் பல பகுதிகளில் பேட்டை ராஜாக்கள் கதை செய்தியாக வந்தது. ஆனால், எந்தப் பெரும் புள்ளியும் அந்த வேட்டையில் சிக்கவே இல்லை. அதன்பின்னர், சி. சுப்பிரமணியம் நிதி அமைச்சராக இருந்தபோது, நாணய மதிப்பு குறைப்பு திட்டத்தை வெளியிட்டார். அதை எதிர்த்து கடும் விமர்சனம் எழுந்தது.
நெருக்கடிநிலை முடிந்தவுடன் நடந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் தலைமையில், காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது. அவரும், இன்றைய பிரதமர் அறிவித்திருப்பதுபோல், உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
தங்க நகைகளையும் 24 கேரட் பயன்படுத்தாமல், 22 அல்லது 20 கேரட் அளவில் நகைகளை செய்யலாம் என்றும், அதன் மூலம் தங்கம் இறக்குமதி செய்வதைக் குறைக்கலாம் என்றும் யோசனை கூறினார். இருந்தாலும் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், இந்தியாவில் சட்டப்படி புழங்கும் பணம் ​(‌l‌e‌g​a‌l ‌t‌e‌n‌d‌e‌r)​​ அளவைவிட அதிக அளவிலான பணம் அரசு வங்கிகளின் மூலம் அல்லாமல் வேறு வழிகளில் புழங்கி வருகிறது என்று வேதனையோடு குறிப்பிட்டார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர் அமர்த்தியா சென்னும், இந்தியக் குடிமகனாக ஆகிவிட்ட டிரெஸ்சும்  ​(D‌r‌e‌z‌e)​  எழுதி வெளியிட்டுள்ள T‌h‌e U‌n​c‌e‌r‌t​a‌i‌n G‌l‌o‌r‌y'​   (நிச்சயமற்ற ஒளிமயம்) என்ற புத்தகத்தில், பல ஆண்டுகளாகவே இந்திய அரசால் விதிக்கப்படும் முக்கிய வரிகள், அறிவித்தபடி வசூலிக்கப்படுவதே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசு விதிக்கும் வருமான வரியை, மாத ஊதியம் பெறுவோர் தவறாமல் செலுத்திவிடுகிறார்கள். சரியாகச் சொல்வது என்றால், அவர்களாக வரி செலுத்துவது இல்லை. அவர்கள் ஊதியம் பெறுகிற இடத்தில் வருமானவரி பிடித்துக் கொள்ளப்படுகிறது. இது, பெரும் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் பலருக்கும் பொருந்தும். இந்தப் பகுதியினர்தான் வருமானவரியை தவறாமல் கட்டுகிறவர்கள் என்று கூறலாம்.
விதிக்கப்பட்ட வருமான வரியிலிருந்து தாங்களாகவே கணக்குக் காட்டி வருமான வரி கட்டுகிற துறையினரும் நம் நாட்டில் உள்ளனர். இங்கேதான் குடும்பக் கணக்கு, வணிகக் கணக்கு, அரசுக்கு காட்டுவதற்கான கணக்கு என தயாரித்துத்தரும் வல்லுநர்கள், பெரும் வணிகர்கள், திரைத் துறையினர், சுயநிதி கல்வி நிறுவனங்கள், கிரிக்கெட் போட்டித் துறை, தனியார் மருத்துவமனைகள், மனைவணிகம் செய்வோர் என பல பகுதியினர் உள்ளனர்.
அமர்த்தியா சென் குறிப்பிட்டிருப்பதுபோல, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் விதிக்கப்பட்ட வரிகள் 98% வசூலாகிவிடுகிறது.
இந்தியாவில் பெரு நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்வது அதிகமாகவும், வரி கட்டுவது குறைவாகவும் இருக்கிறது. வாராக்கடன் தொகை மாநில அரசுகளின் வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது. பிரதமரின் அறிவிப்பு, இவை அனைத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்; பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில் உயர் மதிப்புள்ள இந்திய நாணய நோட்டுகள் அச்சிடப்பட்டு, எல்லைக்குள் ஊடுருவி இந்தியச் சந்தையில் புழங்கவிடப்பட்டு வருகிறது. இதில், நல்ல நோட்டு, கள்ள நோட்டு என கண்டறிவது சாதாரண மக்களுக்கு முடியாத காரியமாக இருக்கிறது.
மோசடிப் பேர்வழிகள் பரவலாக இதை விநியோகித்து நம் நாட்டின் பொருளாதாரத்தில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதை பாகிஸ்தான் அரசு செய்கிறதா? அல்லது அங்கு தளம் அமைத்து பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடுகிற பயங்கரவாத குழுக்களா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.
