தமிழகம் சொல்லும் - சொல்லப்போகும் செய்தி

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் தகவுகளையும் ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வைப்பதாக சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் சொல்லும் - சொல்லப்போகும் செய்தி

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் தகவுகளையும் ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வைப்பதாக சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களின் பார்வையும் தேடலும் ’பெரும்பான்மைச் சமூகத்தோடு உரிமைகள், சமத்துவம் என்ற உணர்வு நிலைக் கருத்துகளுக்காக முரணிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பதைவிட, சில விட்டுக்கொடுத்தலோடு இயைந்து வாழ்வது நடைமுறையில் பயனளிக்கும்' என்கிற கருத்தை முன்மொழிகின்றன.
அப்படியொரு எண்ணம் மெல்லப்படர்ந்து வருகிறது என்று முடிவுக்கு வருவது சமத்துவத்தையும் உரிமையையும் ’விட்டுக் கொடுக்கும்' இரண்டாந்தர மாந்தர்களை மகிமைப்படுத்துவதாக அமைந்திடுமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.
தவிரவும் ’இயைந்து வாழ்வது' என்ற சொற்றொடர் ’விட்டுக் கொடுத்தலுக்கு' எதிரானது என்பது மட்டுமல்ல, ஒத்திசைவான நாகரிக வாழ்க்கையை மறுதலிப்பதுமாகும். அதாவது, விட்டுக் கொடுத்தலை ஒரு வழிப்பாதையாக்கிக் கேட்டுபெறுவதல்ல ’இயைவு வாழ்க்கை'. சுருங்கச் சொன்னால் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் உடன்பாடு இல்லாத வாழ்க்கை இது.
’சமத்துவம் என்பது சம வாய்ப்பு என்பதாக மாற்றம் கொண்டு வருகிறது. ஜனநாயகம் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பின் பங்கேற்பு என்பதிலிருந்து சிறுபான்மையினரின் சம்மதத்தோடு பெரும்பான்மையினரின் ஆட்சி என வடிவம் கொள்கிறது. தேசியம் என்ற கருத்தாக்கம் உலகமயமாதல் எனும் நகர்வில் கரைந்து போகிறது. ஜனநாயகம், சமத்துவம், தேசியம் என்ற தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட மத்திய வர்க்கம் பொருளியல் வளர்ச்சி என்ற தனி மனித இலக்கின்பால் தன்னை இழந்து கொண்டிருக்கிறது' என்று சிலர் முன்வைக்கும் வாதத்திற்கு பெரிய பொருள் விளக்கம் தேவை இல்லை.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு, முலாயம் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான குழப்பங்களும், பிரிவுகளும், தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வரை சின்னம் பெறுவதில் ஏற்பட்ட ஐயப்பாடும், கூடவே மாயாவதியின் பொது நோக்கமற்ற அரசியல் அணுகுமுறையும் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியின் சிதைவும் காரணங்களாக அமைந்திட்டதை ’தேர்தல் அணுகுமுறை' என்ற வரையறைக்குள் வைக்காமல் ’தத்துவங்களின் தோல்வி' என்பதுபோல் சித்திரிக்கும் முயற்சியின் வெளிப்பாடே மேலே குறிப்பிட்ட கருத்து.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதற்கும் பெரும்பான்மையிசத்தை துணைக்கு அழைப்பது ஏற்புடைதல்ல. அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அவை மாகாணங்களைப் பொருத்து பூகோள ரீதியான வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
டிரம்பின் வெற்றிக்கு பிறகு அங்கு இந்துக்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மற்றும் பிற மத இன மக்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் ஒவ்வாமையை உறுதிப்படுத்தும் வெறியே தவிர அரவணைத்துச் செல்வதற்கான அணுகுமுறையல்ல.
ஒபாமா பதவியேற்றபோது நிகழ்த்திய உரையில் ’கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் ஆகியோரின் தேசங்களாக நாம் இருக்கிறோம். பூமியின் எந்த மூலையில் இருந்தும் உள்ள எல்லா மொழிகள் மற்றும் கலாசாரங்களால் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்' என்று குறிப்பிட்டார். தான் பதவியில் இருந்த காலம் வரை தன்னுடைய வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் இடைவெளியில்லாமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால், இன்று அதுவல்ல நிலைமை. உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் இந்த பூமிப் பரப்பை சிறு கிராமமாக மாற்றுவதற்கு மூல காரணமாக இருந்த அமெரிக்காவின் அதிபரே சிறுபான்மையினரையும் பிற நாட்டவரையும் துரத்தும் விதத்தில் நடந்து கொள்ளுவதுதான் மானுடப் பண்பா? இதை முன்னிறுத்தித்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாரா?
