அறிவியல் தமிழுக்கு வித்திட்டவர்

அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா மறைந்த செய்தி தமிழ்கூறு நல்லுலகைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Updated on
2 min read

அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா மறைந்த செய்தி தமிழ்கூறு நல்லுலகைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1957-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நானும், அவரும் ஒரு சாலை மாணவர்களாகப் பயின்றோம். எனக்கு அவர் இளைய வகுப்பில் படித்தார். ஆனாலும், இருவரும் மிக நெருங்கிய நட்புறவு பூண்டவர்களாகத் திகழ்ந்தோம். எங்கள் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் அன்பைப் பெற்ற மாணவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருந்த திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் எங்கள் பேராசிரியர் பிற்காலத்தில் "யுனெஸ்கோ' நிறுவனத்தினால் தமிழில் "யுனெஸ்கோ கூரியர்' என்னும் இதழ் வெளியிடப்பட்டபோது அதற்கு ஆசிரியராக மணவை முஸ்தபாவை பரிந்துரை செய்தார்.
தனது பேராசிரியர் இட்ட கட்டளையை ஏற்று 35 ஆண்டு காலமாக அந்த இதழின் ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய பெருமை மணவையாருக்கே உரியது.
தென்மொழிகள் புத்தக அறக்கட்டளையின் நிருவாக இயக்குநராக 40 ஆண்டு காலம் அவர் பணியாற்றி சிறந்த நூல்கள் வெளியாக வழி வகுத்தார்.
புகழ்பெற்ற ஆங்கில கலைக் களஞ்சியமான "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா'வை தமிழில் வெளியிட அந்த நிறுவனமும், "ஆனந்த விகடன்' இதழும் முடிவு செய்தபோது அதன் தலைமை பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்ட பெருமையும் மணவையாருக்கு உண்டு.
உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பேரவையின் இந்திய கிளையின் இணைச் செயலாளராகவும், பாரதிய ஞானபீடம் பரிசுத் தேர்வுக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராகவும், இன்னும் பல்வேறு அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை ஏற்று அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.
அறிவியல் சொற்களைத் தூயத் தமிழில் மொழிபெயர்க்க முடியும் என்பதை நிறுவும் வகையில் "கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி', "கணினி களஞ்சிய பேரகராதி', "மருத்துவக் களஞ்சிய பேரகராதி', "அறிவியல் தொழில்நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி', "மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்' போன்றவற்றைத் தனியொரு மனிதராக இருந்து உருவாக்கினார்.
அறிவியல் பாட நூல்கள் எழுதப்படுவதற்குத் தேவையான நல்ல தமிழ்ச் சொற்களை மேற்கண்ட அகராதிகள் மற்றும் களஞ்சியங்கள் மூலம் உருவாக்கிக் கொடுத்து அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டப் பெருமை அவரைச் சாரும்.
ஆங்கில உரைநடையின் தந்தை எனப் போற்றப்படும் சாமுவேல் ஜான்சன் தனியொரு மனிதராகச் செயல்பட்டு ஆங்கில மொழியின் முதல் அகராதியைத் தொகுத்தார். அவரே ஒரு நிறுவனமாகத் திகழ்ந்தார் எனப் பாராட்டினார்கள். அதே பாராட்டு நண்பர் மணவையாருக்கும் உரியதாகும்.
மணவை முஸ்தபா 31 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து 7-க்கும் மேற்பட்ட நூற்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். மலையாளத்திலிருந்து 3 நூற்களை மொழிபெயர்த்துள்ளார். 3 தொகுப்பு நூற்களையும் வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழக அரசு வழங்கிய 5 விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் மணவையார் மட்டுமே.
தமிழ் செம்மொழியே என்பதை நிறுவிய பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகளார் ஆகியோரின் விருப்பம் நிறைவேற இடைவிடாது போராடினார். இந்திய அரசு செம்மொழியாகத் தமிழை ஏற்றபோது 1,000 ஆண்டுகள் பழமையான மொழி என குறிப்பிட்டதைக் கண்டு கொதித்தெழுந்தார். அதற்கு எதிராகப் போராடினார்.
பல்வேறு நாடுகளாலும், அமைப்பு
களாலும் பாராட்டப் பெற்று ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும், பரிசுகளையும் இவர் பெற்றிருக்கிறார். வாழுங் காலத்திலேயே அரசு
களாலும், அமைப்புகளாலும், மக்களாலும் பாராட்டப்பட்ட தமிழறிஞர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் சொற்பொழிவாற்ற இவர் சென்றிருந்த போது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுத்தபடுக்கையானார். ஆனாலும், தமிழின் மீது இவர் கொண்ட கரைகாணா காதல் கொஞ்சமும் குறையவில்லை. தொடர்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற முடியவில்லையே என்பதுதான் அவருடைய ஏக்கமாக இருந்தது.
அவருடைய 81-ஆவது பிறந்தநாள் விழாவினை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-06-2016 அன்று மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். தமிழறிஞர்கள் பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
அவர் நிறுவியுள்ள அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு "அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருதுகள்' அப்போது வழங்கப்பட்டன. அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்பாகவே அவர் மறைந்திருக்கிறார்.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு காலகாலத்திற்கும் நிலைத்து நின்று தமிழ்த்தாயின் மீது படிந்த வசையைப் போக்கும் என்பதில் ஐயமில்லை.
"இஸ்லாம் எங்கள் மார்க்கம் இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்பதைத் தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி நேற்று மறைந்திருக்கும் அவரது புகழ் என்றும் அழியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com