பயங்கரவாதிகள், தாங்களாகவே விமானம், கப்பல், ஆயுதத் தளவாடங்களை செய்து கொள்ள முடியாது. தொழிற்சாலை நடத்த முடியாது. பிறகு எப்படி அவர்களிடம் டாங்கிகளும், பீரங்கிகளும் வந்தன என்றால், அதற்கு இந்த கள்ள நோட்டுதான் காரணம். இதைத் தடுப்பதில் பிரதமரின் அதிரடி அறிவிப்பு பலனைத் தரக்கூடும்.
இந்தியா இறக்குமதி செய்கிற துறைகளில், பெட்ரோலிய பொருள்கள் அளவில் முதலிடம் வகிக்கின்றன. இரண்டாவது இடத்தில் தங்கம் ஏறி இறங்கி நிற்கிறது.
விவசாய நாடான இந்தியா, சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. இதுதான் டாலர் கணக்கில் நாம் செலுத்த வேண்டிய பணமாக இருக்கிறது.
நம் நாட்டில் பூமிக்கடியிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கும் டாலர் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், இந்திய நாடு பல துறைகளில் முன்னேறிய பிறகும், டாலர் கணக்கில் வரவு - செலவு முறை வைத்திருப்பதால், பெரும் இழப்பை அனுபவிக்க நேரிடுகிறது.
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சியின்போது எண்ணெய்வளத் துறைக்கு அமைச்சர்களாக இருந்த மணிசங்கர் அய்யர், முரளி தேவ்ரா ஆகியோர் இந்தியா எண்ணெய் வாங்கும்போது விலையை நிர்ணயிக்கிற அமெரிக்காவும், எண்ணெய் வள நாடுகளும், மற்ற நாடுகளுக்கு நிர்ணயிக்கிற விலையைவிட, இந்தியாவுக்கு அதிகப்படுத்தி விற்றுவருகிறார்கள், இதனால் சில லட்சம் கோடிகளை இழந்து வருகிறோம் என்று கூறியபோது, நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும், இதை பெரிதுபடுத்தாதீர்கள்; உறவு பாதிக்கப்படலாம் எனக் கூறியதாக சிலர் தெரிவிக்கிறார்கள்.
தற்போது, அமெரிக்காவில் டிரம்ப் குடியரசுத் தலைவராக வந்திருப்பதால், மற்ற நாடுகளுக்கு விற்கப்படுகிற விலையிலேயே இந்தியாவுக்கும் விற்க வேண்டுமென இந்தியா கூறலாம்.
அறிவிப்பு வந்த அன்று இரவு மட்டும் சென்னையின் தங்க நகைக் கடைகளில் ஏழு மடங்கு விற்பனை நடந்திருக்கிறது. தங்கம் ஒரு பவுன் ஒரே நாளில் ரூ.1,456 விலை உயர்வு பெற்றிருக்கிறது. விலை உயர்வைப் பொருட்படுத்தாமல், 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து இருப்பதும், கடைக்காரர்கள் பெற்றுக் கொண்டிருப்பதும் நடந்துள்ளது.
ஆனால், பேருந்துகளில், உணவு விடுதிகளில், காய்கறிக் கடையில் ரூ.500, ரூ.1,000 ஏற்கப்படவில்லை. இவற்றை தவிர்க்க சில ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்.
வெள்ளையர்கள் காலத்தில் புழங்கி வந்த 1 ரூபாய்க்கு 16 அணா; 64 காலணா; 192 பைசா என்றிருந்த முறை மாற்றப்பட்டு, ரூபாய்க்கு 100 பைசா என மறு மதிப்பிட்டு புதிய நாணயங்கள் வெளியிட்ட போதும், பழைய காசை புதிய காசாக மாற்ற சில சங்கடங்கள் இருந்தன.
இப்போதைய அறிவிப்பு சில்லறை வியாபாரிகளை பாதிக்கும். வணிகக்கூட்டாண்மை நிறுவனங்களை பாதிக்காது. இந்த அறிவிப்பு வந்தபோதே, டிரம்ப் அமெரிக்காவில் அதிபராக வெற்றி பெற்றார் என்ற செய்தியும் சேர்ந்து வந்ததால், சில குழப்பங்களும் வந்துள்ளன.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் அதிகமாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் செய்தி வந்துள்ளது. எப்படி சம்பாதித்தார்களோ தெரியவில்லை. ஏன் தீயிட்டு பொசுக்கினார்கள் என்பதும் புரியவில்லை.
அத்தகைய மனிதர்கள் தங்களால் சட்டப்படி மாற்றிக் கொள்ள முடியாத பணத்தை கிராமப்புற ஏழைகளுக்கு வங்கிக் கணக்கைத் துவக்கி அதில் போடச் செய்திருந்தால், நாட்டுக்கு ஓரளவு நன்மை கிடைத்திருக்கும்.
ஆக மொத்தத்தில் பிரதமரின் இந்த நடவடிக்கை நாட்டின் நலனுக்கு அவசியம் என்பதால், இடைக்கால சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு வெற்றி பெற விழைவது நல்லது.

கட்டுரையாளர்:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com