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியதற்கான காரணம், எண்ணிக்கையால் விளைந்த பெரும்பான்மையல்ல. தங்கள் நாட்டைப் பற்றிய சுய அக்கறை உணர்வு. அதிலும்கூட வாக்கு வித்தியாசம் இரண்டு விழுக்காடுதான்.
நம் நாட்டின் நிலைமை எவ்விதத்திலும் இவ்விரு நாடுகளின் நடப்புக்களோடு ஒப்பீடு செய்ய இயலாதது. இங்கு பேசப்படும் மதப் பெரும்பான்மை, சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பரஸ்பர நம்பிக்கையையோ, பாதுகாப்பு உணர்வையோ, சகிப்புத்தன்மையையோ போதிப்பதாக உணரப்படவில்லையே ஏன்?
’இந்து மதத்தின் சாபக்கேடு பலவீனம் அதன் உட்பிரிவான ஜாதி அமைப்பு முறை' என்பது உண்மைதான். ஆனால், அதைத் தகர்க்க முனைந்த மதத் தலைவர்களும், பெரும்பான்மையினரும் எண்ணிக்கையில் எத்தனை பேர்? ஜாதியை ஒழிக்க வழி என்ன என்று நாணயமாக சிந்திக்க முன்வராத ஒரு மதத்தை ஏற்றுக் கொள்ள நேரிட்டதால்தான் ’சாதிப் பிளவுகளை ஒருங்கிணைத்து மத அடையாளத்துக்கு உட்பட்டு கூட்டணி அமைத்தது பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்' என்று சிலர் பெருமிதம் கொள்ள நேரிட்டுள்ளது.
அப்படிப்பட்ட வெற்றி உண்மையான ஜனநாயகத்தை எதிரொலிக்காது. ’ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. அது சக மனிதர்களுக்கு உரிய மாண்பையும் மரியாதையையும் உறுதிபடுத்தும் செயலாகும்' என்றார் அம்பேத்கர்.
’ஜாதிப் பிளவுகளை ஒருங்கிணைப்பது ஜனநாயகமா அல்லது ஜாதியற்று ஒருங்கிணைவது ஜனநாயகமா?' என்பதுதான் முற்போக்காளர்களின் கேள்வி. மனித மாண்புகளையும் மரியாதையையும் புறம் தள்ளிவிட்டு எட்டப்படும் எந்த வெற்றியும் கொண்டாடத்தக்க ஜனநாயக நெறி அல்லவே.
அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ’சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம்' என்பதற்கும், ’சட்டத்திற்கு முன் சம பாதுகாப்பு' என்பதற்கும் ஆயிரம் விளக்கங்களை உச்சநீதிமன்றமும் நாடாளுமன்றமும் பல நேர்வுகளில் முறையே தீர்ப்புகளாகவும் சட்டங்களாகவும் அளித்துள்ளன. ’சம வாய்ப்பு' பன்னெடுங்காலமாக சிலருக்கு வாய்க்காது போனதால்தான் ’சலுகை'கள் அவசியப்பட்டன என்பதை உச்சநீதிமன்றமும், நாடாளுமன்றமும் பலமுறை உறுதி செய்து விட்டன.
கல்வி, தொழில், சமூக படிநிலை இவைகளில் சமவாய்ப்பு இல்லாமல் போனதற்கு இங்கு மதம்தான் காரணம் என்பதை ’பிறவியில் உயர்வு தாழ்வு கற்பித்து அதற்கு சம்மதமும் கடவுளின் அங்கீகாரமும் கொடுத்து மனிதர்களை தற்குறிகளாகவும், தரித்திரர்களாகவும் வைத்துள்ள ஒரு மதம் உலகத்திலேயே வேறு எங்காவது உண்டா?' என்று 1931-இல் பெரியார் கேள்வியாக முன்னிறுத்தினார்.
அதுமட்டுமல்ல, பிறவி ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை ஜனநாயகம் பூரணத்திற்கு வராது என்று அறிந்துதான் அதிலேயும் சமவாய்ப்பு வேண்டி அம்பேத்கரின் தனித் தொகுதி முறையைத் தளர்த்தி - தொகுதி ஒதுக்கீடு என்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது. அது சிறுபான்மையினருக்கும் தேவை என்ற குரல் வெளிப்படும்போது, ஜனநாயகத்திற்குப் புது விளக்கம் தர சிலர் முனைந்துள்ளனர் என்பது இடதுசாரிக் கொள்கைகளுக்கு விடப்படும் ஆபத்தாகவே முடியும்.
ஜனநாயகத்துக்கு விளக்கம் சொல்ல வந்த ரூஸ்வெல்ட், ’தங்கள் விருப்பங்களை புத்தி கூர்மையோடு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லாதவரை ஜனநாயகம் வெற்றி பெறாது. எனவே, ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு கல்வியேயாகும்' என்றார்.
ஜனநாயகம் இல்லாத, வேறுபாடுகள் நிறைந்த ஒரு சமூகமாக மட்டுமல்ல, அதை பெறுவதற்கான கல்வியும் நெடுங்காலமாய் மறுதலிக்கப்பட்ட சமூக அமைப்பாகவும் இருந்ததுதான் இந்திய சமூக அமைப்பு. ஆனால் ஜனநாயகம் ’பெரும்பான்மையை' அனுசரித்துப் போவது என்ற கருத்தின் பின்னணி என்ன? மிகச் சாதரணமானதுதான். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்; உரிமைகள் மறுக்கப்படும்; அதிகாரங்கள் பெரும்பான்மையினரிடம் இருக்கும்; ஆணவக் கொலைகள் இருக்கும். ஆனால் முரண்படாமல் அடங்கி நடந்தால் சுபிட்சமாக வாழலாம் என்பதுதான் அந்தக் கருத்தியலின் உட்கிடக்கையான செய்தி.
அம்பேத்கர் தனது பொருளியல் சிந்தனைகளுக்கு காரல்மார்க்சைக் காட்டிலும் புத்தரையே எடுத்துக் கொண்டதை உறுதி செய்யப் பல தரவுகளை பட்டியலிட்டார். அதேபோல, தன் ஆத்மார்த்த தத்துவமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதையும் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எடுத்தாளவில்லை, புத்தரிடமிருந்தே எடுத்ததாக பிரகடனம் செய்கின்றார்.
மார்க்ஸையும் புத்தரையும் ஆய்வு செய்த அம்பேத்கர், ’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று கோட்பாடுகளில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போனாலும் அது மனித குலத்திற்கு ஆபத்தாகி விடும்' என்று எச்சரித்தார்.
அவரது அந்த எச்சரிக்கையின் குரல் ’இன்று இந்தியர்கள் இரு விதமான தத்துவங்களால் ஆளப்படுகின்றார்கள். அவர்களின் அரசியல் தத்துவம், அரசியல் சட்ட முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தில் இருக்கின்றது. அவர்களின் சமூக தத்துவமோ, இவற்றை மறுதலிக்கும் மதத்தில் இருக்கிறது' என்று வெளிப்பட்டது.
அந்த எச்சரிக்கை இன்றும் இற்றுப்போய்விடவில்லை. அம்பேத்கர் அம்பலப்படுத்திய இந்த இரட்டைத் தன்மையின் இருள் வெளியில்தான் பெரும்பான்மையை அனுசரித்துப்போவது என்கிற பொருளியல் தத்துவம் தொலைந்து போகிறது.
’அடையாளமும் வன்முறையும்' என்ற தன் நூலில் நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணரான அமர்த்தியா சென் ’வெறும் கெட்ட எண்ணம் மட்டுமல்ல, வேறுபட்ட கொள்கை மாறுபாடும் கூட, நம்மை சுற்றி நிகழும் அழிவிற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் காரணமாக அமைகின்றன.... நம்பிக்கைகளின் பன்முகத் தன்மைகளையும் அதன் தேவைகளையும் காரணங்களையும் உதாசீனப்படுத்திப் புறந்தள்ளுவது நாம் வாழும் இவ்வுலகை இருளில் தள்ளுவதாகும்' என்று எச்சரித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
’அறிவும் மானமும் மனிதருக்கு அழகு' என்றார் பெரியார். இந்த இரண்டில் முன்னதை மட்டும் பெற்றுக் கொண்டால் பொருளியல் வளர்ச்சி சாத்தியப்படக்கூடும். பின்னதை விட்டுக் கொடுக்க நேர்ந்தால், அது அஃறினை அந்தஸ்தையே அனைவருக்கும் அளிக்கும்.
பெரியார், பூலே, அம்பேத்கர் ஆகியோரை ஏற்றுக் கொண்ட திராவிடத் தத்துவம் உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகளின் மேல் கண்டறியப்பட்டுள்ள - கட்டமைக்கப்பட்டுள்ள வறட்சியான ’வளர்ச்சித் தத்துவத்தை' ஏற்றுக் கொள்ள எப்போதும் வாய்ப்பில்லை. அதைத்தான் அண்ணாவும், அவருக்குப் பிறகு கருணாநிதியும் தங்களது அரசியல் பணிகளால் இங்கு உறுதி செய்திருக்கிறார்கள்.
இதுதான் தமிழகம் சொல்லும் - சொல்லப்போகும் செய்தி.

கட்டுரையாளர்:
கொள்கைபரப்புச் செயலாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com